அதிக பயணிகளை கையாளும் விமான நிறுவனமான இண்டிகோ தனது கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனத்தில் ஒன்று இண்டிகோ. தினமும் 2200 க்கும் அதிகமான விமானங்களை இயக்குகிறது. கடந்த ஆண்டில் 123 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை கையாண்டுள்ளது.
இந்த நிலையில், இண்டிகோ நிறுவனம் டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளது.
விமான எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான கட்டணங்களை மாற்றி அமைத்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
அக்டோபர் 6 நள்ளிரவு 00.01 மணி முதல் இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன.
அதன்படி உள்நாட்டு வழிகளில் பயணிக்கும் விமானங்களில்,
0 – 500 கி.மீ வரை ரூ.375
501 – 1,000 கி.மீ வரை ரூ.600
1,001 – 1,500 கி.மீ வரை ரூ.900
1,501 – 2,000 கி.மீ வரை ரூ.1,150
2,000 கி.மீ-க்கு மேல் ரூ.1,300 கூடுதலாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்கா நாடுகளுக்கு ரூ.6 ஆயிரமும், ஐரோப்பிய நாடுகளுக்கு ரூ.10 ஆயிரமும் டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது.
தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு, வடக்கு மற்றும் கிழக்கு ஆசியா நாடுகளுக்கு ரூ.5,500 வரை டிக்கெட் கட்டணம் அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் சூழல் காரணமாக கடந்த மாதத்தை விட எரிபொருள் விலை 14%-க்கும் மேல் அதிகரித்துள்ளது.
இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிலான உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.
