சமீபத்தில் வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் 450-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இந்த நிலச்சரிவில் மாயமான தனது பெற்றோரை தேடி இங்கிலாந்தில் இருந்து வந்த இளம் பெண் ஒருவர் தனது தாய், தந்தையை கடைசி வரை கண்டுபிடிக்காமல் சோகத்துடன் திரும்பியுள்ள சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
வயநாடு சூரமலை பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷா. இவர், இங்கிலாந்திலுள்ள ஷ்ரேயஸ்ஃபரி மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார். இவரது பெற்றோரான பாலச்சந்திரன்- அஜிதா சூரமலையில் வசிக்க ஒரே ஒரு சகோதரி நேஹா கோழிக்கோட்டில் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தார். நிலச்சரிவு நடந்த தினத்தில் கோழிக்கோட்டில் நேஹா இருந்ததால் உயிர் பிழைத்து கொண்டார்.
இந்த நிலையில், நிலச்சரிவு நடந்த தகவல் அறிந்து ஹர்சா கடும் அதிர்ச்சியடைந்தார். தனது பெற்றோர் நிலை என்னவாயிற்று என்பதை அறிந்து கொள்ள உடனடியாக விமானத்தில் தாய் நாடு புறப்பட்டார்.
கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி 10 நாள் விடுமுறையில் வயநாட்டுக்கு வந்த ஹர்சா தனது மாமா வீட்டில் தங்கியிருந்து பெற்றோரை தேடும் பணியில் ஈடுபட்டார். ஹர்சாவின் பெற்றோர் வசித்த வீடு அடையாளம் தெரியாத அளவுக்கு இடிந்து போய் கிடந்தது. ஆற்றுப்படுகை, இடிபாடுகளிடையே ஹர்சாவும் அவரது சகோதரியும் தேடியும் எந்த பலனும் கிடைக்கவில்லை.
கடைசியாக ஒரு முறை தனது பெற்றோரின் முகத்தை காண கூட ஹர்சாவுக்கு ஆண்டவன் விதியை எழுதி வைத்திருக்கவில்லை. ஏனென்றால் அவரின் பெற்றோரின் உடல் கூட அவரது கைக்கு கிடைக்கவில்லை.
இந்த நிலச்சரிவில் பெற்றோரை மட்டும் ஹர்ஷா இழக்கவில்லை. தனது பெரியப்பா, சித்தப்பா குடும்பத்தினர் என மொத்தம் நெருங்கிய உறவுகள் 9 பேரை ஹர்சா இழந்துள்ளார்.
தற்போது, ஹர்சாவும் நேஹாவும் மட்டுமே இந்த நிலச்சரிவில் எஞ்சியுள்ளனர். அதோடு, இடிந்து போன வீட்டை கட்டும் பொறுப்பும் தனது தங்கையை பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் ஹர்சாவுக்கு உருவாகியுள்ளது.
ஹர்சா கடும் வேதனையில் உழன்றாலும் 10 நாட்களுக்கு மேல் விடுப்பு கிடைக்கவில்லை என்பதால் மீண்டும் இங்கிலாந்து புறப்பட்டு சென்று விட்டார். பெற்றோரையும் நெருங்கிய உறவுகளையும் இழந்து நிற்கும் ஹர்சாவுக்கு ஆறுதல் கூறி தேற்ற முடியாமல் சூரமலையில் உயிரோடு எஞ்சியிருந்தவர்கள் கலங்கிய கண்களோடு அவரை வழியனுப்பி வைத்தனர் … காலம்தான் எவ்வளவு கொடுமையானது.
எம்.குமரேசன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வைப் மோடில் இளைஞர்கள்… வேளச்சேரியில் களைகட்டிய ஹேப்பி ஸ்ட்ரீட்!
டிரஸ் சரியில்லை… ஷாருக்கான் படத்துக்கு நோ சொன்ன பிரபல பாலிவுட் நடிகை!