முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், இன்று (மே 28) தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் தற்போது டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்தை நேரில் சந்தித்து முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இவருடன் அவரது மகன் ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட ஆதரவாளர்களும் தவெகவில் இணைந்துள்ளனர்.
கடந்த 2016-2021 அதிமுக ஆட்சியின் போது சுற்றுலாத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர் வெல்லமண்டி நடராஜன். அதிமுகவிலிருந்து ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்பட்டபோது அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டார். பின்னர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, வெல்லமண்டி நடராஜன் மீண்டும் அதிமுகவுக்குத் திரும்பினார். தற்போதைய அரசியல் சூழலில் அவர் தவெகவுக்கு மாறியுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வந்தது. இதையடுத்து நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ஏற்கெனவே தவெகவில் இணைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து சி.வி. சண்முகமும் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகும் நிலையில், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தவெகவில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
