மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். Former Minister RP Udayakumar arrested
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட வே.சத்திரப்பட்டி அருகே உள்ள கன்மாயில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த வழக்கில் அதேபகுதியைச் சேர்ந்த பிரபாகரனை போலீசார் தேடி வந்தனர். நேற்று இரவு பிரபாகரன் வீட்டுக்கு சென்ற போது அங்கு அவர் இல்லாததால் அவரது தந்தையை போலீசார் அழைத்துச் சென்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன் வே.சத்திரப்பட்டி காவல் நிலையத்துக்குச் சென்று தனது கூட்டாளியுடன் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த தலைமை காவலர் பால்பாண்டியும் தாக்கப்பட்டிருக்கிறார். அவர் தன்னை காப்பாற்றிக்கொள்ள காவல் நிலையத்தில் இருந்த ஒரு அறைக்குள்ளே சென்று பூட்டுப்போட்டு கொண்டுள்ளார்.
இதையடுத்து பிரபாகரன் காவல் நிலையத்தில் இருந்து தப்பியோடியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த முன்னாள் அமைச்சர் ஆர். பி.உதயகுமார் காவல் நிலையத்திற்கு பார்வையிட செல்ல முயன்ற போது போலீசார் அவரை முத்துலிங்காபுரத்தில் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து ஆர்.பி.உதயகுமார் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்ததால் போலீசார் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்களை கைது செய்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “
ஸ்டாலின் ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை; மக்களைக் காக்க வேண்டிய காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை; தற்போது உச்சத்தின் உச்சமாக காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை!
நான்காண்டு ஆட்சியின் சாதனைப் பட்டியலில் முதலில் சேர்க்க வேண்டிய சாதனை இது தான்
உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் நிலையம் தாக்குதலுக்கு உள்ளாவது உங்களுக்கு வெட்கமாக இல்லையா முதல்வரே?
காவல் நிலையத்தையே காக்க முடியாத இந்த திமுக ஆட்சி, எப்படி மக்களைக் காக்கும்? வாய்ப்பே இல்லை.
வே. சத்திரப்பட்டி காவல் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். Former Minister RP Udayakumar arrested