தமிழ்நாட்டில் 2009-ம் ஆண்டு முதல்வர் கலைஞர் தமது வரலாற்று சாதனைகளில் மணிமகுடமாக ‘அருந்ததியர்’ உள் இடஒதுக்கீட்டை வழங்கினார்.

2009 ஆம் ஆண்டு முதல்வராக கலைஞர் இருந்த போது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின், அருந்ததியினருக்கு 3% இட ஒதுக்கீடு சட்ட மசோதா தாக்கல் செய்து சட்டம் இயற்றப்பட்டது.
இந்த சட்டத்தை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டது. 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு சட்டம் செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால் ஏற்கனவே உள் ஒதுக்கீட்டை அனுமதிக்கக்கூடாது என்று ஆந்திர மாநில வழக்கில் 2004 ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியிருந்தது. இதன் காரணமாக இந்த வழக்கை 7 நீதிபதிகள் அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது.
இந்த வழக்கில் தலைமை நீதிபதியாக இருந்த சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் அமர்வு 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ந் தேதியன்று இறுதித் தீர்ப்பு வழங்கியது. எஸ்சி/எஸ்டி – பட்டியலின பழங்குடினருக்கான உள்ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும் அன்று அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்று 6 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பு வழங்கினர்.
இதனைப் பின்பற்றி தற்போது கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசும் தலித்துகளுக்கான எஸ்சி-எஸ்டி பிரிவினருக்கான உள் இடஒதுக்கீட்டை அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் பட்டியல் சாதிகள் இடது கை, வலது கை, தீண்டத்தகாத பிரிவு என பிரிக்கப்பட்டுள்ளன. இருந்த போதும் சில சமூகங்களே இடஒதுக்கீட்டின் பலனை அனுபவிக்கின்றன என்கிற சர்ச்சை வெடித்த நிலையில் எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீடு தொடர்பாக ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டன.
இதில் ஏஜே சதாசிவா ஆணையமானது, எஸ்சி/எஸ்டி- பட்டியல் சாதியினருக்கான 15% இடஒதுக்கீட்டை 6:5:3:1 என்ற விகிதத்தில் பிரிக்கப் பரிந்துரைத்தது.
ஆனால் 2023-ல் ஆட்சியில் இருந்த பாஜக அரசு, எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீட்டை 15 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயர்த்தியது. அத்துடன் 6% (இடது), 5.5% (வலது), 4.5% (தீண்டத்தகாத சாதியினர்) மற்றும் 1% (மற்றவர்கள்) எனப் பிரித்து உள் இடஒதுக்கீடு அறிவித்தது.
தமிழ்நாட்டைத் தவிர பிற மாநிலங்களில் இடஒதுக்கீடு 50%-க்கு அதிகமாக இருக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறியதாக கர்நாடகா பாஜக அரசின் நடவடிக்கை இருந்ததால் நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி நாகமோகன் தாஸ் ஆணையம் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.
தற்போதைய காங்கிரஸ் அரசு அமைத்த இந்த ஆணையம், விரிவான ஆய்வுகளை நடத்தி 1-6-5-4-1என்ற பார்முலாவைப் பரிந்துரைத்தது.
அதாவது எஸ்சி/எஸ்டி சமூகங்களை 5 பிரிவுகளாகப் பிரித்து அவர்களுக்கான உள் இடஒதுக்கீடாக 1-6-5-4-1 பார்முலா முன்வைக்கப்பட்டது. ஆனால் இது 17 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையிலானது. இதனை செயல்படுத்தினாலும் நீதிமன்றம் தடை விதிக்கும்.
இந்த நிலையில்தான் கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு எஸ்சி/எஸ்டி பட்டியலில் உள்ள 3 பிரிவினருக்கு 5.25- 5.25- 4.50 என இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்தது. இதற்கு அம்மாநில அரசின் அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி எஸ்சி/எஸ்டி பட்டியலில் உள்ள
Group A: மாதிகா உள்ளிட்ட 15 ஜாதியினருக்கு 5.25 %
Group B: 18 ஜாதியினருக்கு 5.25 சதவீதம்
Group C: லம்பானி, போவி உள்ளிட்ட 59 மிகவும் பின் தங்கிய பிரிவினருக்கு 4.50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும்.
அதே நேரத்தில் இந்த உள் இடஒதுக்கீடு முறை குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
