PF விதிமுறைகளில் விலக்கு வழங்கிய EPFO: இதனால் யாருக்கு, என்ன நன்மை தெரியுமா?

Published On:

| By Santhosh Raj Saravanan

EPFO ​​to offer significant relaxation in rules

விலக்கு அளிக்கப்பட்ட வருங்கால வைப்பு நிதி (PF) அறக்கட்டளைகளை நிர்வகிக்கும் நிறுவனங்கள் தங்கள் சட்டப்பூர்வ நிலையை முறைப்படுத்திக்கொள்ள வாய்ப்பளிக்கப்படுவதாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அறிவித்துள்ளது. இந்த வசதி ஜூன் 29ஆம் தேதி முதல் சில மாதங்களுக்குக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரிச் சட்டம், 1961-ன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட PF அறக்கட்டளைகளை நடத்தி வரும் அதே வேளையில், மத்திய அல்லது மாநில அரசுகளிடமிருந்து முறையான விலக்கு அறிவிப்பைப் பெறாத நிறுவனங்களுக்கு இத்திட்டம் பொருந்தும்.

எந்தெந்த நிறுவனங்கள் பயனடையும்?

தங்கள் PF அறக்கட்டளையை முன்தேதியிட்டு (retrospectively) முறைப்படுத்த விரும்பும் நிறுவனங்கள், மற்றும் ஏற்கனவே ‘விலக்கு அளிக்கப்படாத நிறுவனம்’ (Un-exempted Establishment) என்ற அடிப்படையில் விதிகளைப் பின்பற்றத் தொடங்கியுள்ள அல்லது எதிர்காலத்தில் அவ்வாறு செய்யத் தீர்மானித்துள்ள நிறுவனங்களும் இத்திட்டத்தின் பலன்களைப் பெறலாம்.

ADVERTISEMENT

இது தவிர, ‘சமூகப் பாதுகாப்புச் சட்டம், 2020’-ன் (Code on Social Security, 2020) கீழ் விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களாகத் தொடர்ந்து செயல்பட விரும்பும் நிறுவனங்களும் இந்த ஆம்னஸ்டி திட்டத்தின் கீழ் தங்கள் அறக்கட்டளைகளை முன்தேதியிட்டு முறைப்படுத்த விண்ணப்பிக்கலாம்.

ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு:

வருமான வரிச் சட்டம், 1961-ன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விலக்கு அளிக்கப்பட்ட PF அறக்கட்டளைகளை இயக்கும் நிறுவனங்கள் தங்கள் சட்டப்பூர்வ நிலையை முறைப்படுத்திக்கொள்ள ‘ஆம்னஸ்டி ஸ்கீம் 2026’ ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பாக அமையும் என்று EPFO ​​தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
எந்த விதிகளின் கீழ் அங்கீகாரம் வழங்கப்படும்?

EPFO வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ‘ஊழியர் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர விதிகள் சட்டம், 1952’-ன் பிரிவு 17-ன் கீழ் விலக்கு அளிக்கப்பட்ட வருங்கால வைப்பு நிதிகளுக்கு மட்டுமே ‘வருமான வரிச் சட்டம், 2025’-ன் கீழ் அங்கீகாரம் வழங்கப்படும். இந்த ஆம்னஸ்டி திட்டத்தின் கீழ், அத்தகைய நிறுவனங்களுக்குப் பிரிவு 17 மற்றும் ‘சமூகப் பாதுகாப்புச் சட்டம், 2020’-ன் பிரிவு 143 ஆகியவற்றின் கீழ் முன்தேதியிட்ட விலக்கு பலன் வழங்கப்படும்.

என்ன சலுகை வழங்கப்படும்?

இத்திட்டத்தின் கீழ் தங்கள் நிலையை முறைப்படுத்தும் நிறுவனங்களுக்கு, ‘சமூகப் பாதுகாப்புச் சட்டம், 2020’-ல் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் அறக்கட்டளையின் குறைந்தபட்ச நிதி (corpus) தொடர்பான நிபந்தனைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும். இது தவிர, ஊழியர்களின் PF கணக்குகளில் சட்டப்பூர்வ விகிதத்திற்கு இணையான அல்லது அதற்கு மேற்பட்ட வட்டி மற்றும் பங்களிப்பு வரவு வைக்கப்பட்டிருந்தால், PF நிலுவைத் தொகைகள், அபராதம் மற்றும் வட்டி தொடர்பான நிலுவையில் உள்ள மதிப்பீட்டு நடவடிக்கைகள் திரும்பப் பெறப்படும்.

ADVERTISEMENT
Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share