மதிமுக பொதுக்கூட்டம் எங்கு நடைபெற்றாலும் நிர்வாகிகளிடம், எங்கப்பா மங்களூர் ஜெயராமன்?” என வைகோ கேட்கத் தவறுவதில்லை. காரணம், தள்ளாத வயதிலும் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு, தேர்தல் நேரங்களில் தான் திரட்டிய சிறு நிதியையும் வைகோவிடம் நேரில் அளித்து அனைவரையும் உற்சாகம் ஊட்டுபவர் மங்களூர் கு.ஜெயராமன்.
கடலூர் மாவட்டம் மங்களூரில் கடை ஒன்றை வைத்து சிறுவணிகத்தில் ஈடுபட்டுள்ள ஜெயராமனுக்கு தற்போது 73 வயது ஆகிறது. இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது மூட்டுவலிக்கு சிகிச்சை பெற்றுக்கொண்டு வருகிறார். என்றபோதும், கடந்த ஜனவரி மாதத்தில் சேலத்தில் வைகோவை சந்தித்த அவர், கடந்த மாதத்தில் விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டார். இந்நிலையில் இவர் தற்போது வைகோவிற்கு கடிதம் ஒன்றோடு, தான் திரட்டிய ரூ.342 நிதியோடு சேர்த்து, 501 ரூபாயை சொந்த தேர்தல் நிதியாகவும், 100 ரூபாயை ஓய்வூதியத்திலிருந்து அளிப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
தள்ளாத வயதிலும் ஓய்வுறாது உழைக்கும் இவரைப் போன்ற தொண்டர்களால் தான் மதிமுக இன்னும் உயிர்ப்போடு உள்ளதாக வைகோ இவரைப்பற்றி நிர்வாகிகளிடம் தெரிவிப்பதில் எந்தவொரு மிகையும் இல்லை.