காதல் கடிதம் தீட்டும் ‘சீதா ராமம்’ !

Published On:

| By Kavi

நடிகர் துல்கர் சல்மான், நடிகை ரஷ்மிகா மந்தானா, பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர், தெலுங்கு நடிகர் சுமந்த் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘சீதா ராமம்.’

வைஜயந்தி மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சி.அஸ்வினி தத் வழங்கும் ‘சீதா ராமம்’ படத்தை ஸ்வப்னா சினிமா எனும் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது.

ADVERTISEMENT

போரூற்றி எழுதிய காதல் கவிதை எனும் துணைத் தலைப்புடன் வெளியாகவிருக்கும் இந்த ‘சீதா ராமம்’ படத்தைத் தெலுங்கின் முன்னணி இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்க, பி.எஸ்.வினோத் மற்றும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.

காதலை மையப்படுத்திய இந்தப் படத்தின் முன்னோட்டத்தை நடிகர் கார்த்தி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். இந்த ‘சீதா ராமம்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.இந்தப் படத்தின் தமிழ் பதிப்பை லைகா நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.

ADVERTISEMENT

‘சீதா ராமம்’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள கிரீன் பார்க் நட்சத்திர ஹோட்டலில் நேற்று மாலை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் நாயகனான துல்கர் சல்மான், நாயகி மிருணாள் தாகூர், நடிகர் சுமந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் நடிகர் சுமந்த் பேசுகையில், “1960-ம் ஆண்டின் காலகட்டத்தின் காஷ்மீர் பின்னணியில் ராணுவ வீரர்களின் காதலைக் கவித்துவத்துடன் இயக்குநர் உருவாக்கி இருக்கிறார். சீதா ராமம்’ போன்ற காதல் காவிய படைப்புகள் தற்போது உருவாவதில்லை. இதனால் இயக்குநர் கதையை விவரித்ததும், அவருடைய கற்பனையை நனவாக்க மகிழ்ச்சியுடன் நடிக்க ஒப்புக் கொண்டேன். துல்கர் சல்மான் போன்ற இளம் திறமையாளருடன் பங்களிப்பு வழங்கி இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார்.

ADVERTISEMENT

நடிகை மிருணாள் தாகூர் பேசுகையில், “இந்த ‘சீதா ராமம்’ படத்தில் ‘சீதா மகாலட்சுமி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இப்படத்தில் நான் நன்றாக நடனமாடியிருக்கிறேன் என அனைவரும் பாராட்டுகிறார்கள். இந்தப் பாராட்டிற்கு நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர்தான் காரணம். காஷ்மீரில் அதிக குளிரில் கடினமாக உழைத்து, இந்த நடனக் காட்சிகளை உருவாக்கினார். என்னுடைய கலை உலக பயணத்தில் முதன்முதலாக அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அனைத்து இளம் நடிகைகளும் நடிக்க விரும்பும் கதாபாத்திரம் இது. துல்கர் சல்மான் போன்று ரசிகைகள் அதிகம் கொண்டாடும் நடிகருடன் இணைந்து நடித்திருப்பது மறக்க இயலாதது” என்றார்.

நடிகர் துல்கர் சல்மான் பேசுகையில், , நான் இதற்கு முன்னர் நிறைய காதல் கதைகளில் நடித்திருந்தாலும், இது போன்ற வித்தியாசமான காதல் கதையில் நடித்ததில்லை.கதை நடக்கும் காலகட்டம், கதை களம், கதாபாத்திர பின்னணி என பல அம்சங்கள் சிறப்பாக இருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன். அதிலும் காதலை கடிதம் மூலம் வெளிப்படுத்தும் 1960 காலகட்டத்தின் அனுபவங்கள் மிகச் சிறப்பாக ‘சீதா ராமம்’ படத்தில் இடம் பெற்றிருக்கிறது. தற்போதுள்ள தலைமுறைக்குக் கடித இலக்கியம், கடிதம் எழுதுவது என்பதே புரியாத விசயம். படத்தில் இடம் பிடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பானவை. சீதா ராமம்தமிழ் பதிப்பிலும் நானே பின்னணி பேசி இருக்கிறேன்” என்றார்.

இராமானுஜம்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share