ஆதார் (Aadhaar) அட்டை என்பது வெறும் அடையாள அட்டை மட்டுமல்ல. சிம் கார்டு வாங்க, வங்கி கணக்கு தொடங்க, பள்ளி, கல்லூரியில் சேர, தொழில் தொடங்க என எல்லாவற்றுக்கும் இது அவசியம். இந்த அட்டையில் உங்கள் பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட தகவல்களும், உங்கள் கைரேகை போன்ற பயோமெட்ரிக் தகவல்களும் அடங்கியுள்ளன. இதன் மூலம் அரசு சேவைகளையும் பெறலாம்.
உங்கள் ஆதார் அட்டையில் தனிப்பட்ட தகவல்களும், பயோமெட்ரிக் தகவல்களும் இருப்பதால் இது மோசடிகளுக்கு ஆளாகும் வாய்ப்புள்ளது. எனவே, உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை எல்லோரிடமும் பகிர்வது உங்கள் தனிப்பட்ட தகவல்களுக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையலாம். இதைத் தவிர்க்க, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) உங்கள் ஆதார் அட்டையை லாக் செய்யவும், அதன் இலக்கங்களை மறைக்கவும் அனுமதிக்கிறது.
மாஸ்க்ட் ஆதார் அட்டை என்றால் என்ன? மாஸ்க்ட் ஆதார் அட்டை என்பது சாதாரண ஆதார் அட்டையின் பாதுகாப்பான வடிவம் ஆகும். இதில் உங்கள் பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், QR கோட் போன்ற தேவையான அனைத்து தகவல்களும் இருக்கும். ஆனால், ஆதார் எண்ணின் முதல் எட்டு இலக்கங்கள் மறைக்கப்பட்டு, கடைசி நான்கு இலக்கங்கள் மட்டுமே தெரியும். உதாரணமாக, ஒருவரின் ஆதார் எண் 908070654321 என்றால், மாஸ்க்ட் ஆதார் அட்டையில் அது xxxx-xxxx4321 என்று காட்டப்படும்.
மாஸ்க்ட் ஆதார் அட்டையை எங்கே பயன்படுத்தலாம்? KYC மற்றும் சரிபார்ப்பு செயல்முறைகளுக்கு மாஸ்க்ட் ஆதார் அட்டையைப் பயன்படுத்தலாம். வேலைக்கு விண்ணப்பிக்க, ஹோட்டல்களில் அடையாள ஆவணமாகக் கொடுக்க, ரயில் மற்றும் விமான நிலையங்களில் அடையாள அட்டையாகக் காட்டவும் இது உதவும். தனிநபர் கடன்கள் மற்றும் வங்கி பரிவர்த்தனைகளுக்கும் மாஸ்க்ட் ஆதார் அட்டையைப் பயன்படுத்தலாம்.
மாஸ்க்ட் ஆதார் அட்டையைப் பதிவிறக்கம் செய்வது எப்படி? உங்கள் மொபைலில் மாஸ்க்ட் ஆதார் அட்டையைப் பதிவிறக்கம் செய்ய, mAadhaar செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி உள்நுழையுங்கள். அடுத்து OTP சரிபார்ப்பை முடிக்கவும். பிறகு, ‘Get Aadhaar – Download Aadhaar’ பகுதிக்குச் செல்லுங்கள். ‘Masked Aadhaar’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுங்கள். இப்போது உங்கள் ஆதார் எண் அல்லது VID எண்ணை உள்ளிட்டு OTP மூலம் சரிபார்க்கவும். மாஸ்க்ட் ஆதார் உங்கள் மொபைலில் சில நொடிகளில் சேமிக்கப்படும்.
