தமிழ்நாடு கடந்த 14 ஆண்டுகளுக்கு பின்- மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சிக்குப் பின்னர் முதல் முறையாக இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டி சாதனை படைத்துள்ளது.
மத்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் கடந்த 2024 -25ம் நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் தொடர்பான திருத்தப்பட்ட மதிப்பீடுகள் குறித்த புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது. இதில் நாட்டிலேயே நம்பர் 1 இடத்தை தமிழகம் எட்டி உள்ளது. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 11.19 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது. அதாவது தமிழக அரசு கணித்த 9 சதவிகித வளர்ச்சியை தாண்டி தமிழகம் சாதனை படைத்துள்ளது.
முன்னதாக தமிழக முதல்வராக கலைஞர் இருந்த போது கடந்த 2010-11 நிதியாண்டில் தமிழகம் 13.12 சதவிகித வளச்சியை பதிவு செய்திருந்தது. ஆனால் அதன் பின்னர் தொடர்ச்சியாக பொருளாதரா வளர்ச்சி விகிதத்தில் சரிவைக் கண்ட தமிழம் தற்போது மீண்டும் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டி உள்ளது.

கடந்த தமிழக பட்ஜெட்டில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி 14.5 சதவிகிதமாகவும், உண்மையான வளர்ச்சி 9 சதவிகிதமாகவும் சராசரி பணவீக்கம் 5 சதவிகிதமாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டது. ஆனால் தற்போதைய உண்மையான வளர்ச்சி பட்ஜெட் மதிப்பீட்டை விட 2.2 சதவிகிதம் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் நாட்டிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகம் இரட்டை இலக்கில் பொருளாதார வளர்ச்சியை பெற்று முதலிடத்தை பிடித்துள்ள நிலையில் வரும் 2025-26 ம் ஆண்டில் இது 12 சதவிகிதமாக உயர வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பெருமிதம் தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
- இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு தமிழ்நாட்டின் #DravidianModel அரசு!
- இந்தியாவிலேயே அதிகபட்சமாக 9.69% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம் என்று கூறி வந்தோம் அல்லவா…
- அதையும் தாண்டி, தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19% என ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் வெளியாகியுள்ளது!
- இதற்கு முன்பு, இரட்டை இலக்க வளர்ச்சி எட்டப்பட்டது 2010-11-ஆம் ஆண்டில். அப்போது கலைஞர் ஆட்சி! இப்போது கலைஞர் வழி நடக்கும் திராவிட மாடல் ஆட்சி! இரண்டுமே கழக ஆட்சி!
- 2030-ஆம் ஆண்டுக்குள் #OneTrillionDollar பொருளாதாரம் என்றபோது பலரது புருவமும் உயர்ந்தது. “இது மிக உயர்ந்த இலக்கு, எப்படி சாத்தியமாகும்?” என்றார்கள்! இதே வேகத்தில் சென்றால், எதுவும் சாத்தியம் என்பது இப்போது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது!
- எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின் (குறள் 666)
