ஐஐடி காரக்பூரில் அதிர்ச்சி: 10 நாட்களில் இரண்டாவது மாணவர் உயிரிழப்பு

By Pandeeswari Gurusamy

|

Published on 1 May 2026, 9:54 AM

IIT Kharagpur

காரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT) 22 வயதான நான்காம் ஆண்டு மாணவர் சோகம் ஹல்தார், கடந்த ஏப்ரல் 28ம் தேதி அன்று தனது விடுதி அறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 நாட்களில் நடைபெறும் இரண்டாவது மரணம் இதுவாகும்.

ராதாகிருஷ்ணன் விடுதியில் தங்கியிருந்த சோகம் கடந்த செவ்வாய்க்கிழமை காலை சுமார் 10:45 மணியளவில், தனது உயிரை மாய்த்துக்கொள்ளப் போவதாகவும், அது குறித்து வளாகப் பாதுகாப்புப் பிரிவினருக்குத் தகவல் தெரிவிக்குமாறும் ஒரு குறுஞ்செய்தியைத் தனது குடும்பத்தினருக்கு அனுப்பியுள்ளார். தகவலறிந்த பாதுகாப்புப் படையினர் அங்கு சென்றபோது, அறை உள்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்றபோது அவர் உயிரிழந்திருந்தது தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலை எனத் தெரிந்தாலும், ஒரு திறமையான மாணவரை இத்தகைய முடிவுக்குத் தள்ளிய பின்னணி குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

மனநலன் மற்றும் கல்வி அழுத்தத்தை எதிர்கொள்ளுதல்

இந்த சம்பவம், உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் கல்விச் சுமை மற்றும் மாணவர்களின் மனநலம் குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது. குறிப்பாக, மனநல ஆலோசனை சேவைகளின் அணுகல், கல்விச் சுமை மற்றும் தோல்வி பயம், முன்கூட்டியே மனஅழுத்தத்தை கண்டறியும் அமைப்புகள் போன்ற அம்சங்கள் குறித்து மீண்டும் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

மாணவர்களின் மனநல பாதுகாப்பை உறுதிசெய்ய கல்வி நிறுவனங்கள் மேலும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த சம்பவம், கல்வி சாதனைகளுடன் சேர்த்து மாணவர்களின் உயிர் பாதுகாப்பும் சமமாக முக்கியம் என்பதை சுட்டிக்காட்டி உள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக, கடந்த ஏப்ரல் 18 ம் தேதி அதல் பிஹாரி வாஜ்பாய் விடுதி அருகே ஜெயவீர் சிங் தரியா (21) என்ற மூன்றாம் ஆண்டு மாணவர் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அந்தச் சம்பவம் நடந்து இரண்டு வாரங்கள் முடிவதற்குள் அடுத்த மரணம் நிகழ்ந்துள்ளது ஐஐடி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel