இந்தியாவில் மொத்தம் 12 பொதுத்துறை வங்கிகளும், 21 தனியார் துறை வங்கிகளும் உள்ளன. இவற்றுடன் வெளிநாட்டு வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கட்டண வங்கிகள் போன்றவையும் செயல்படுகின்றன. பொதுத்துறை வங்கிகள் என்பவை அரசுக்கு சொந்தமானவை. எஸ்பிஐ (SBI), பிஎன்பி (PNB), பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) போன்றவை இதற்கு உதாரணங்கள்.
அதேபோல், எச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank), ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) ஆகியவை தனியார் துறை வங்கிகள் ஆகும். மேலும், பல பிராந்திய கிராமப்புற வங்கிகளும், கூட்டுறவு வங்கிகளும் இந்தியாவில் இயங்குகின்றன.
இந்த வங்கிகளில் எது மிகவும் பழமையானது என்று உங்களுக்குத் தெரியுமா? அதுதான் மெட்ராஸ் வங்கி (The Madras Bank). 1683ஆம் ஆண்டு ஐரோப்பிய வணிகர்களால் தொடங்கப்பட்ட இந்த வங்கி, பல மாற்றங்களுக்குப் பிறகு இன்று இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State Bank of India) ஆக உருவெடுத்துள்ளது.
இந்தியாவின் முதல் வங்கி மெட்ராஸ் வங்கிதான். இந்த வங்கியை 1683ஆம் ஆண்டு ஐரோப்பிய வணிகர்கள் தொடங்கினார்கள். 1806ஆம் ஆண்டில், இந்த வங்கி மூடப்படும் நிலைக்கு வந்தது. ஆனால், மீண்டும் ‘மெட்ராஸ் வங்கி’ என்ற பெயரிலேயே செயல்படத் தொடங்கியது. பின்னர், 1843 ஆம் ஆண்டில் இது ‘பேங்க் ஆஃப் மெட்ராஸ்’ உடன் இணைக்கப்பட்டது.
இந்த ‘பேங்க் ஆஃப் மெட்ராஸ்’ வங்கி 1921 ஆம் ஆண்டில் ‘பேங்க் ஆஃப் கல்கத்தா’ மற்றும் ‘பேங்க் ஆஃப் பாம்பே’ ஆகிய வங்கிகளுடன் இணைந்து ‘இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியா’ (Imperial Bank of India) என்ற பெயரில் உருவானது.
இறுதியாக, 1955 ஆம் ஆண்டில் இந்த ‘இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியா’ வங்கியின் பெயர் ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’ (State Bank of India) என மாற்றப்பட்டது. இந்த ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தற்போது 70 ஆண்டுகளாக இந்த பெயரிலேயே செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியை நிறுவிய ஐரோப்பிய வணிகர்கள் பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனியுடன் (British East India Company) நெருக்கமாக வேலை செய்தார்கள். வங்கியின் ஊழியர்கள் பெரும்பாலும் பிரிட்டிஷ் குடிமக்களாக இருந்தனர். அவர்கள் ஈஸ்ட் இந்தியா கம்பெனியில் இருந்து வந்தவர்கள்.
இந்த வங்கியின் பெரும்பாலான அலுவலகங்களும், கிளைகளும் மெட்ராஸ் பிரசிடென்சியில் அமைந்திருந்தன. அதன் தலைமையகம் சென்னையில் உள்ள ஜார்ஜ் டவுனில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
