ஆய்வுகள் என்ற பெயரில் யார் வயிற்றில் அடிக்கிறீர்கள்? – தங்கம் தென்னரசு ஆவேசம்

Published On:

| By Pandeeswari Gurusamy

சிவகாசியில் பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்கவும், அரசு ஆய்வு என்ற பெயரில் தொழிலை முடக்கும் நடவடிக்கைகளைக் கண்டித்தும் திமுக சார்பில் இன்று (ஆகஸ்ட் 16) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பட்டாசுத் தொழிலாளர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, “10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் இந்த பட்டாசு தொழில் இன்று முழுமையாக முடங்கியுள்ளது. இதைக் கண்டித்துதான் இந்த போராட்டம். அதுமட்டுமல்லாமல், நம் அனைவரின் உரிமைக் குரலை, உணர்வுகளை எதிரொலிக்கும் வகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தொடரில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அனுமதியோடு, பட்டாசு தொழிலைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தை வலியுறுத்தி கவன ஈர்ப்புத் தீர்மானத்தையும் அளித்துள்ளோம்.

ADVERTISEMENT

உங்களுடைய குரலை மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் ஓங்கி எழுப்பும் ஜனநாயக சக்தி, கலைஞர் உருவாக்கிய திமுக. பட்டாசு ஆலைகளில் நடைபெறும் துயரச் சம்பவங்களில் நாம் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறோம். இரண்டு தினங்களுக்கு முன்பு கூட ஒரு விபத்து ஏற்பட்டு மூன்று பேர் உயிரிழந்திருக்கிறார்கள். உயிரிழந்திருப்பதற்கு உள்ளபடியே வருத்தப்படுகிறோம். அந்தத் துயர்ச் சம்பவம் நடந்திருக்கக் கூடாது. அந்தச் சம்பவத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை அந்த குடும்பத்திற்கு தெரிவித்துக் கொள்கிறோம். அதை நான் மறுக்கவில்லை.

ஆனால், அங்கொன்றும் இங்கொன்றுமாக நமது பகுதியில் நடக்கும் இந்த விபத்துகளைக் காரணம் காட்டி, ஒட்டுமொத்த பட்டாசுத் தொழிலையும் ஒரேயடியாக முடக்கிவிட்டு நசுக்குவது என்ன நியாயம் என்று நாங்கள் கேட்கிறோம்? ஒரு தொழிற்சாலை மூடப்பட்டால் அது நிர்வாகத்தோடு முடிந்துவிடாது; அந்த நிர்வாகத்தை நம்பியிருக்கக்கூடிய தொழிலாளர்களின் குடும்பங்களை அதிகாரிகள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

ADVERTISEMENT

விதிகளைப் பின்பற்றாமல், அரசின் அனுமதியைப் பெறாமல் ஏதாவது தொழிற்சாலை செயல்பட்டால், அந்தத் தொழிற்சாலை மீது அரசு நடவடிக்கை எடுப்பதை யாரும் தடை சொல்லப்போவதில்லை. அப்படி யாராவது சட்டவிரோதமாக இத்தொழிலில் ஈடுபட்டிருந்தால், உடனடியாகத் தடுத்து நிறுத்தி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை நாம் வரவேற்கிறோம்.

ஆனால், அதைக் காரணம் காட்டி, முறையாக உரிமம் பெற்றிருக்கக்கூடிய தொழிற்சாலைகளையும் இன்று திடீர் ஆய்வுகள் என்ற முறையில் மொத்தமாக முடக்குவது எந்த வகையில் நியாயம் என்பதை நியாயத்தின் குரலாகக் கேட்பதற்குத்தான் ஆயிரக்கணக்கானோர் இங்கு குழுமியிருக்கிறோம்.

ADVERTISEMENT

இது மிக முக்கியமான காலகட்டம். தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கிறது; தீபாவளி வரும்போதுதான் பட்டாசுத் தொழிலைச் சிறப்பாக செய்ய இயலும். இந்த வெயில் அடித்துக் கொண்டிருக்கும்போதுதான் பட்டாசுத் தொழிலைச் செய்ய முடியும். அடுத்த சில நாட்கள் தள்ளிப்போனால் மழைக்காலம் வந்துவிட்டால் தொழிலைச் செய்ய முடியாது. அடுத்து கொஞ்ச நாட்கள் தாண்டிப் போனால் தீபாவளி வந்துவிடும்; உற்பத்தியாகக்கூடிய பொருட்களை உற்பத்தி செய்ய இயலாத சூழல் உருவாகும்.

“அப்படியென்றால், உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத சூழல் உருவாகிவிடும். ஆனால், நடந்துகொண்டிருக்கும் இந்த ஆட்சி இது குறித்து ஏதாவது கவலைப்பட்டுள்ளதா?

ஒருபுறம் உற்பத்தியாளர்கள் என்றால் மறு பக்கம் சில்லறை விற்பனையாளர்கள்; இன்று கடைகளில் கிஃப்ட் பாக்ஸ் (Gift Box) வைத்து யாராவது விற்பனை செய்ய முடிகிறதா? சிவகாசியில் இன்று நீங்கள் யார் வயிற்றில் அடிக்கிறீர்கள்? பெரிய முதலாளிகளின் வயிற்றில் அடிக்கவில்லை; சாதாரண சில்லறை வியாபாரிகள், கடை வைத்திருப்பவர்கள், அக்கடையை நம்பியிருக்கக்கூடிய லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வயிற்றில்தான் ஆய்வுகள் என்ற பெயரில் அடிக்கிறீர்கள்! அதிகாரிகளின் இந்தப் போக்கை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

அதேபோல், ஆட்சி வந்தவுடன் பெரும் மாற்றம் வந்துவிடும், சிவகாசியே மாறிவிடும் என்று சொன்னார்களே, சிவகாசியில் என்ன மாற்றம் வந்தது? இந்த மூன்று மாதத்தில் சிவகாசிக்கு என்ன நன்மை செய்திருக்கிறீர்கள்? திமுக ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சிவகாசிக்கு உட்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் அத்தனையும் நாம் செய்தோம். சாட்சியபுரம் பாலமாக இருந்தாலும், திருத்தங்கல் பாலமாக இருந்தாலும், சிவகாசி வெளிவட்டச் சாலை (Ring Road), சிவகாசி – விருதுநகர் மாநில நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றியது, சிவகாசி மருத்துவமனை என அத்தனையும் செய்த ஆட்சி நமது திமுக அரசு செய்தது.

கடந்த மூன்று மாதங்களில் வந்து நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? இருக்கின்ற தொழிலையும் கெடுத்துவிட்டுப் போயிருக்கிறீர்கள். நீங்கள் வந்தவுடன் பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் அனைவருக்கும் காப்பீடு (Insurance) தருவோம் என்றீர்கள்; இன்று கொடுத்தீர்களா? இல்லை! இந்த ஊரில்தான் தொழில்துறை அமைச்சர் இருக்கிறார். உங்கள் சட்டமன்ற உறுப்பினர் வந்தவுடன் சில திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றார். ஒவ்வொரு தொழிற்சாலையிலும் ஒரு ஆம்புலன்ஸ் இருக்க வேண்டும், 10 கிலோமீட்டர் சுற்றளவுக்கு ஒரு தீயணைப்பு நிலையம் இருக்க வேண்டும்’ என்று சொன்னார்களா, இல்லையா? இப்போது பட்ஜெட் வந்துள்ளது; இந்த பட்ஜெட்டில் எங்காவது ஒரு இடத்திலாவது இதைச் சொல்லியிருக்கிறீர்களா? இல்லை! ‘எல்லாம் இல்லை இல்லை’ என்று சொல்வதுதான் உங்களுடைய மாற்றமா?

‘எல்லாம் இருக்கிறது, அள்ளிக்கொண்டு போங்கள்’ என்று அள்ளித்தந்த முதலமைச்சர் எங்கே? ‘எல்லாம் இல்லை இல்லை’ என்று சொல்லிக்கொண்டிருக்கும் இந்த ஆட்சி எங்கே? என்ற கேள்வியை நான் உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.

‘தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு’ என்று இரண்டு நாட்களுக்கு முன்னால் நடத்தி, ஒன்றைரை லட்சம் கோடியை மூன்று மாதத்திற்குள்ளாகக் கொண்டுவந்துவிட்டோம் என்று பிரச்சாரம் செய்கிறீர்களே… உங்கள் காலடியில் இருக்கக்கூடிய இந்த பட்டாசுத் தொழிலை ஏன் இந்த அளவுக்கு நசுங்கிப்போக விட்டிருக்கிறீர்கள்?

கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்: ‘தன்னைப் பெற்ற ஆத்தாள் கிண்ணிப் பிச்சை எடுக்கிறாளாம்; பிள்ளை கும்பகோணம் கோ தானம் பண்ணுகிறானாம்’ என்பார்கள். அதாவது, தன்னைப் பெற்ற தாய் உணவுக்கு வழியில்லாமல் இங்குப் பிச்சை எடுத்துக்கொண்டிருக்க, பெற்ற பிள்ளை கும்பகோணம் போய் எல்லோருக்கும் பசுமாடு தானம் செய்துகொண்டிருக்கிறானாம்! அதுதான் இந்தப் பழமொழிக்கு அர்த்தம்.

உங்களுக்காக வாக்களித்தவர்கள், உங்களை நம்பியவர்கள், இந்த ஆட்சியில் ஒரு மாற்றம் வர வேண்டும் என்று விரும்பிய ஆயிரக்கணக்கானோர் சிவகாசியில் வாக்களித்து, இன்று பட்டாசுத் தொழில் நசுங்கி, அடுத்த வேளை உணவிற்கு என்ன செய்வோம் என்று கண்ணீரும் கம்பலையுமாய் லட்சக்கணக்கான குடும்பங்கள் சிவகாசியில் தவித்துக்கொண்டிருக்கின்றன.

நீங்கள் சென்னை மாநகரக் குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்துகொண்டு, ‘1 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கு நாங்கள் தொழில் முதலீடுகளைக் கொண்டுவந்துவிட்டோம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் முன்னேறிக்கொண்டிருக்கிறது, 1.5 டிரில்லியன் அமெரிக்கப் பொருளாதாரத்தை நோக்கி நாம் போகிறோம்’ என்று சொல்லும்போது நான் சொன்ன பழமொழி சரியா, தவறா?

‘மாற்றம் வரும், மாற்றம் வரும்’ என்று சொன்னார்களே, இந்த ஆட்சியில் ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்ட நிதியைக் குறைத்துள்ளீர்கள். பட்டாசுத் தொழில் மட்டுமல்ல, சமூகத்தில் யாரை எடுத்துக்கொண்டாலும் இதே நிலை தான். ‘விவசாயிகளுக்கு வந்தவுடன் பயிர்க்கடனை மொத்தமாகத் தள்ளுபடி செய்கிறோம்’ என்றீர்கள்; இப்போது 75 ஆயிரம், 50 ஆயிரம் என்று கணக்கு போடுகிறீர்கள்! ஏன் என்று கேட்டால், ‘அடுத்த முறை பார்ப்போம்’ என்கிறீர்கள்.

கல்வித்துறையில் வேலை பார்க்கும் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்திற்காக (Pension) 11 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி வைத்துவிட்டு வந்தோம்; இன்று அந்த 11 ஆயிரம் கோடியை அவர்களிடமிருந்து பறித்துவிட்டீர்கள். கல்வித்துறைக்குக் கொடுக்கும் திட்ட நிதி 48 ஆயிரம் கோடியாக இருந்தது, இன்று 44 ஆயிரம் கோடி; ஏறத்தாழ 4 ஆயிரம் கோடி ரூபாயை இன்று குறைத்துவிட்டீர்கள்.

உங்கள் ஆட்சியில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றால், ஏற்கனவே இருந்த திட்டங்களுக்கான நிதியைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், நல்ல திட்டங்களுக்குப் பெயர் மாற்றம் செய்து அதில் ஸ்டிக்கர் ஒட்டுகிறீர்கள்! எல்லா இடத்திலும் ‘வெற்றி, வெற்றி’ என்று சேர்த்துக்கொள்கிறீர்கள். ஆனால், அது உண்மையில் மக்களின் வெற்றியாக இருக்கிறதா என்றால் இல்லை! இவை ‘வெற்றித் திட்டங்கள்’ இல்லை, ‘வெற்றுத் திட்டங்கள்’தான் என்பதை நாங்கள் சொல்கிறோம். தவெக அரசு கடந்த மூன்று மாத காலத்தில் முற்றிலுமாகத் தோல்வியைச் சந்தித்திருக்கிறது” என குற்றம் சாட்டினார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share