“தூங்கி எழுந்தா யாரை கைது பண்ணலாம்னு ஷெட்யூல் போடுறாங்க!” – தவெக அரசை சாடிய உதயநிதி!

Published On:

| By Pandeeswari Gurusamy

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டத்துறை ஆலோசனைக் கூட்டம் இன்று (ஆகஸ்ட் 16) நடைபெற்றது. அக்கட்சியின் சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “பொதுவாக ஒரு அரசாங்கத்தில்தான் ‘துறை’ என்று பிரித்துச் சொல்வார்கள். ஆனால் நமது திமுகவில் மட்டும்தான் ஒரு அணிக்கே ‘சட்டத்துறை’ என்று பெயர் வைத்திருக்கிறோம். இதிலிருந்தே திமுகவின் சட்டத்துறை எந்தளவுக்குத் தனித்துவம் வாய்ந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

இளைஞரணி உள்ளிட்ட 25 அணிகள் செயல்பட்டு வந்தாலும், இன்று கழகத்திற்கு மிகவும் தேவையான அணி என்றால் அது சட்டத்துறைதான். தேர்தலுக்கு முன்பு அத்தனை அணிகளும் தேர்தல் வேலையைச் செய்தோம். ஆனால், தேர்தல் முடிவுகள் வந்த பிறகு இன்று ஒரு அணி மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறது என்றால், அது சட்டத்துறை அணிதான். திமுகவின் தலைவருக்கு மட்டுமல்ல, கடைக்கோடி தொண்டனுக்கு ஒரு பிரச்சனை என்றாலும் முதலில் சென்று நிற்பது சட்டத்துறையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள்தான். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கழகத்தின் மிகப்பெரிய முதுகெலும்பு, மிகப்பெரிய ஆற்றல் (Energy) என்றால் அது சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள்தான்.

கலைஞரின் கடைசி ஆசை…

கலைஞர் மறைவிற்குப் பிறகு மெரினாவில் அண்ணாவிற்குப் பக்கத்தில் தனது ஓய்வு இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அப்போது இருந்த எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு அதைத் தடுக்கப் பார்த்தது; உரிய அனுமதியைக் கொடுக்கவில்லை. கலைஞரின் கனவைச் சட்டப் போராட்டம் நடத்தி நிறைவேற்றியது இங்கு இருக்கும் சட்டத்துறைதான். ‘தான் இறந்த பிறகும் ஒரு போராட்டம் நடத்தி அதில் ஜெயித்த ஒரே தலைவர் டாக்டர் கலைஞர்’ என்று நாம் பெருமையாகப் பேசுகிறோம். ஆனால், அந்தப் போராட்டத்தின் வெற்றிக்குக் காரணம் இங்கு இருக்கக்கூடிய வழக்கறிஞர்களாகிய நீங்கள்தான். கழகத்தின் வரலாற்றில் நீங்கள் போராடிப் பெற்றுக் கொடுத்த தீர்ப்புகள் ஒவ்வொன்றும் சட்டத்துறை மாணவர்கள் படிக்க வேண்டிய ஆய்வுக் கட்டுரையாக உள்ளன.

ADVERTISEMENT

நீதிமன்றத்தில் வாதாடிப் போராடிப் பெற்றுக் கொடுத்த தீர்ப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும், தேர்தல் காலங்களில் வார் ரூம் அமைத்து நீங்கள் செய்த பணிகளை யாராலும் அளவிட முடியாது.

இன்று நாம் மட்டுமல்ல, தமிழ்நாடே எதிர்பார்க்காத ஒரு தேர்தல் முடிவு வந்துவிட்டது. தமிழ்நாடு மட்டுமல்ல, இன்று ஆட்சியில் அமைந்துள்ள சர்க்கஸ் கூடமே தேர்தல் முடிவைக் கண்டு வியந்துள்ளது. தமிழக மக்கள் அதைத் தந்துள்ளனர், அதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். இந்த கும்பல் ஆட்சிக்கு வந்த பிறகு, மற்ற அணிகளின் தேவையை விட வழக்கறிஞர்கள் அணியின் தேவை மிக மிக அவசியமாகக் கருதப்படுகிறது.

ADVERTISEMENT

கடந்த 100 நாட்களில் வழக்கறிஞர்கள்தான் மிகவும் பிஸியாக இருக்கிறார்கள். நின்றால் கைது, நடந்தால் கைது, பேசினால் கைது, சோசியல் மீடியாவில் ஒரு போஸ்ட் போட்டாலும் கைது என மோசமான பாசிச அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. தூங்கி எழுந்தால் யாரைக் கைது பண்ணலாம் என்று கிட்டத்தட்ட ஒரு அட்டவணை (Schedule) போட்டு இந்த அரசு கைது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கடந்த 2-ஆம் தேதி என்ன நடந்தது என்று நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். என்னையும் கைது செய்தார்கள். எதற்காகக் கைது? டெல்டாவில் விவசாயிகளுக்கு ஆதரவாகத் தஞ்சாவூரில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு 22 நிமிடங்கள் பேசினேன். நான் பேசியதற்காகத்தான் அவர்கள் கைது செய்ய வந்தார்கள் என்று நினைத்தேன்.

என்ன பேசினேன்

அன்று காலை 8 மணி அளவில் காவல்துறை எனது வீட்டிற்கு வந்தது. நான் செய்தித் தாள் படித்துக்கொண்டு, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தேன். எனது உதவியாளர், ‘தஞ்சாவூரிலிருந்து காவல்துறையினர் வந்திருக்கிறார்கள்’ என்றார். உடனே நான், ‘சரி கைது செய்யத்தான் வந்திருக்கிறார்கள்’ என்று எண்ணி, ‘நேற்று நாம் என்னவெல்லாம் பேசினோம்?’ என்று யோசித்துப் பார்த்தேன். ‘டம்மி முதலமைச்சர்’ என்று சொன்னேன், அதை ஒத்துக்கொண்டார்கள்; அதற்கு எந்த எதிர்வினையும் (Reaction) இல்லை. ‘கேடுகெட்ட அரசு அமைந்திருக்கிறது’, ‘வெட்கங்கெட்ட அரசு அமைந்திருக்கிறது’ என்றெல்லாம் சொன்னேன். இதற்கெல்லாம் எந்த எதிர்வினையும் இல்லை. இதற்குத்தான் கைது செய்ய வந்திருக்கிறார்களா என்று நினைத்தேன்.

வேறு எதுவும் தோணவில்லை, ‘காவிரியில் தண்ணீர் வரவில்லை’ என்று சொன்னேன். நானே வெளியில் சென்று காவல்துறை அதிகாரியிடம், “எதற்கு வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். “நீங்கள் தஞ்சாவூரில் பேசியதற்காகக் கைது செய்ய வந்துள்ளோம்” என்றனர். “கொஞ்சம் காத்திருங்கள், இப்போதுதான் எழுந்திருக்கிறேன். வழக்கறிஞர்களிடமும் தலைவரிடமும் சொல்ல வேண்டும், அவர்கள் வந்தவுடன் உங்களைச் சந்திக்கிறேன்” என்றேன்.

அப்போது தலைவர் போன் செய்து, “இப்போது கைதாக வேண்டாம். கொஞ்ச நேரம் அவர்களிடம் பேசு, 10:30 மணி வரை காத்திருக்க வை” என்றார். அப்போது நான், “வழக்கறிஞர்கள் வந்துவிட்டார்கள், கைது செய்யும் அளவிற்கு நான் எதுவும் பேசவில்லை; என்ன நடக்கிறதோ பார்த்துக்கொள்ளலாம்” என்றேன். தலைவர், “என்.ஆர். இளங்கோவும் வில்சனும் வருவார்கள், அவர்களிடம் பேசிவிட்டு நீ முடிவெடு” என்று தெரிவித்தார்.

மிகப் பெரிய காமெடி

மின்னல் வேகத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நமது வழக்கறிஞர்கள் சட்டப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். நான் கைதாகி வண்டியில் ஏறியபோது பத்திரிகையாளர்கள் கேட்டார்கள், “இந்தக் கைதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?” என்று. அவர்கள் நினைத்துக்கொண்டார்கள், ‘இது பழிவாங்கும் போக்கு, நான் சும்மா விடமாட்டேன்’ என்று சொல்வேன் என்று. ஆனால் நான் சிரித்துக்கொண்டே, “இது மிகப்பெரிய காமெடி, மிகப்பெரிய நகைச்சுவையை இந்த அரசு நடத்திக்கொண்டிருக்கிறது” என்றேன்.

“வரும் 5-ஆம் தேதி சட்டமன்றம் கூடப்போகிறது, உங்களைப் பேசவிடாமல் தடுக்க முயற்சிக்கிறார்களா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அந்த அளவிற்கு இவர்களுக்கு மூளை கிடையாது. நாங்கள் அப்படியே கேள்வி கேட்டாலும் அவர்கள் பதில் சொல்லிச் கிழித்துவிட்டார்கள். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், யார் அமைச்சர் என்று யாருக்குமே தெரியாது; யார் சட்டமன்ற உறுப்பினர் என்று யாருக்கும் தெரியாது. ஏனென்றால், வேறு ஒரு துறைக்குக் கேள்வி கேட்டால் வேறு ஒரு துறை அமைச்சர் பதில் சொல்கிறார். ஒரு படத்தில் வருமே… நாம் ஒரு கேள்வி கேட்டால் நம்மைக் குழப்பும் அளவிற்கு ஒரு பதில் சொல்வார் பார் என்று, அதுபோல எங்களுக்கு மட்டுமல்ல, இங்கு இருக்கும் டம்மி முதலமைச்சருக்கும் யார் அமைச்சர் என்று தெரியாது, அவருக்கும் யார் சட்டமன்ற உறுப்பினர் என்று தெரியாது.

மற்ற இயக்கங்களில் கைது விஷயம் என்றால் மிகவும் தீவிரமாக (Serious) எடுத்துக்கொள்வார்கள். ஆனால், மிசா, எமர்ஜென்சி இதையெல்லாம் பார்த்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் கலைஞரின் உடன்பிறப்புகள் பயப்பட மாட்டோம்.

‘சொல்லி அடிப்பது போல்’ தஞ்சாவூர் செல்வதற்குள் எனது கைது நடவடிக்கையை நீதிமன்றம் மூலமாக ரத்து செய்ய வைத்ததும் நீங்கள்தான். “ஆளுங்கட்சியை நீதிமன்றத்தில் சென்று, எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்யும் எண்ணமெல்லாம் எங்களுக்கு இல்லை, விசாரித்துவிட்டு விட்டுவிடுவோம்” என்று ஆளுங்கட்சித் தரப்பில் நீதிமன்றத்தில் சொன்னார்கள்.

அரசு செலவில் ஒரு ரோடு ஷோ

நான் அப்போது, “ஏங்க, நான் நைட்டுதான் தஞ்சாவூரிலிருந்து வந்தேன். சொல்லியிருந்தால் நான் அங்கேயே தங்கியிருந்திருப்பேனே! எனக்கு இரண்டு கூட்டங்கள் வேறு இருக்கின்றன, அதையும் கெடுத்துவிட்டீர்கள்” என்றேன். நான் தஞ்சாவூர் போகும்போது ஜாலியாகச் சுற்றுலா (Trip) போவது போல்தான் போனேன். மக்கள் வரிப்பணத்தில் ஒரு ‘ரோட் ஷோ’ போவது போல வழியிலெல்லாம் உடன்பிறப்புகள் ஆங்காங்கே வழிமறித்து என்னென்ன கொடுக்க வேண்டுமோ காபி, டீ, ஜூஸ் என்று கொடுத்தார்கள். நமக்கு எந்தச் செலவும் இல்லாமல் இப்படி ஒரு ரோட் ஷோ நடத்த இந்த அரசு மக்கள் வரிப்பணத்தில் வாய்ப்ப ஏற்படுத்தித் தந்தது.

இந்த அரசுக்கு நான் இங்கு ஒரு நன்றியைச் சொல்ல வேண்டும். தேர்தலுக்குப் பிறகு உடன்பிறப்புகள் கொஞ்சம் சோர்ந்து இருந்தார்கள். இந்த டம்மி அரசு செய்த வேலையால் நாம் பழைய வேகத்திற்கு (Form) வந்துள்ளோம். இதையெல்லாம் நான் வழக்கறிஞர்களின் பெருமையாகக் கருதுகிறேன்.

கடந்த மூன்று மாதங்களில், இந்த 100 நாட்களில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு உடனடியாக விடுவிக்கப்பட்டார். சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அவர்களைக் கைது செய்து மிரட்டப் பார்த்தார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, இப்போது துடிப்பாக இருக்கக்கூடிய ஜென்சி (Gen-Z) இளைஞர்கள் அன்பானந்தம், வினோத், சூர்யா குமார், சரண் இவர்கள் எல்லோரையும் இலக்கு வைத்து (Target)க் கைது செய்தார்கள்.

நான் தஞ்சை ஆர்ப்பாட்டத்திற்குச் சென்று வந்த பிறகு, அங்கு போராட்டம் செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்; சிலரைக் கைது செய்துள்ளனர். இன்று அவர்கள் எல்லோரும் சட்டப் போராட்டம் நடத்திச் சிறையிலிருந்து மீண்டு வந்ததற்கு இங்கு இருக்கும் வழக்கறிஞர்கள்தான் காரணம்.

இந்த ‘சோபா மாடல்’ அரசுக்கு நமது சட்டத்துறையின் வரலாற்றைப் பற்றி முழுவதுமாகத் தெரியவில்லை. கடந்த காலங்களில் முத்தமிழறிஞர் கலைஞரின் கைதாக இருக்கட்டும், நமது கழகத் தலைவரின் கைதாக இருக்கட்டும், எப்போதெல்லாம் கழகத்திற்கு நெருக்கடி வந்ததோ அதை உடைத்துத் தவிடு பொடியாக்கியது நமது சட்டத்துறைதான்.

ஆட்சி அதிகாரத்தில் இருந்துகொண்டு யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். ஆனால் ஆட்சியில் இல்லாதபோது, எதிர்க்கட்சியாகக்கூட இல்லாதபோது, ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஒரு முதலமைச்சரையே ஊழல் வழக்கில் சிறைக்கு அனுப்பிய துறை நமது சட்டத்துறை!

இதுதான் தமிழ்நாட்டின் நிலைமை!

ஒரு சீட்டுக்கட்டில் ஒன்று அல்லது இரண்டு ஜோக்கர் இருக்கலாம். ஆனால் இங்கு 52-மே ஜோக்கர்தான்! நமக்குதான் யார் அமைச்சர், யார் சட்டமன்ற உறுப்பினர் என்ற பெயர் தெரியவில்லை. ஆனால் தமிழக மக்களுக்குத் தெரிந்திருக்கிறதா? அவர்களை அடைமொழி வைத்துப் பேசினால்தான் மக்களுக்குப் புரிகிறது. ‘லாட்டரி விற்கும் அமைச்சர் யார்?’, ‘திருட்டு விசிடி விற்கும் அமைச்சர் யார்?’, ‘உருட்டுக் கட்டை அமைச்சர் யார்?’, ‘பவுடர் போடுகிற அமைச்சர் யார்?’, ‘சங்கி அமைச்சர் யார்?’ என்று இப்படி அவர்களது பட்டப்பெயரை வைத்துப் பேசினால்தான் நமக்கே தெரிகிறது. இதுதான் தமிழ்நாட்டின் நிலைமை!

3 மாதம்தான் ஆகிறது. இனிப் போகப்போக ஒவ்வொரு அமைச்சரும் நிச்சயமாகப் பெரிதாக மாட்டப்போகிறார்கள். அதற்கு வழக்கறிஞர்கள் தயாராக இருக்க வேண்டும். இன்று நாம் தொடர்ந்து பிணை (Bail) வாங்கிக்கொண்டிருக்கிறோம். நாளை அந்த கூட்டத்தை ‘பெயில்’ வாங்கும் நிலைக்கு நாம் கொண்டு வர வேண்டும்.

இந்த அரசு ‘தூய்மையான அரசு’, ‘மாற்றம்’ என்று சொன்னார்கள். இன்று என்ன செய்துள்ளார்கள்? நமது தலைவர் கொண்டுவந்துள்ள அனைத்துத் திட்டங்களின் பெயர்களையும் மாற்றியுள்ளனர். வேறு ஒன்றும் இல்லை, ஸ்டிக்கர் ஒட்டுவது மட்டும்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் எப்படி ஆட்சிக்கு வந்தார்கள்? இவர்களிடம் பெரும்பான்மை (Majority) உள்ளதா? இல்லை!

‘திமுக சட்டமன்ற உறுப்பினர்களைப் பார்த்தால் வழக்கு போடு, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைப் பார்த்தால் சோபா அனுப்பு, எப்படியாவது குதிரை பேரம் (Purchase) செய்து அவர்களை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும்’ என்பதைத்தான் இந்த அரசு செய்துகொண்டிருக்கிறது. இதைத் தமிழக மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது. இதைச் சொன்னதே ஆளுங்கட்சியில் இருக்கும் ஒரு வழக்கறிஞர்தான்; நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளார். ‘மாற்றம், தூய்மை’ என்று உருட்டிக்கொண்டு வந்தவர்கள் இப்போது பணம் வசூலிக்க (கல்லாகட்ட) ஆரம்பித்துவிட்டார்கள். வெகு விரைவில் மாட்டப்போவது உறுதி! இதையெல்லாம் ஆதாரத்தோடு நாம் வெளியில் கொண்டு வர வேண்டும்.

அமுதன் மரணத்திற்கு நீதி

பெண்கள், குழந்தைகள் தனியாக வெளியே செல்ல இயலாத சூழலை இந்த அரசு உருவாக்கியுள்ளது. ‘ஆட்சிக்கு வந்தால் போதைப்பொருளை ஒழிப்போம்’ என்றார்கள். கோவையில் போதைப்பொருள் குறித்துத் தகவல் கொடுத்த கல்லூரி மாணவன் அமுதனை காவல்துறையே காட்டிக்கொடுத்துள்ளது!

இதை நான் சட்டமன்றத்தில் பேச ஆரம்பித்தவுடன், ‘கல்வித்துறை அமைச்சர் கோஷ்டி பூசலால் இந்த மரணம் நடந்துள்ளது’ என்கிறார். 10 பேருக்கும் 10 பேருக்கும் இடையில் பிரச்சனை நடந்தால் அது கோஷ்டி பூசல்; 10 பேர் சேர்ந்து ஒரு பையனை அடித்தால் அதன் பெயர் கொலை! 20 பேர் கொண்ட கும்பல் அந்தப் பையனை அடித்துக் கொலை செய்துள்ளனர். அந்த அமுதனின் அம்மா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேல் நம்பிக்கை வைத்து, ‘நீதி வாங்கித்தர வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். அந்த மரணத்திற்கு நீதி கிடைக்க திமுக கண்டிப்பாகத் துணைநிற்கும்.

குறிப்பாக, திமுகவைச் சேர்ந்த ஜென்சி (Gen-Z) இளைஞர்கள் கொள்கைகளைப் பேசுவதால் அவர்களைப் பார்த்து இந்த அரசு பயப்படுகிறது. அதனால்தான் அவர்களைக் கைது செய்தால் அவர்களது பெற்றோர்கள் பயந்துவிடுவார்கள் என்று இந்த அரசு நினைக்கிறது. பொதுமக்களின் பாதுகாப்பு அரணாகவும் திமுக சட்டத்துறை சிறப்பாகச் செயல்பட வேண்டும்.”

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share