அமுதன் குடும்பத்திற்கு 6 லட்சம் நிதி உதவி – அமைச்சர் சம்பத்

Published On:

| By Pandeeswari Gurusamy

கோவையில் சக மாணவர்களால் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட மாணவர் அமுதன் குடும்பத்தினரை இன்று அமைச்சர்கள் சம்பத், வன்னி அரசு ஆகியோர் இன்று நேரில் சென்று சந்தித்தனர். அரசு தரப்பில் அமுதனின் குடும்பத்தினருக்கு முதற்கட்டமாக ரூ.6 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

அமுதனின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “கோவையில் அண்மையில் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட மாணவன் அமுதனின் குடும்பத்தினருக்கு முதற்கட்ட நிவாரண நிதியாக ரூ.6 லட்சம் இன்று வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அவரது குடும்பத்தினருக்கு நிலப் பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், உயிரிழந்தவரின் சகோதரருக்கு அவருடைய கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்குவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இக்கொலை வழக்கு விசாரணையை எந்தவிதமான தலையீடும் இன்றி, நியாயமான முறையில் காவல் துறை மேற்கொண்டு வருகிறது. குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட எந்தவொரு நபரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துவிடக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இதுவரை இச்சம்பவம் தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

மேலும், இதில் தொடர்புடைய மற்ற நபர்களைக் கண்டறிந்து கைது செய்யவும், கடுமையான விசாரணை மூலம் முழு உண்மையையும் வெளிக்கொண்டு வரவும் காவல் துறை மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

காவல் துறைக்கு முழு சுதந்திரம்:

முதல்வர் விஜய் ஆட்சியில் காவல் துறைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு அரசியல் அல்லது வெளி நிர்ப்பந்தமும் இன்றி, சட்டத்தைக் காப்பாற்றவும், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் காவல் துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், பொதுமக்கள் அளிக்கும் புகார்களின் அடிப்படையில் மட்டுமே நியாயமான முறையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது குறித்த முழு விவரங்களும் சட்டப்பேரவையில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை நிறைவடைந்ததும் முறைப்படி ஊடகங்களுக்குப் பகிரப்படும்” என்று தெரிவித்தார்.

மாணவன் அமுதன் கொலை வழக்கு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில் நாளை சட்டமன்றத்தில் விவாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று அமைச்சர்கள் உயிரிழந்த அமுதனின் பெற்றோரைச் சந்தித்து முதற்கட்ட நிவாரண நிதியுதவி வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share