தொகுதிகள் எண்ணிக்கையை விட்டுக் கொடுக்க தேமுதிக ரெடி.. பணம் இருந்தால்தான் வேட்பாளரா? பிரேமலதா பேட்டி- முழுமையாக!

Published On:

| By Mathi

DMDK Premalatha Press Meet

திமுக கூட்டணியில் அதிகமான கட்சிகள் இடம் பெற்றிருப்பதால் தொகுதிகள் எண்ணிக்கையை விட்டுக் கொடுக்க தேமுதிக தயாராக இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

சென்னையில் தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மார்ச் 23-ந் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது: தமிழகம் முழுவதும் இருந்து பங்கேற்க வந்திருக்கும் எங்கள் மாவட்ட கழக செயலாளர்கள் அவங்களுடைய ஆலோசனைகளை வழங்கினாங்க. தலைமை கழகத்தின் சார்பாக எங்க ஆலோசனையை நாங்க வழங்கி இருக்கிறோம். தேர்தலுக்காக நாங்க வந்து என்னெல்லாம் செய்ய வேண்டும், எப்படி எல்லாம் நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும், தேர்தல் களத்தில் நாம் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதை பற்றி எல்லாம் நாங்கள் விவாதித்து இருக்கிறோம்.

ADVERTISEMENT

இது முடிந்து மீண்டும் எங்களுடைய ஆலோசனை கூட்டம் தொடர இருக்கிறது. தலைமை கழகத்திற்கு விருப்ப மனு கொடுத்து அந்த விருப்ப மனுவின் மூலம் தங்கள் விருப்பங்களை தெரிவித்துக் கொண்ட அனைத்து மாவட்ட கழக செயலாளர்களுக்கும், ஒன்றியம், நகரம், பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அதேபோல சார்பு அணியைச் சேர்ந்த அனைவரும், தலைமை கழக நிர்வாகிகளுக்கும் இந்த கழகத்தை நம்பி விருப்ப மனு கொடுத்த அத்தனை பேருக்கும் தலைவர் சார்பாகவும், தலைமை கழகத்தின் சார்பாகவும் எங்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

விருப்பமனுக்கள் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. அதுல உரியவர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த தேர்தலில் வாய்ப்பும், மற்றவர்களுக்கு வரவிருக்கும் காலங்களில் அந்த தேர்தல்களிலும் நிச்சயமாக வாய்ப்பு அளிக்கப்படும் என்பதையும் இந்த நேரத்திலே நான் தெரிவித்துக் கொள்ள பெருமைப்படுகிறேன்.

ADVERTISEMENT

நாங்கள் அங்கம் வகித்திருக்கும் இந்த கூட்டணி, எங்கள் மாவட்ட கழக செயலாளர்கள், எங்களுடைய ஒன்றியம், நகரம், பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள், கடைகோடியில் இருக்கும் எங்கள் தொண்டர்கள் விரும்பிய ஒரு மகத்தான கூட்டணியை அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தலைமை கழகம் இந்த முறை கூட்டணியை அமைத்திருக்கிறோம் என்பதை இந்த நேரத்திலே நான் பெருமையோடு சொல்றேன். நாம் அமைத்திருக்கும் இந்த கூட்டணி இந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று 200 தொகுதிகளுக்கு மேல் வென்று ஆட்சி அமைப்போம் என்பதை இந்த மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்திலே நான் சொல்லிக்கொள்ள பெருமைப்படுகிறேன் என்பதை இந்த நேரத்துல உங்களுக்கு சொல்றேன். இவ்வாறு பிரேமலதா கூறினார்.

செய்தியாளர்களின் கேள்விகளும் பிரேமலதா அளித்த பதில்களும்

ADVERTISEMENT

கேள்வி: புதுச்சேரியில இன்னையோட வேட்பு மனுத் தாக்கல் நிறைவடையுது. புதுச்சேரியில தேமுதிக போட்டியிடுகிறதா?

பிரேமலதா: கண்டிப்பாக தேமுதிக போட்டியிடுகிறது. ஏன்னா இன்னைக்கு நாம வந்து திமுக தலைமையிலான கூட்டணியிலே அங்கம் வகித்திருக்கிறோம். அவர்களிடம் பேசியிருக்கிறோம். அதனாலே தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் வேட்பாளர்களும் இன்றைக்கு 3 மணிக்குள் எங்களுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்ய இருக்கிறாங்க. எத்தனை தொகுதி, யார் வேட்பாளர் என்பதை அந்த 3 மணிக்கு மேல் நீங்களே தெரிஞ்சுப்பீங்க அப்படிங்கறதையும் நான் சொல்றேன்.

கேள்வி: தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்படவில்லையா?

பிரேமலதா: தேமுதிகவைப் பொறுத்தவரைக்கும் ஒன்லி ‘ஆஃப் தி ரெக்கார்ட்’ நியூஸ்தான் ஓடிகிட்டு இருக்கு. எந்த யூடியூப் திறந்தாலும், எந்த விவாதங்களில் பார்த்தாலும் ஒன்லி ‘ஆஃப் தி ரெக்கார்ட்’, இந்த மாதிரிதான் தொடர்ந்து சொல்லிட்டு இருக்கீங்க. எதுவுமே அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கிடையாது. தேமுதிகவைப் பொறுத்தவரைக்கும் நாங்கள் எங்கள் கழகம் விரும்பியபடி கூட்டணி அமைச்சிருக்கிறோம். இன்னும் ஏற்கனவே கூட்டணியில் இருப்பவர்களுடனான பேச்சுவார்த்தை முடிந்து இறுதி கட்டத்தை இன்றோ நாளையோ அவங்க முடிவெடுத்துருவாங்க. அதற்குப் பிறகு தேமுதிகவையும் அழைப்பார்கள். அப்போ எங்களுடைய குழு ஐந்து பேர் கொண்ட குழு அங்க போய் நிச்சயம் கலந்துகொள்வோம். எங்களுக்கான அந்த தொகுதிகளைக் கேட்போம். அந்தத் தொகுதிகள் எங்கள் நிர்வாகிகள் விரும்பிய தொகுதியாக நிச்சயம் நாங்கள் உரிமையோடு கேட்டுப் பெறுவோம். அதில் நாங்கள் வெற்றியும் பெறுவோம் என்பதை இந்த நேரத்துல தெரிவிச்சுக்கிறேன். அதனால எங்களைக் கூப்ட்டு பேசல அப்படிங்கறதெல்லாம் கற்பனை செய்தி. அதெல்லாம் எதுவுமே கிடையாது. எல்லாரையும் முடிச்சுட்டு அவங்க அதாவது ஏற்கனவே அவங்களுடன் பயணித்தவர்களுடைய கூட்டணியை முடித்து, தேமுதிகவையும் இன்னும் ஓரிரு நாட்களில் அழைக்க இருக்கிறார்கள் என்பதையும் இந்த நேரத்தல் நான் தெரிவிச்சுக்கிறேன்.

கேள்வி: புதுச்சேரியில தனித்துப் போட்டியிடுறீங்களா?

பிரேமலதா: இல்லை.. நான்தான் தெளிவா சொன்னேன். நாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணி சார்பாக. திமுக-காங்கிரஸ் கூட்டணி, அந்த கூட்டணியில்தான் தேமுதிகவும் நிச்சயம் புதுச்சேரியிலும் போட்டியிடுகிறோம் என்பதை நான் தெளிவாகச் சொல்லிட்டேன்.

கேள்வி: எத்தனை மாவட்ட செயலாளர்கள் இன்னைக்கு வந்திருக்காங்க?

பிரேமலதா: ஒருத்தர் கூட ஆப்சென்ட் கிடையாது. அதற்குத்தான் முதல்லயே எங்க மாவட்ட செயலாளர்களுக்கு நான் பாராட்டு தெரிவிச்சுட்டேன். 100-க்கு 100% அத்தனை மாவட்ட செயலாளர்களும் இன்னைக்கு இங்க இருக்காங்க. ஒரே ஒரு மாவட்ட செயலாளர், அவங்களுடைய சித்தப்பா இன்னைக்கு மரணம். அதனால ஒருத்தர் மட்டும் அதுக்காக வரல, அவரு அதற்குரிய விளக்கம் கடிதம் கொடுத்துட்டாரு. 100-க்கு 100% எல்லாருமே இங்க இருக்காங்க, யாருமே ஆப்சென்ட் கிடையாது.

கேள்வி: புதுச்சேரியில நீங்க போட்டியிடுறதா சொல்லிருக்கீங்க. ஆனா காங்கிரஸ்-திமுக கூட்டணி இன்னும் உறுதியாகல, ஒரு சலசலப்பு போயிட்டு இருக்கு. நேத்து இரவுதான் பேச்சுவார்த்தை முடிஞ்சது. ஆனா தேமுதிகவுக்கு இடம் ஒதுக்கப்பட்டதா எந்த தகவலுமே வரலியே?

பிரேமலதா: திமுக கூட்டணியில போய் நாங்க கூட்டணி இறுதி செய்றோம்னு கடைசி நிமிஷம் வரைக்கும் உங்களுக்குத் தெரிஞ்சதா? அங்க அறிவாலயத்துல பார்த்த பிறகுதான் உங்களுக்கே தெரிஞ்சது இல்லையா? அதே மாதிரிதான் இதுவும். புதுச்சேரியில தேமுதிக சார்பாக யார் போட்டியிடுகிறார்கள் என்பது 3 மணிக்கு உங்களுக்குத் தெரிய வரும் என்பதை இந்த நேரத்துல தெரிவிச்சுக்கிறேன்.

கேள்வி: 5 பேர் கொண்ட குழு திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாகச் சொன்னீங்க… அந்த குழுவில் யார் யார் இருப்பாங்க?

பிரேமலதா: அது வந்து புதன்கிழமை தலைமை கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். அந்த ஐந்து பேர் கொண்ட குழு, அறிவாலயம் செல்வாங்க. அங்க பேசுவாங்க, எங்களுக்கான தொகுதிகளை நாங்கள் பெறுவோம்.

கேள்வி: எதையுமே நீங்கள் வெளிப்படையாக சொல்வீர்கள்…

பிரேமலதா: முதலிலேயே ஒரு ஐஸை வைத்து விட்டு அப்படி ஆரம்பிக்கிறீங்க, எதையுமே நீங்கள் வெளிப்படையாக சொல்வீர்கள் என்று. நான் எப்பவுமே எதுவுமே மறைக்கணும்ன்றது கிடையாது. ஏன்னா, மடியில கனமிருந்தாதான் வழியில பயம். தேமுதிகவை பொறுத்தவரைக்கும் எங்கள் மடியிலே எந்த கனமும் இல்லை, அதனால நாங்கள் சொல்வதில் எங்களுக்கு எந்த பயமும் இல்லை.

அதனால உங்ககிட்ட நான் சொல்றேன், எங்கள் மாவட்ட கழக செயலாளர்கள் எங்களுடன் 21 வருஷம் பயணிக்கக் கூடியவர்கள் தான். இந்த தேர்தல் என்பது அவங்களுக்கு ஒன்னும் புதுசு கிடையாது. எத்தனையோ தேர்தல்களை கேப்டனுடன் 2006-லிருந்து இப்போ 2026 வரைக்கும் சந்தித்தவங்கதான்.

புதுசாக அவங்களுக்கு நாங்கள் ஆலோசனை வழங்க வேண்டும் என்றோ, கருத்துக்கள் சொல்ல வேண்டும் என்பதோ எல்லாம் கிடையாது. வர இருக்கின்ற தேர்தலுக்கு நாம் எப்படி தயாரா இருக்கணும், நம் பணி என்ன, நமக்கு கிடைத்த அந்த தொகுதிகளை நாம் எப்படி வெற்றி பெற வேண்டும், களத்தில் நாம் எப்படி கள வீரர்களாக நம்மளை நிரூபிக்க வேண்டும், நாம் நமக்கு கிடைத்த அந்த தொகுதிகள் அத்தனையும் நாம் எப்படி வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற வியூகங்கள் நாங்க பேசியிருக்கோம்.

அதற்கு மாவட்ட கழக செயலாளர்களும் அவங்களுடைய கருத்துக்களைச் சொல்லியிருக்காங்க. எனவே நிச்சயமாக அவர்கள் கருத்துக்கள் அத்தனையும் நாங்க ஏற்றுக்கொண்டிருக்கிறோம். அதனால நல்ல வியூகம் அமைத்து எங்களுக்கு கிடைக்கின்ற அத்தனை தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெற அனைவரும் சேர்ந்து ஒன்றாக உழைப்போம், வெற்றி பெறுவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி: எத்தனை தொகுதிகள்? உத்தேச பட்டியல் எதுவும்?

பிரேமலதா: எங்களுக்கு 234 தொகுதிகளுமே தான் உத்தேச பட்டியல்ல இருக்கு. ஏன்னா 2006-லேயே தேசிய முற்போக்கு திராவிட கழகம் 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட ஒரு கட்சி. இங்க இருக்கிறவங்க முக்காவசி பேர் அப்பவே வேட்பாளர்கள் தான். அதனால நான் சொல்றேன், 234 தொகுதிகளுமே தேமுதிகவின் களமாக இருக்கிறது.

இருந்தாலும் இன்னைக்கு நாங்க ஒரு கூட்டணியில் இருக்கிறோம். அந்த கூட்டணியின்படி நாங்கள் அந்த குழு அமைத்து கூட்டணியோடு பேசி இறுதிக்கட்டமாக எங்களுக்கு தேமுதிகவுக்கு எந்த தொகுதிகள் கிடைத்திருக்கிறது என்பதை அதிகாரப்பூர்வமாக நாங்கள் அறிவிப்போம்.

கேள்வி: பொதுவாக தேர்தல் காலங்களில் விசுவாசமாக இருப்பவர்களுக்கு பதவி கிடைக்காது, பணம் இருப்பவர்களுக்கு தான் கிடைக்கும் என்ற பேச்சு உள்ளது. இந்த தேர்தலில் உங்கள் நிலைப்பாடு என்ன?

பிரேமலதா: மத்தவங்க எல்லாம் ஒரு ரூபாய் கூட செலவு பண்ணாமல் களத்தில் நிக்கிறாங்களா வேட்பாளர்கள்? அது எந்த கட்சியாக இருந்தாலும்… அரசியல் என்பது இங்க என்னன்னா, இன்னைக்கு தேர்தல் என்றாலே அதற்கு இன்னொரு மீனிங் பணம்.

ஆனா எங்க கட்சியை பொறுத்தவரைக்கும் அது மட்டுமே கிடையாது. நான் முதல் லைன்லயே எங்க நிர்வாகிகள் கிட்ட நான் சொல்லி இருக்கிறது, ஃபர்ஸ்ட் பிரையாரிட்டி விசுவாசம் இருப்பவர்களுக்கு தான் அந்த வாய்ப்பு வழங்கப்படும். அதுதான் நான் என்னுடைய ஃபர்ஸ்ட் பிரையாரிட்டியா நான் சொல்லி இருக்கேன்.

அதனால இங்க இருக்கிறவங்க ஏற்கனவே எம்.எல்.ஏ-க்களாக ஜெயிச்சவங்க, எல்லா மாவட்ட செயலாளரும் தேர்தல்களில் போட்டியிட்டவர்கள். அவங்களுக்கு தெரியும், ஒரு தேர்தல்னா எவ்வளவு செலவு வரும் என்பது அவங்களுக்கே தெரியும். அதனால அதை வந்து நாங்க சொல்லி தான் அவங்க தெரிஞ்சுக்கணும்ன்றது கிடையாது. எனவே இங்க விசுவாசத்திற்கு தான் முதல் இடம், அதுல மாற்றுக்கருத்து இல்லை.

கேள்வி: அதிமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பிரேமலதா: இன்னும் அது இறுதி ஆயிடுச்சா? எனக்கு அது கரெக்டா தெரியலங்க. அது இறுதின்றாங்க, மறுபடியும் பேச்சுவார்த்தை தொடங்குதுன்னு சொல்றாங்க. இன்னும் ஒரு வாரம் இருக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய. இந்த ஒரு வார காலத்துல மறுபடியும் எது வேணாலும் மாறலாம், சேரலாம், போகலாம் எல்லாமே இருக்கு. அதனால அது பற்றி எனக்கு எந்த கருத்தும் கிடையாது.

கேள்வி: மற்ற கட்சிகளுக்கு குறைவான தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக தகவல் வருகிறதே? தேமுதிகவுக்கு என்ன நிலைப்பாடு?

பிரேமலதா: எங்களுடைய நம்பர் ஆஃப் சீட்ஸ் அறிவிக்கும் போது அதற்கான அறிவிப்பை உங்களுக்கு நான் சொல்றேன். ஏன்னா தேமுதிக இன்னைக்கு தமிழ்நாடு முழுக்க மூன்றாவது மிகப்பெரிய அங்கீகரிக்கப்பட்ட கட்சி. ஏற்கனவே பல தேர்தல்களில் தனியாக களம் கண்டு 10 சதவீதத்திற்கும் மேல் வாக்கு சதவீதத்தை வாங்கி நிரூபிச்ச ஒரு கட்சி.

எதிர்க்கட்சி தலைவராக கேப்டன் அவர்கள் இருந்த ஒரு கட்சி. எங்களுடைய 29 சட்டமன்ற உறுப்பினர்கள் சென்று எதிர்க்கட்சியாக இருந்த ஒரு கட்சி. அதனால இன்றைக்கும் தமிழ்நாடு முழுக்க தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக பி.எல்.2 (BL2) ஃபார்மும், பூத் கமிட்டிகளையும் அமைத்து ஆண்ட கட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் நிகராக அனைத்து தொகுதிகளிலும் பூத் கமிட்டியை அமைத்து மிகப்பெரிய ஒரு கட்சியாக எங்கள் கட்சியை நிரூபிச்சிருக்காங்க எங்கள் கழக நிர்வாகிகள், தொண்டர்கள்.

அதனால எங்களுக்கான உரிமையை நாங்கள் சொல்லியிருக்கிறோம். அந்த நம்பர் உங்களுக்கு நாங்கள் அதிகாரப்பூர்வமாக சொல்லும் பொழுது, நீங்க கேட்கிற அத்தனை கேள்விக்கும் நான் பதில் சொல்றேன் – கேட்டது எவ்வளவு, விட்டுக் கொடுத்தது எவ்வளவு, பைனல் (Final) எவ்வளவு என்பது அன்னைக்கு உங்களுக்கு நான் சொல்றேன்.

கண்டிப்பா மற்றவர்கள் விட்டுக் கொடுக்கும் போது தேமுதிகவும் விட்டுக் கொடுக்கும், அதுல மாற்றுக்கருத்து இல்லை. ஒரு கூட்டணி சக்சஸ்ஃபுல்லா (Successful) போகணும் அப்படின்னா விட்டுக்கொடுக்கணும்ன்றப்போ அவங்க எல்லாம் ஒன்னு ரெண்டு விட்டுக்கொடுக்குறப்போ தேமுதிகவும் விட்டுக்கொடுக்கும்.

சோசியல் மீடியால? அதுவும் இருக்குங்க, சோசியல் மீடியாலயும் ஒரு பக்கம் இருக்கும். ஆனா தமிழ்நாடு தேர்தலை பொறுத்தவரை களத்திலே இறங்கி மக்களை நேரடியாக சந்திப்பதுதான் உண்மையான தேர்தல் பிரச்சாரம். அதுல நம்பர் ஒன் இடத்துல களத்திலே வீரர்களாக பணியாற்றியவர்கள் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் என்பது நிரூபிக்கப்பட்ட ஒரு விஷயம். அதனால நிச்சயமாக களத்திலே எங்களுடைய கழகத்தின் வெற்றி வீரர்கள் தங்களுடைய திறமையையும் நிச்சயமாக உழைப்பையும் நிரூபிப்போம் என்பதை தெரிவிச்சுக்கிறேன்.

கேள்வி: சோசியல் மீடியால கடந்த ஒரு வாரமா தேமுதிக பத்தின நெகட்டிவ் செய்திகள் வருதே?)

பிரேமலதா: பழுத்த மரம்தான் கல்லடி படும். நான் ஏற்கனவே இதைப் பற்றி நிறைய சொல்லிட்டேன். நான் யூசுவலா (usually) யூடியூப்ஸ் பாக்குறது கிடையாது. எங்க நிர்வாகிகளுக்கே அது தெரியும். இருந்தாலும் நீங்க கேக்குறதுனால நான் சொல்றேங்க, உண்மைக்கு புறம்பாக, அது வந்து .1% கூட உண்மை இல்லாத ஒரு விஷயத்தை அவங்க வந்து பரப்பிகிட்டு இருக்காங்க. ஏன்னா அவங்களுக்கு தேமுதிகவை பத்தி குறை சொல்றதுக்கு வேற எதுவுமே கிடையாது.

லஞ்ச ஊழல் வழக்கு இருக்கா? சொத்து குவிப்பு வழக்கு இருக்கா? கள்ளச்சாராய வழக்கு இருக்கா? குண்டர் சட்டத்துல கைது இருக்கா? ஏதாவது கனிம வள கொள்ளை வழக்கு இருக்கா? ஊழல் வழக்கு இருக்கா? இந்த மாதிரி ஏதாவது ஒரு குற்றம் தேமுதிக மேல யாராவது சுமத்த முடியுமா? ஒரு குற்றம்! 21 வருஷ கட்சி, 29 எம்.எல்.ஏ-க்களை ஜெயிச்சு தலைவர் எதிர்கட்சி தலைவரா சட்டசபைக்கு போன ஒரு கட்சி. ஒரே ஒரு பர்சன்ட் ஏதாவது தேமுதிக மேல யாராவது களங்கம் விளைவிக்க முடியுமா? முடியவே முடியாது.

அப்போ இந்த கட்சியை எப்படி அவமானப்படுத்தணும், எப்படி ஒரு நெகட்டிவா ப்ரோபகண்டா (propaganda) பண்ணணும் அப்படின்னு அவங்க யோசிக்கும் போது, அவர்களுக்கு தெரிந்தது ரெண்டே ரெண்டு விஷயம்தான். எப்படி கேப்டனை தவறானவரா, குடிக்கிறாரு, அடிக்கிறாரு, கோபப்படுறாரு அப்படின்னு சொல்லி அவரை அசிங்கப்படுத்தி, கேவலப்படுத்தி எப்படி அதை நெகட்டிவா மக்கள் கிட்ட கொண்டு போனாங்களோ, அதுபோல இன்னைக்கு என் மீதும் எங்கள் தலைமையின் மீதும் கழகத்தின் மீதும் குற்றம் சொல்லணும்னா ரெண்டுதான் சொல்ல முடியும் – ஒன்னு ‘பேரம்’ இல்ல ‘பெட்டி’. இதைத் தவிர வேற என்ன சொல்ல முடியும்? வேற சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லாததுனால இன்னைக்கு அதையே பிடிச்சு மறுபடியும் மறுபடியும் சொல்லிக்கிட்டு இருக்கறதுனால இன்னைக்கு மக்கள் தெளிவாயிட்டாங்க. அவங்க சொல்றதுல ஒரு பர்சன்ட் கூட உண்மை இல்லை என்பதை சொல்பவர்களுக்கே திருப்பி அறிவுரை சொல்லக்கூடிய அளவு அவங்க போடுற பதிவுகள் உண்மைக்கு புறம்பானவை என்பதை அவங்க போடுற செய்திகள் மூலமாகவே அவங்க நிரூபிச்சுட்டு இருக்காங்க.

ஏன்னா இது எங்க கட்சியில இருக்கிறவங்களுக்கு தெரியும். நாங்க ஒரு வண்டி வாங்கி ஒன்றரை வருஷத்துக்கு மேல ஆகுது, அதை ஏதோ திருப்பதிக்கு எடுத்துட்டு போனா அது இப்ப என்னமோ இப்பதான் வாங்குறோம்ன்றாங்க. என்னய்யா அப்போ ஒரு வண்டி வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்துக்கு இல்லையா? நான் கேக்குறேன், ஒரு கார் வாங்குற தகுதி ஒரு கேப்டன் குடும்பத்துக்கு இல்லையா? கொடுத்து கொடுத்து சிவந்த கரத்துக்கு சொந்தக்காரர் கேப்டன். தான் சம்பாதித்ததுல 90% மக்களுக்காக உதவி செய்தவர் கேப்டன். அவர் செய்யற ஒரு ஒரு உதவிக்கும் பின்னாடி இருந்தவள் நான் என்பது இந்த உலகம் அறியும்.

அதனால குறை சொல்ற வாய் குறை சொல்லிக்கிட்டு தான் இருக்கும், குரைக்கிற நாய் குரைச்சுக்கிட்டு தான் இருக்கும். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் தேமுதிகவுக்கோ எங்களுக்கோ கிடையாது என்பதை உறுதியாக நான் சொல்றேன்.

தேமுதிக .5% தான? அப்போ விட்ருங்க எங்களை, ஏன் பேசுறீங்க தேமுதிகவை பத்தி? .5 கட்சி, .5 கட்சி, இவங்களுக்கு எதுக்கு ராஜ்யசபா கொடுத்தாங்க, இவங்களுக்கு எதுக்கு எம்.எல்.ஏ சீட் இவ்வளவு கொடுக்குறாங்க – உங்களுக்கு தெரியுமா எவ்வளவு சீட் கொடுத்தாங்கன்னு?

ஒவ்வொரு விவாதத்திலும், ஒவ்வொரு யூடியூப்லயும் ஏன் அதை பத்தி விவாதிக்கிறீங்க? ஏன் விவாதிக்கிறீங்கன்னு நான் இன்னைக்கு கேட்கிறேன். .5 கட்சிதானப்பா? ஆமா, .5 தான், விட்ருங்க எங்களைன்னு நான் சொல்றேன். ஏன் விவாதத்துக்கு கொண்டு வர்றீங்க? தேமுதிக என்ற வார்த்தை இல்லாமல் எந்த யூடியூப்பாவது, எந்த விவாதத்திலாவது யாராவது இன்னைக்கு பேச முடியுமா? நீங்க குறை சொன்னாலும் தேமுதிக தான், வாழ்த்தினாலும் தேமுதிக தான், உயர்த்திப் பிடிச்சாலும் தேமுதிக தான். அதனால ‘வாழ்த்துவோர் வாழ்த்தட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் எல்லா புகழும் எங்கள் கேப்டனுக்கே’ தான் என்பதை இந்த நேரத்துல நான் சொல்றேன்.

கேப்டன் பார்க்காத புகழா? கேப்டன் மேல் விழாத விமர்சனங்களா? இனிமேல் நாங்க எங்க கட்சி புதுசா இனிமேல நாங்க பார்க்க வேண்டியது எதுவுமே இல்லை. எங்க தலைவர் இருந்த காலத்திலேயே 21 வருஷமா புகழ்ச்சியையும் பார்த்துட்டோம், அவமானங்களையும் சந்திச்சுட்டோம், துரோகங்களையும் சந்திச்சுட்டோம், எல்லாத்தையும் கடந்து வந்தவர்கள் தான் தேமுதிக. அதனால இது போன்ற உண்மைக்கு புறம்பான செய்திகளை நிச்சயமாக நாங்கள் எங்கள் கருத்தில் கொள்ள மாட்டோம்.

ஒரு நிமிஷம். எங்களுடைய மாவட்ட கழக செயலாளர் முகத்தில் பிரகாசம் இருக்கான்னு கேக்குறீங்களே, 1000 வாட்ஸ் பல்பு மாதிரி இருக்காங்க எங்க ஒவ்வொருத்தரும். அந்த பௌர்ணமி நிலவின் முகமாக எங்கள் மாவட்ட கழக செயலாளர் முகத்தை நான் பார்க்கிறேன். அதனால நீங்க நினைக்கிற மாதிரி இந்த கட்சியை வந்து ஏதாவது உடைச்சிரலாம், ஏதாவது பண்ணலாம்ன்னா அதுக்கு தேமுதிக-வில் இடமில்லை என்பதை எங்கள் மாவட்ட கழக செயலாளர்கள் நிரூபிப்பாங்க.

கேள்வி: சமீபத்தில் நடந்த கருத்துக்கணிப்பில் எல்லாம் திமுக கூட்டணி வெற்றி பெறும் என வந்திருக்கிறது. இருந்தாலும் மக்கள் மத்தியில் திமுகவிற்கு எதிர்ப்பு அதிகமாக இருக்கிறது என எதிர்க்கட்சிகள் பேசி வராங்க. மக்கள் மாற்றத்தை விரும்புவதாக அவர்கள் பேசி வராங்க.

பிரேமலதா: எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் எதிர்கருத்து தான் சொல்லுவாங்க. பின்னே வாழ்த்தியா பேசுவாங்க? இது வந்து இயல்புதானுங்க. யாருமே ஒரு அஞ்சு வருஷம் ஆட்சி செய்தால், அந்த ஆட்சியின் மீது இருக்கின்ற குறைகளை மக்களும் சுட்டிக்காட்டுவாங்க, நாங்களும் பல்வேறு முறை சுட்டிக்காட்டி இருக்கிறோம். எதிர்க்கட்சியில் இருப்பவர்களும் சுட்டிக்காட்ட தான் செய்வாங்க. இது வந்து இயல்பு. அதனால அவங்க சொல்றது தான் 100% உண்மைன்னு இல்ல. அதனால இன்னைக்கு மத்தியில் அவங்க ஆட்சி 15 வருஷமா நடக்குது, அங்கேயும் பல்வேறு மக்கள் வந்து அவங்க மேலயும் பல்வேறு குற்றச்சாட்டுகளை சொல்லிட்டு தான் இருக்காங்க. அதற்கு அவங்க பதில் சொல்லட்டும். சமீபமாக சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இதற்கு அவர் பதில் சொல்லட்டும்ங்க. அதற்கு பிறகு மற்றவர்களைப் பற்றி அவர்கள் விமர்சனம் செய்யட்டும்.

கேள்வி: தேர்தல் பரப்புரையில் எதை மையப்படுத்தி பேசுவீங்க? ஏற்கனவே நீங்க உள்ளாட்சி தேர்தலில் பரப்புரை மேற்கொண்டீர்கள். ஆளுங்கட்சி மீது குற்றம் சாட்டினீர்கள். இப்போ நீங்க ஆளுங்கட்சி கூட்டணியில் இருக்கும்போது உங்க தேர்தல் பரப்புரை எதை மையப்படுத்தி இருக்கும்?

பிரேமலதா: தேர்தல் பரப்புரை இன்னும் ஒரு வாரத்தில் ஆரம்பிக்க இருக்கிறோம். உங்களுக்கே தெரியும் என்னுடைய தேர்தல் பரப்புரை எப்படி இருக்கும்னு நீங்க 21 வருஷமா பார்த்துட்டு தான் இருக்கீங்க. எங்களுடைய தேர்தல் பரப்புரை தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்காகவும் ஒரு நல்ல திட்டங்களை வடிவமைத்து சொல்வதாகவும், எங்கள் கூட்டணியில் இருக்கும் திமுக கொடுக்கின்ற தேர்தல் அறிக்கையை ஒட்டியும், எங்கள் வேட்பாளர்கள் போட்டியிடும் அந்த தொகுதிக்கு உரிய தேவைகளையும் நாங்கள் மையமாகக் கொண்டு இந்த தேர்தலிலே மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் நாங்கள் பேசுவோம்.

கேள்வி: விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறாரா?

பிரேமலதா: நான் ஏற்கனவே அதை சொல்லியிருக்கேனே, அத்தனை மாவட்ட செயலாளர்கள் விருப்பமும் அதுவாக இருக்கு. இன்னைக்கு பேசுனவங்களுடைய விருப்பமும் அதுவாக இருக்கு. அவர் ஏற்கனவே எம்பி தொகுதியில் அதாவது விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அந்த வெற்றி பறிக்கப்பட்டதும் எல்லோருக்கும் தெரிந்த ஒரு உண்மை. அதனால நிச்சயமாக அவர் போட்டியிடுகிறாரா இல்லையா என்பதை எங்கள் மாவட்ட கழக செயலாளர்கள் எல்லாரோடும் நாங்க பேசி உரிய நேரத்தில் உங்களுக்கு அறிவிக்கிறோம்.

கேள்வி: கேப்டன் விஜயகாந்த் வெற்றி பெற்ற தொகுதிகளில் விஜய பிரபாகரன் போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் ஆசைப்படுகிறார்களே?

பிரேமலதா: அத நீங்களே சொல்றீங்க, கேப்டன் வெற்றி பெற்ற தொகுதி இரண்டு, கேப்டன் சார்பாக வெற்றி பெற்றவர்கள் 28 பேர். அதனால 234 தொகுதியிலும் நான் போட்டியிடணும்னு விருப்பமனு கொடுத்தவங்கல நிறைய பேர் எழுதிக் கொடுத்திருக்காங்க. சோ என்னை பொறுத்தவரைக்கும் நான் 234 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டிய ஒரு வேட்பாளர் என்பது தான் எங்கள் மாவட்ட கழக செயலாளர்களுடைய விருப்பம். இங்க இருக்கிறவங்க எல்லாரும் என்ன கேட்கிறாங்க? எங்க மாவட்டத்தில் போட்டியிடுங்க, எங்க மாவட்டத்தில் போட்டியிடுங்கனு ஒவ்வொருத்தருமே இங்க சொல்றாங்க. அதனால கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, நிச்சயமாக எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறோம், நான் மட்டும் இல்ல எங்க கழகத்தைச் சேர்ந்த அனைவரும் யார் யாருக்கு எந்த தொகுதி என்பது இன்னும் ஒரு நாலஞ்சு நாளில் உங்களுக்கு அதிகாரப்பூர்வமாகவே நாங்க அறிவிப்போம்.

கேள்வி: போதைப்பொருள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பிரேமலதா: இல்ல இல்ல அது ரொம்ப ரொம்ப கண்டிக்கக்கூடிய ஒரு விஷயம். தொடர்ந்து என்னுடைய அறிக்கைகளை நீங்க பார்த்துட்டு இருக்கீங்க. மகளிர் தினம் அன்னைக்கு கூட நான் என்னுடைய இதே மாதிரி ஒரு பிரஸ் மீட்ல என்னுடைய கடுமையான கண்டனத்தை பெண்களுக்கு எதிராக பேசுபவர்கள் யாராக இருந்தாலும், இதோட உங்களுடைய பேச்சுகளை பெண்களை அவமானப்படுத்தும் செயல்களை நிறுத்திக்கணும் அப்படின்னு என்னுடைய பர்த்டே செய்தியா சொல்லியிருக்கேன். என்னுடைய பிறந்தநாளையே பெண்களுக்கு உரிய நாளாக நான் அறிவிச்சிருக்கிறேன். எனவே பெண்களுக்கு எந்த ஒரு பாலியல் வன்கொடுமையோ, தீண்டலோ எந்த ஒரு தவறுகளோ நடந்தால் தேமுதிக முதல் ஆளாக களத்தில் இறங்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் யாருக்கும் எப்பொழுதும் தேவையில்லை. நானே ஒரு பெண் தலைவி, என்னுடைய முழு சப்போர்ட் லேடீஸ்க்கு என்னைக்கு உண்டு என்பதை தெரிவிச்சுக்குறேன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share