ADVERTISEMENT

டிஜிட்டல் திண்ணை: அதிரடி காட்டும் ஸ்டாலின்! விடாது விரட்டும் அமித்ஷா- ஓடவும் ஒளியவும் முடியாத விஜய்.. ‘அதீத’ ஆட்டம் ஆடும் ராகுல்!

Published On:

| By Mathi

DT New Image

வைஃபை ஆன் செய்ததும், ”செல்வழி திசையேது?செவ்வாய்மேனியோனே.. தாழ் திறவாயோ திறவாயோ” என பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னய்யா ஒரே ‘தெய்வீக மணம்’ கமழுதே…

ADVERTISEMENT

வேற என்னய்யா செய்யுறது.. இதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு ‘என்ன நடக்குதுன்னே புரியலையே’ன்னு ஒவ்வொரு திசையிலும் ஒவ்வொரு தகவலா வருதே..

என்னய்யா.. அதிமுக- பாஜக கூட்டணியில ஜரூரா எல்லாம் சேருறாங்களே.. நீங்க புரியலையேன்னு சொல்றீரு?

ADVERTISEMENT

அதிமுக- பாஜக கூட்டணியில அன்புமணி பாமக, தினகரன் அமமுக சேர்ந்திருக்கு.. ஏற்கனவே வாசன் தமாகா அங்கதான் இருக்கு.. தேமுதிக வருது.. பியூஷ் கோயல் பேசப் போறாருன்னும் சொன்னாங்க.. இருந்தாலும் அப்படி நடக்கலையே..

இதை பத்தி பாஜக சீனியர்ஸ்கிட்ட பேசுனப்ப, “தேமுதிக 10 அசெம்பிளி சீட்+ 1 ராஜ்யசபா சீட்+ மத்திய இணை அமைச்சர் பதவி கேட்குதுன்னு நீங்க எழுதி இருந்தீங்க..இப்ப பேச்சுவார்த்தையும் அந்த அளவுக்குதான் நிக்குது.. இங்க வந்துருக்கிற பியூஷ் கோயல்ஜி இன்னமும் பிரேமலதா கிட்ட பேசலை.. இதுக்கு காரணம் அமித்ஷாஜிதான்..

ADVERTISEMENT

பிரேமலதாகிட்ட பேசி சீட் நம்பர்ஸை எதுவும் கமிட் பண்ணிக்க வேணாம்னு சொல்லி இருக்கிறாரு அமித்ஷாஜி.. இதை பத்தி நாங்களும் கேட்டப்பதான், அமித்ஷாஜி சைடுல விஜய்கிட்ட தொடர்ச்சியாக பேசிகிட்டு இருக்காங்க.. அதனால விஜய் தரப்புல முடிவு சொல்றவரைக்கும் தேமுதிகவை வெயிட் பண்ணுங்கன்னு சொல்லிட்டாங்க..

நீங்க கூட அமித்ஷாஜி சார்பாக சில அதிகாரிகள் விஜய்கிட்ட பேசுறாங்கன்னு சொல்லி இருந்தீங்களே அந்த அதிகாரிகள்தான் கூடுதலா சில விஷயங்களையும் விஜய்க்கு பாஸ் செஞ்சிருக்காங்க..

அதாவது, “நீங்க (விஜய்) கூட்டணிக்கு உள்ளே வாங்க.. இப்ப வரைக்கும் NDA சிஎம் கேண்டிடேட்டுன்னு நாங்க யாரையும் அறிவிக்கலை.. நீங்களும் கூட்டணிக்கு உள்ள வந்து எல்லோரும் சேர்ந்து தேர்தலை சந்திப்போம்..

எலக்‌ஷன் முடிஞ்சதுக்கு அப்புறமா சிஎம், டெபுட்டி சிஎம்னு மத்ததை எல்லாம் பேசிக்கலாம்..

நீங்க கேட்கிற சீட்டையும் தர்றோம்.. எலக்‌ஷனுக்கான செலவுன்னு மத்த விஷயங்களையும் நாங்களே பார்த்துக்கிறோம்.. நீங்க சொல்றவங்களுக்கு வேற ஸ்டேட்டில் இருந்து கூட ராஜ்யசபா எம்பி பதவியும் தர்றோம்..”னு பேசியிருக்காங்க..

இதுக்கு விஜய்கிட்ட இருந்து பைனல் ரிசல்ட் வரட்டும்னு வெயிட் பண்றாங்க.. அதனாலதான் பிரேமலதாகிட்ட பேசி கமிட் பண்ணிட வேண்டாம்னு பியூஷ் கோயல்ஜி கிட்ட அமித்ஷாஜி சொல்லி இருக்காரு”என்கின்றனர்.

சரிய்யா.. அமித்ஷா ஆஃபருக்கு விஜய் ரியாக்சன் என்னவாம்?

அமித்ஷா தரப்புல பேசுறதை பத்தி விஜய்யும் சீரியசா டிஸ்கஷன் நடத்தி இருக்காரு.. இதை பத்தி தவெக தரப்புல நாம கேட்டப்ப, “அமித்ஷா தரப்புல பேசிகிட்டுதான் இருக்காங்கன்னு தளபதி (விஜய்) சொன்னாரு.. ஆனா எந்த முடிவும் நாம இப்போதைக்கு எடுக்க வேண்டாம்.. ஏன்னா நம்மகிட்ட ராகுல் காந்தியும் பேசிகிட்டு இருக்காரு.. ராகுல் காந்தி ’பைனலா’ சொல்றதை வெச்சு நாம பாஜக- அதிமுக கூட்டணிக்கு போறதா? தனித்தே போட்டியிடறாதா?ன்னு முடிவு செய்வோம்.. அதுவரைக்கும் கூட்டணியை பத்தி யாரும் எங்கேயும் பேசாதீங்க”ன்னும் தளபதி ஸ்டிராங்கா சொல்லி இருக்காரு சார்” என்கின்றனர்.

இப்ப கூட, விஜய்க்கு டெல்லியில இருந்து குட் நியூஸ் கிடைச்சிருக்கே..

அது என்னய்யா விஜய்க்கு கிடைச்ச குட் நியூஸ்?

விஜய்க்கு ரொம்பவே பிடிச்ச, அவரு கேட்ட விசில் சின்னத்தை எலக்‌ஷன் கமிஷன் ஒதுக்கி கொடுத்துருக்கு.. விஜய் விசில் சின்னம் கேட்கிறாருன்னு நாம 5 மாசத்துக்கு முன்னாடியே சொன்னோம்.. போன மாசமும் கூட எலக்‌ஷன் கமிஷன் விஜய்க்கு விசில் சின்னம் தர முடிவு செஞ்சிருச்சுன்னும் சொன்னோம்.. விஜய்க்கு என்ன வேணும்னாலும் டெல்லி செஞ்சு தரும்னு சொல்ற சிக்னல்தான்யா இதுன்னும் சொல்றாங்கப்பா…

அப்படியா.. திமுக- காங்கிரஸ் கூட்டணி என்ன லெவல்ல இருக்கு? ராகுல் காந்தி என்ன முடிவுல இருக்கிறாராம்?

திமுகவோட சீனியர்ஸான டிஆர் பாலு, கனிமொழி ரெண்டு பேரும் டெல்லி போயிருந்தாங்க..

டெல்லியில நடந்த மத்திய அரசின் உறுதி மொழிகள் குழு கூட்டத்துல கனிமொழி கலந்துகிட்டாங்க.. பொதுக் கணக்கு குழு கூட்டத்துல டிஆர் பாலு கலந்துகிட்டாரு.. அப்படியே ராகுல் காந்தி தரப்புல சிலர்கிட்டேயும் ரெண்டு பேரும் பேசியிருக்காங்க

பொதுவாகவே திமுக சீனியர்ஸ் என்ன சொல்றாங்கன்னா, “சோனியா காந்தி ஒப்பீனியன் நம்ம கூடத்தான் காங்கிரஸ் இருக்கனும் அப்படிங்கிறதுதான்.. அதனால காங்கிரஸ் நம்மை விட்டு போகாது.. இப்படி பேசுறது எல்லாமே சீட்டை அதிகமா வாங்கத்தான்.. நாமும் பேச்சுவார்த்தை குழு அமைச்சு பேசுனாவே எல்லாமே சரியாகிடும்”னு நம்பிக்கையா இருக்காங்க..

ஏற்கனவே டெல்லிக்கு போன சபரீசன் ராகுல்- கார்கேவை சந்திச்சு பேசுனாரு..அப்பவே, 25-ல் இருந்து 28 சீட் வரைக்கும் கொடுக்கிறோம்.. அதிகபட்சம் 30 சீட் வரைக்கும் கூட நாங்க ரெடிதான்.. ஆனா அமைச்சரவையில மட்டும் பங்கு இல்லை”ன்னு உறுதியா சொல்லப்பட்டிருந்தது..

இப்பவும் ஸ்டாலின் சைடுல இருந்து ராகுல் காந்திக்கு வேண்டியவங்களுக்கு ஒரு மெசேஜ் போயிருக்காம்.. அதுல, காங்கிரஸ் கட்சிக்கு துணை சபாநாயகர் பதவி தர்றோம்.. 5 வாரியங்களும் கொடுக்கிறோம்.. அரசு நியமன பதவிகளில் குறிப்பிட்ட பெர்சண்டேஜ்
தருவோம்.. உள்ளாட்சி தேர்தலிலும் அதிகமான இடங்களை ஒதுக்குறோம்..”னு சொல்லியாச்சு.. அடுத்து அவங்கதான் முடிவு எடுக்கனும்” என்கின்றனர்.

ஓ.. திமுகவும் அடுத்தடுத்து ஆஃபர் அள்ளிதான் தருது போல.. சரி ராகுல் காந்திக்கு என்னதான் தயக்கமாம்? ஏன் இந்த இழுபறியாம்?

எல்லாத்துக்குமே காரணம் பனையூர் பங்களாதானாம்.. ஆமாய்யா விஜய்யைதான் சொல்றாங்கய்யா..

இதை பத்தி காங்கிரஸ் சீனியர்ஸ்கிட்ட பேசுனோம்.. அவங்க, “ராகுல்ஜியும் விஜய்யும் பேசிகிட்டுதான் இருக்காங்க.. எங்களுக்கு 100 சீட் தர்றோம்.. துணை முதல்வர் பதவி கொடுக்கிறோம்..”னு விஜய் ஆஃபர் கொடுத்திருக்காரு.. இதுதான் பேஸிக்கா ராகுல் காந்தியோட தயக்கத்துக்கும் யோசனைக்கும் காரணம்.

ஏன்னா ராகுல்ஜி நினைக்கிறது 2 விஷயங்கள்தான் சார்..

ஒன்னு திமுகவுடன் கூட்டணியில நீடிச்சா, திமுகவோட வெற்றிதான் உறுதியாகும்.. ஆனாலும் எங்களுக்கு ஆட்சியில பங்கு கிடைக்காது..

அதேநேரத்துல விஜய் கொடுத்த ‘ஆஃபரை’ ஏத்துகிட்டு கூட்டணிக்கு போனா, 100 தொகுதிகளில்ல காங்கிரஸ் கட்சி ரீச் ஆகும்.. விஜய்க்கும் அதிகமா செல்வாக்கு வளர்ந்துகிட்டு இருக்கு..

அதுவும் கரூர் சம்பவத்துல திமுக அரசும் ஜனநாயகன் பட விவகாரத்துல மத்திய பாஜக அரசும் விஜய்யை பழிவாங்குறாங்கன்னு அனுதாபமும் அதிகமாக இருக்கு..

இதனால விஜய்யோட செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகமாகுதுன்னுதான் சர்வே ரிப்போர்ட்ஸ் போயிருக்கு.. இதுவும் காங்கிரஸுக்கு நல்லதுதானே.. ன்னு ராகுல்ஜி நினைக்கிறாரு..

இப்படி எல்லா தரப்பு ஆப்ஷன்களையும் மண்டைக்குள்ள ராகுல் காந்தி போட்டு வெச்சிருக்கிறதால திமுகவை ‘மண்டை காய’ வெச்சிகிட்டு இருக்கிறாரு” என்கின்றனர்.

அதனால்தான்யா நான் சொன்னேன்.. இதுவரை இப்படி ஒரு தேர்தல் நிலைமையே இருந்ததே இல்லை.. எல்லா சைடுல இருந்தும் ஒரே குழப்பமாவே இருக்குய்யான்னு…

இப்ப சிஎம் ஸ்டாலின் என்ன சொல்றாராம்?

சிஎம்மை பொறுத்தவரைக்கும் இவ்வளவு தூரம் நாம பேசிப் பார்க்கிறோம்.. காங்கிரஸ் ரொம்பவே பிடிவாதம் பிடிக்குதுன்னே ரொம்பவே அப்செட்டுல இருக்கிறாராம்..

நம்ம கிட்ட பேசுற திமுக சீனியர் அமைச்சர்களும், ”காங்கிரஸ் போனா போகட்டும் சார்.. எலக்‌ஷனுல காங்கிரஸ் நிக்குற சீட்டுக்கும் நாங்கதான் செலவு செய்யுறோம்.. அந்த செலவை எங்க கேண்டிடேட்டை நிறுத்தி செஞ்சுடுவோம்னு சிஎம்கிட்ட சொல்லி இருக்கிறோம்..” என்கின்றனர்.

அதே நேரத்துல திமுகவை தொடர்ந்து ஆதரிப்பவர்கள்- ஜெயிக்கனும்னு நினைக்கிறவங்க ஒரு ஒப்பீனியன் சொல்றாங்க.. “எலக்‌ஷன்ல ஒரு கட்சிக்கான முதல் வெற்றிங்கிறதே எப்படி கூட்டணி அமைக்கிறோம் அப்படிங்கிறதுலதான் இருக்கு.. இப்ப இருக்கிற கூட்டணி சிதையாம தக்க வைச்சுகிட்டாலே திமுகவுக்கு முதல் வெற்றி கிடைச்சிருச்சுன்னு நினைக்கலாம்.. வாக்குகளை வாங்குறது எல்லாம் எலக்‌ஷன் ஒர்க்கைப் பொறுத்து.. அது அடுத்ததாக கிடைக்கிற வெற்றிதான்.. அதனால கூட்டணியை ரொம்ப கவனமாக திமுக தலைமை சமன் செய்யனும்.. சரி செய்யனும்”னு சொல்வதாக டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share