பிரின்ஸ் அண்ட் பேமிலி : விமர்சனம்!

Published On:

| By uthay Padagalingam

dhileep prince and family movie review may 2025

திலீப் 150 ’எப்பூடி’ இருக்கு..?!

புதிதாக வெளியான சில திரைப்படங்களைப் பார்க்க உட்கார்ந்தால் ஏற்கனவே பல முறை பார்த்த உணர்வு உடனடியாக உருவாகும். அதிலிருந்து மீண்டு வருவதற்குள், படம் முடிந்து தியேட்டரில் இருந்து வெளியேற வேண்டியதிருக்கும். அப்படியொரு உணர்வு உருவாகி, பிறகு அதிலிருந்து விடுபட்டு, ‘ஆஹா சூப்பர்’ என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதெல்லாம் 45 டிகிரி சாய்கோணத்தில் இருக்கிற மலைப்பாதையில் சரசரவென்று கீழ் நோக்கி ஓடி வருவதற்கு ஒப்பானது. dhileep prince and family movie review may 2025

கிட்டத்தட்ட அப்படியொரு அனுபவத்தை வழங்குகிறது ‘பிரின்ஸ் அண்ட் பேமிலி’ மலையாளத் திரைப்படம். டீசர், ட்ரெய்லர், லிரிக் வீடியோ என்று எது குறித்தும் நினைவின்றி நேராக தியேட்டருக்குள் சென்றதால் கிடைத்தது அந்த அனுபவம்.

இதில் நாயகனாக திலீப் நடித்திருக்கிறார். அவரது 150வது திரைப்படம் இது. அவரது ஜோடியாக நடித்திருக்கிறார் புதுமுகமான ரனியா ராணா. சித்திக், தியான் சீனிவாசன், பிந்து பணிக்கர், ஜானி ஆண்டனி, மஞ்சு பிள்ளை, அஸ்வின் ஜோஸ், ஜோஸ்குட்டி ஜேக்கப், மீனாட்சி மாதவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் எழுத்தாக்கத்தை ஷரியாஸ் முகம்மது கையாண்டிருக்கிறார். பிண்டோ ஸ்டீபன் இதனை இயக்கியிருக்கிறார்.

திலீப்பின் 150வது படம் அவரது வழக்கமான பாணியில் இருந்து விலகி எந்த வகையில் வித்தியாசமான திரையனுபவத்தைத் தருகிறது?

விளாக்கர்களை விளாசும் கதை! dhileep prince and family movie review may 2025

பேபி – ஜான்சி (சித்திக், பிந்து) தம்பதியரின் மூத்த மகன் பிரின்ஸ் (திலீப்). பேஷன் டெக்னாலஜி படித்துவிட்டு உள்ளூரில் ஒரு டிசைனர் பொட்டீக் வைத்து நடத்துகிறார். அவருக்குத் திருமணத்திற்காக வரன் பார்த்து வருகின்றனர். ஆனால், அவர் விதிக்கிற நிபந்தனைகளுக்கு உட்படாமல் பல வரங்கள் கை நழுவிச் செல்கின்றன.

அதற்குள், இளைய சகோதரன் ஷின்ஸ் (ஜோஸ்குட்டி) காதல் திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தைக்குத் தந்தையாகிறார். அவரது மனைவி இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமக்கிறார்.

இன்னொரு சகோதரனான ஜின்ஸ் (தியான்) திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. அவருக்கு ஒரு பெண் நிச்சயிக்கப்படுகிறார்.

இத்தனைக்கும் மத்தியில், ‘தனக்கு ஒரு பெண் அமைய வேண்டும் என யாருமே கவலைப்படவில்லையே’ என வருந்துகிறார் பிரின்ஸ்.

படத்தின் கதையும் இதில்தான் தொடங்குகிறது.

சில நாட்கள் கழித்து, பிரின்ஸ் ஒரு வங்கியில் வேலை செய்யும் பெண் அன்னாவைக் (மீனாட்சி மாதவி) காண்கிறார். கண்டதும் காதலில் விழுகிறார். அவருக்கு உதவிகள் செய்ய ஓடோடிச் செல்கிறார்.

ஒருநாள் அவரிடம் தனது காதலைத் தெரிவிக்கச் செல்கிறார். ஆனால், அப்பெண் சொல்கிற விஷயம் பிரின்ஸை மயக்கமுறச் செய்கிறது. அப்படி அவர் என்ன சொன்னார் என்பது சஸ்பென்ஸ்.

பிறகு ‘இனி கல்யாணம் குறித்த கனவுகளே வேண்டாம்’ என்று பிரின்ஸ் பெங்களூருவுக்குப் புறப்படுகிறார். அந்த நேரத்தில், ஒரு வரன் குறித்த தகவல் அவரது மெயில் ஐடிக்கு வருகிறது. கொஞ்சம் குழப்பம் உண்டானாலும், அப்பெண்ணோடு பேசுவது என்று முடிவு செய்கிறார்.

மொபைலில் அழைத்தவுடன் அவரது உறவினரே பேசுகிறார். ‘பெண் கொஞ்சம் கூச்ச சுபாவம் என்பதால் தூரத்தில் இருந்து பார்த்துவிட்டுச் செல்லத் தயாரா’ என்கிறார். உடனே ‘நானும் அப்படித்தான்’ என்று சொல்லிவிட்டு, அப்பெண்ணைப் பார்க்கப் புறப்படுகிறார்.

அந்த பெண் பெயர் சிஞ்சு எல்சா ராணி (ரனியா ராணா). அவரைப் பார்த்தவுடன் பிரின்ஸுக்கு பிடித்துப் போகிறது. திருமணம் செய்யச் சம்மதிக்கிறார்.

நிச்சயதார்த்தம் நடக்கிற நாளன்று குடும்பத்தினருடன் அவரது வீட்டிற்குச் செல்வதுதான் பிரின்ஸின் திட்டம். ஆனால், நண்பர் கேகே (ஜானி ஆண்டனி) குட்டையைக் குழப்புகிறார்.

‘நாமே நேரில் சென்று கண்டு, அவரிடம் பேசிய பிறகு குடும்பத்தினரிடம் தகவல் சொல்வோம்’ என்கிறார். உடனே, கேகேவை அழைத்துக்கொண்டு சிஞ்சுவின் வீட்டிற்குச் செல்கிறார் பிரின்ஸ்.

இதுவரை இந்தக் கதையில் எந்தவொரு புதிய விஷயமும் இல்லைதான். ஆனால், சிஞ்சுவின் வீட்டிற்கு பிரின்ஸ் சென்றபிறகு ஒரு பிரளயமே நிகழ்கிறது.

அங்கு பிரின்ஸ் சென்றவுடன், சிஞ்சு யார் என்ற உண்மை மொத்தக் குடும்பத்திற்கும் தெரிய வருகிறது.

வேறொன்றுமில்லை, பெண் பார்க்கச் சென்ற இடத்தில் பிரின்ஸிடம் தனியே பேச விரும்புகிறார் சிஞ்சு. அதற்கு பிரின்ஸும் உடன்படுகிறார்.

இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே, ‘என்னை உங்களுக்குப் பிடிச்சிருக்கா’ என்கிறார் சிஞ்சு. பிரின்ஸும் ‘ஆம்’ என்கிறார். அடுத்த நொடியே தன் கையிலிருக்கும் மொபைல் போனை எடுத்து ‘லைவ்’வில் அந்த தருணத்தை ஒளிபரப்பத் தொடங்குகிறார்.

ஆம், ‘சிஞ்சு ஒரு வெற்றிகரமான விளாக்கர்’ என்ற விஷயம் அப்போதுதான் பிரின்ஸுக்கு தெரிய வருகிறது. உண்மையைச் சொன்னால், சொந்த வாழ்வின் முக்கியத் தருணங்களைச் சமூகத்தோடு பகிர்ந்து கொள்கிற விளாக்கர்கள் பற்றிய ‘ஆனா ஆவன்னா..’ கூட அவருக்குத் தெரியாது.

ஆனால், சிஞ்சு உடன் திருமணம் முடிந்த பிறகு அந்த உலகின் அத்தனை விஷயங்களும் அவருக்கு அத்துபடியாகிறது. ஆம், இருவருக்கும் திருமணம் முடிகிறது.

அதன்பிறகு பிரின்ஸ் குடும்பத்தில் நடக்கிற களேபரங்களும், அதில் ஒளிந்திருக்கிற சிஞ்சுவின் கைங்கர்யங்களும் தான் மீதிக்கதை.

சரியாகச் சொன்னால், ‘விளாக்கர்களை விளாசித் தள்ள வேண்டும்’ என்று பொருமிக் கொண்டிருப்பவர்களின் மனதில் பால் வார்க்கிற விதமாக அமைந்திருக்கிறது இப்படத்தின் கதை.

தனக்கென்று ஒரு கூடு என வாழ்கிற ஒரு பறவையாக இருக்க நினைக்கும் ஒருவர், தனது மனைவிக்காகச் சமூகவலைதள ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிறார். கோமாளிச் சேட்டைகள் செய்கிறார். ‘ட்ரெண்டிங்’கில் இருக்க வேண்டும் என்ற போர்வையில் நிகழ்கிற ‘குட்டி’ சேட்டைகளை கண்டும் காணாமாலும் இருக்கிறார். அதன் விளைவுகளைச் சொல்லியிருக்கிற விதமே இப்படத்தின் யுஎஸ்பி.

படம் எப்பூடி..?! dhileep prince and family movie review may 2025

கிட்டத்தட்ட இடைவேளை வரை நம்மை அயர்ச்சியுறச் செய்யும் அனுபவங்களைத் தந்துவிட்டு, சட்டென்று ரோலர்கோஸ்டரில் ஏற்றிவிடுகிற வேலையைச் செய்திருக்கிறார் கதை திரைக்கதை வசனத்தைக் கையாண்டிருக்கும் ஷரியாஸ் முகம்மது. dhileep prince and family movie review may 2025

திலீப் ஏற்கனவே நடித்த சில வெற்றிப் படங்களைப் போலவே, காமெடி கலந்த செண்டிமெண்ட் படம் பார்க்கிற உணர்வைத் தருகிறது ‘பிரின்ஸ் அண்ட் பேமிலி’. ஆனால், ‘யதார்த்தம்’ என்று எண்ணுகிற வகையிலான திரைக்கதையாக்கத்தைக் கையாண்டிருந்தால் இப்படம் இன்னும் சில உயரங்களைத் தொட்டிருக்கும். லாஜிக் மீறல்களை நியாயப்படுத்துகிற வேலைகள் நிகழ்ந்திருக்கும்.

அது ‘மிஸ்’ ஆகியிருப்பது வருத்தம் தரும் விஷயம் தான்.

கேரளாவில் உள்ள பசுமைப் பிரதேசங்களை அழகுறக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரெனதிவே.

கொஞ்சம் கூடக் குழப்பம் வந்திடக் கூடாது என்ற மெனக்கெடலோடு படத்தைத் தொகுத்திருக்கிறார் சாகர் தாஸ்.

கொஞ்சம் மெலடி, கொஞ்சம் குத்து டான்ஸ் என்று கலந்து கட்டிய அனுபவத்தைத் தனது பாடல்கள் வழி தந்திருக்கிறார் இசையமைப்பாளர் சனல் தேவ். பின்னணி இசை படத்தின் காட்சியமைப்போடு ஒன்றுகிற வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

இது போக விஎஃப்எக்ஸ், டிஐ என்று சில அம்சங்கள் இதில் குறிப்பிடும்படியாக உள்ளன.

என்னதான் ‘சினிமாத்தனம்’ நிறைந்த திரைக்கதை ட்ரீட்மெண்ட் என்றபோதும், பளிச்சென்ற ஒப்பனை திரையில் தெரியக்கூடாது என்று மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர் பிண்டோ ஸ்டீபன்.

போலவே, நடிப்புக்கலைஞர்களின் பாவனைகளையும் அதற்கேற்ப கையாண்டிருக்கிறார்.

நடிப்பைப் பொறுத்தவரை, தான் ஒரு நல்ல நடிகர் என்பதை இதில் மீண்டும் நிரூபித்திருக்கிறார் திலீப். தொடக்கத்தில் வரும் சில காட்சிகளில் அவரது நடிப்பு எரிச்சலூட்டினாலும், க்ளிஷேவாக தெரிந்தாலும், பின்பாதியில் அதற்குச் சேர்த்து வைத்து நம்மைத் திரையோடு ஒன்ற வைத்திருக்கிறார். dhileep prince and family movie review may 2025

நாயகி ரனியா ராணா இதில்தான் அறிமுகம் ஆகியிருக்கிறார். ஆனால், அம்மணி ஒரு பரதநாட்டிய தாரகை என்பதால் முகத்தில் பாவனைகள் தாண்டவமாடுகின்றன.

அதிலும், ‘மம்பட்டியான்’ பாடலுக்கு நடனமாடியவாறே திருமண மேடைக்கு வருகிற காட்சியில் இன்றைய ‘இன்ஸ்டாரீல்ஸ்’ அலப்பறைகளை அப்படியே ‘ரீகிரியேட்’ செய்திருக்கிறார். ’டூரிஸ்ட் பேமிலி’ இந்த விஷயத்தில் முந்திகொண்டது என்றே சொல்ல வேண்டும்.

நல்ல பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தால், சிறப்பாகச் சில ‘ரவுண்ட்’கள் வருவார் ரனியா. அப்படியொரு நடிப்பையே இதில் தந்திருக்கிறார்.

இந்த படத்தில் சித்திக், பிந்து பணிக்கர், ஜானி ஆண்டனி என்று மூத்த கலைஞர்கள் பலருண்டு. அவர்களை மீறி மஞ்சு பிள்ளை, மீனாட்சி மாதவி, அவரது தாயாக நடித்தவர், தியான் சீனிவாசன், ஜோஸ்குட்டி ஜேக்கப், அவரது மனைவியாக நடித்தவர் என்று பலரும் இதில் ‘ஸ்கோர்’ செய்கின்றனர்.

இதில் ஒரு காட்சியில் ஊர்வசியும் வினீத் தட்டில் டேவிட்டும் தலைகாட்டியிருக்கின்றனர். இரண்டுமே நம்மைச் சட்டென்று வசீகரிக்கின்றன.

உண்மையைச் சொன்னால், இந்தக் கதையில் ஆசிஃப் அலி, குஞ்சாக்கோ போபன், பிருத்விராஜ் என்று நடுத்தர வயதுள்ள மலையாள நாயகர்கள் பலரைப் பொருத்திப் பார்க்க முடியும்.

அந்த வரிசையில் திலீப்புக்கு இந்த கதை பொருத்தமாக இருக்கிறதா என்றால், ‘ஆம்’, ‘இல்லை’ என்று இரண்டு விதமாகவும் பதில்கள் சொல்ல முடியும். dhileep prince and family movie review may 2025

அவரது தோற்றம் தரும் எண்ணங்களை மீறி, இரண்டாம் பாதியில் நம்மைப் படத்தோடு ஒன்ற வைப்பதுதான் அவரது திறமைக்கான சான்று. அந்த வகையில், அவரது 150வது படம் என்று குறிப்பிடுகிற வகையில் அமைந்திருக்கிறது இப்படைப்பு.

சமூகவலைதளங்களில் நம்மை வெளிப்படுத்திக்கொள்கிற தருணங்களே வாழ்க்கையில் ஆகச்சிறந்தவை என்று கருதப்படுகிற காலகட்டத்தில், அதனால் ஏற்படுகிற பிரளயங்களைச் சொல்கிற படைப்புகள் குறைவாகவே வந்திருக்கின்றன. அந்தக் குறையைப் போக்குகிற வகையில் அமைந்திருக்கிறது ‘பிரின்ஸ் அண்ட் தி பேமிலி’.

என்ன, ‘யதார்த்தம்’ மிளிர்கிற திரைக்கதை ட்ரீட்மெண்டோடு இதே கதையைச் செம்மையான வாழ்வனுபவங்களைப் பிரதிபலிக்கிற காட்சிகளைக் கொண்டு படைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அது நிகழாததால், ‘முக்கால்’ திருப்தி தருகிறது திலீப்பின் 150வது படம். dhileep prince and family movie review may 2025

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share