VIDEO: ஆந்திராவில் அடித்து ஆட ஆரம்பித்த ‘அர்னாப்’ புயல்.. விசாகப்பட்டினத்தை நெருங்குகிறது.. நாளை கரையை கடக்கும்!

Published On:

| By Mathi

Andhra-Arnab-Cyclone

வங்கக்கடலில் உருவான ‘அர்னாப்’ அதி தீவிர புயல், ஆந்திர மாநிலத்தின் கடலோரப் பகுதிகளை நெருங்கி வருவதால் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது. நாளை (அக்.28) முற்பகலில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குட்பட்ட ஏனாம் அருகே புயல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (அக்.27) வெளியிட்ட அறிக்கையில், ”மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ‘அர்னாப்’ அதி தீவிர புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது. ஆந்திராவின் விசாகப்பட்டினத்திலிருந்து தெற்கு – தென்கிழக்கே 220 கி.மீ., காக்கிநாடாவிலிருந்து கிழக்கு – தென்கிழக்கே 240 கி.மீ., மச்சிலிப்பட்டினத்திலிருந்து கிழக்கு – தென்கிழக்கே 340 கி.மீ. தொலைவில் புயல் நிலைகொண்டிருந்தது.

ADVERTISEMENT

மேலும், ஒடிசாவின் கோபால்பூரிலிருந்து தெற்கே 370 கி.மீ., ஆந்திராவின் பாபட்லாவிலிருந்து கிழக்கே 410 கி.மீ., அந்தமான் தீவுகளின் ஸ்ரீ விஜயபுரத்திலிருந்து மேற்கு – வடமேற்கே 1,030 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டிருந்தது.

அர்னாப் புயல் இன்று மாலை வரை மேற்கு – வடமேற்கு திசையில் நகரும் என்றும், அதன் பின்னர் வடமேற்கு திசையில் திரும்பி நாளை (அக்.28) முற்பகலில் ஆந்திராவின் பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே, புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குட்பட்ட ஏனாம் அருகே அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

அப்போது மணிக்கு 125 முதல் 135 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இடையிடையே காற்றின் வேகம் அதிகபட்சமாக 150 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்” என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஏனாம் எங்கே இருக்கிறது?

அர்னாப் புயல் கரையைக் கடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள ஏனாம், ஆந்திர மாநிலத்தின் ஒரு பகுதி அல்ல. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 4 பிராந்தியங்களில் ஒன்றாகும். ஆந்திராவின் காக்கிநாடா மாவட்டத்தில், கவுதமி கோதாவரி ஆறு வங்கக்கடலில் கலக்கும் பகுதிக்கு அருகே ஏனாம் அமைந்துள்ளது. ஆந்திர மாநிலத்தால் சூழப்பட்டிருந்தாலும், நிர்வாக ரீதியாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் கீழ் செயல்படுகிறது.

ADVERTISEMENT

முன்னர் பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்த ஏனாம், தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். தற்போது இந்தப் பகுதியை ஒட்டிய கடலோரத்தில்தான் அர்னாப் புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆந்திராவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

அர்னாப் புயலை எதிர்கொள்ள ஆந்திர அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. கடலோர மாவட்டங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

விசாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் 54 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். புயல் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ரூ.27 கோடி அவசர நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை.. கடலோர மாவட்டங்களில் ரெட் அலர்ட்

புயல் காரணமாக ஆந்திராவின் பல்வேறு கடலோர மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காக்கிநாடா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, ஏலூரு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புயல் கரையைக் கடக்கும்போது பலத்த காற்றுடன் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் கடலோர மக்கள் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஒடிஷாவிலும் உஷார் நிலை

அர்னாப் புயல் ஆந்திராவின் ஏனாம் அருகே கரையைக் கடக்க உள்ள நிலையில், அண்டை மாநிலமான ஒடிசாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, தெற்கு ஒடிசாவின் கடலோர மற்றும் உள்மாவட்டங்களில் கனமழை, பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன.

ஒடிசாவின் நபரங்பூர், ராயகடா, பூரி மாவட்டங்களில் அக்டோபர் 27, 28 ஆகிய 2 நாட்களுக்கும், கோராபுட், கஞ்சம் மாவட்டங்களில் அக்டோபர் 27 முதல் 29 வரை 3 நாட்களுக்கும் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கஞ்சம், கஜபதி, ராயகடா, மல்காங்கிரி, கோராபுட், நபரங்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் மலைகள், அருவிகள், அணைகள் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கஜபதி மாவட்டத்தில் மட்டும் புயலால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் 15,000 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்காக 281 தற்காலிக நிவாரண மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஒடிசா அரசு 8 அமைச்சர்களை நியமித்துள்ளது. புயல் காரணமாக 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அர்னாப் புயல் ஆந்திராவில் கரையைக் கடந்தாலும், அதன் தாக்கத்தால் தெற்கு ஒடிசாவிலும் கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மாநில நிர்வாகம் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share