கிரெடிட் கார்டு பயன்படுத்தும் ஒருவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தால், அவர் செலுத்த வேண்டிய கடன் என்னவாகும்?
அந்தக் கடனை அவரது மனைவி, குழந்தைகள் அல்லது பெற்றோர் கட்டாயம் செலுத்த வேண்டுமா? இப்படியான கேள்விகள் பலருக்கும் எழுகின்றன.
குறிப்பாக, குடும்பத்தின் முக்கிய வருமானம் ஈட்டுபவர் உயிரிழக்கும்போது, நிலுவையில் இருக்கும் கடன்கள் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்துகின்றன.
இதுபோன்ற சூழலில் குடும்பத்தினருக்கு இருக்கும் சட்டப்பூர்வப் பொறுப்புகளைத் தெரிந்துகொள்வது அவசியம்.
குடும்பத்தினர் கடனைச் செலுத்த வேண்டுமா?
கிரெடிட் கார்டு என்பது பிணையமில்லாத கடன் வகையைச் சேர்ந்தது. கார்டு வைத்திருப்பவர் உயிரிழந்துவிட்டால், அவரது கடனை குடும்ப உறுப்பினர்கள் தங்களுடைய சொந்த வருமானத்திலிருந்தோ சேமிப்பிலிருந்தோ செலுத்த வேண்டிய கட்டாயம் பொதுவாக இல்லை.
அதேநேரம், உயிரிழந்தவர் விட்டுச் சென்ற சொத்துகளிலிருந்து நிலுவைத் தொகையை வசூலிக்க வங்கிகளுக்கு உரிமை உள்ளது. சட்டப்பூர்வ வாரிசுகளின் பொறுப்பு, அவர்கள் பெற்ற பரம்பரைச் சொத்துகளின் மதிப்புக்கு உட்பட்டதாகும். இதனை டெல்லி உயர் நீதிமன்றத்தின் 2026ஆம் ஆண்டு தீர்ப்பும் உறுதிப்படுத்தியுள்ளது.
சொத்துகள் இல்லாவிட்டால் என்ன நடக்கும்?
உயிரிழந்தவரின் பெயரில் சொத்துகளோ, வங்கிச் சேமிப்புகளோ இல்லாதபட்சத்தில் கடனை வசூலிப்பதில் வங்கிக்குச் சிக்கல் ஏற்படலாம்.
கடனை வசூலிக்க முடியாத சூழலில் வங்கி தனது நடைமுறைகளின்படி நிலுவைத் தொகையைத் தள்ளுபடி செய்யலாம்.
இருப்பினும், கடனுக்கு இணைப் பொறுப்பேற்றவரோ உத்தரவாதம் அளித்தவரோ இருந்தால், அவர்களுக்கான பொறுப்பு ஒப்பந்தத்தைப் பொறுத்து மாறுபடும்.
குடும்பத்தினர் உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன?
கார்டு வைத்திருப்பவர் உயிரிழந்ததும் சம்பந்தப்பட்ட வங்கிக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். இறப்புச் சான்றிதழைச் சமர்ப்பித்து, கிரெடிட் கார்டை முடக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.
மேலும், கார்டுடன் கடன் பாதுகாப்புக் காப்பீடு இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் சரிபார்க்க வேண்டும். காப்பீடு இருந்தால் அதன் நிபந்தனைகளுக்கு ஏற்ப நிலுவைக் கடனைச் செலுத்துவதற்கான வாய்ப்புள்ளது.
வசூல் முகவர்கள் நெருக்கடி கொடுத்தால்?
கடன் வசூல் முகவர்கள் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டால், நிலுவைத் தொகை மற்றும் கடன் தொடர்பான ஆவணங்களை வங்கியிடம் கேட்டுப் பெறலாம்.
சட்டப்பூர்வப் பொறுப்பு இல்லாத நிலையில் சொந்தப் பணத்திலிருந்து கடனைச் செலுத்த ஒப்புக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. சந்தேகம் ஏற்பட்டால் சட்ட ஆலோசனை பெறுவதும், தேவையற்ற நெருக்கடி கொடுக்கப்பட்டால் வங்கியிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிப்பதும் முக்கியம்.
