கடந்த ஆண்டு கிரெடிட் கார்டு தொகையை திருப்பி செலுத்தாதது 28% ஆக அதிகரித்து, வாராக்கடன் ரூ.6,742 கோடியை எட்டியுள்ளது. Credit card debts up 28% in 2024
கடந்த மூன்று ஆண்டுகளில் கிரெடிட் கார்டு பயன்பாடுகள் கணிசமாக அதிகரித்துள்ளது.
இதற்கு பிரதான காரணங்களாக கொரோனா காலத்தில் ஏற்பட்ட விலைவாசி உயர்வு, அதனால் நுகர்வோர்களுக்கு அதிகரித்த செலவு மற்றும் டிஜிட்டல் மூலமாக பணத்தை அனுப்புவது அதிகரித்தல் போன்றவையே என நிபுணர்கள் கூறுகின்றனர்
இருப்பினும், இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, 2024 டிசம்பருடன் முடிவடைந்த 12 மாத காலத்தில் கிரெடிட் கார்டு பிரிவில் செயல்படாத சொத்துக்கள் (Non Performing Assets) அல்லது வாடிக்கையாளர்களால் செலுத்தத் தவறிய தொகை 28.42 சதவீதம் அதிகரித்து ரூ.6,742 கோடியாக உயர்ந்துள்ளது.
பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்தநிலைக்கு மத்தியில், ஒட்டுமொத்த செயல்படாத சொத்துக்கள் 2023 டிசம்பரில் ரூ.5,250 கோடியிலிருந்து தற்போது ரூ.1,500 கோடி உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் தரவு சுட்டிக்காட்டியுள்ளது.
இது, 2024 டிசம்பரில் வணிக வங்கிகளின் கிரெடிட் கார்டு பிரிவில் நிலுவையில் உள்ள ரூ.2.92 லட்சம் கோடி, மொத்த கடனில் 2.3 சதவீதமாக உள்ளது. இது முந்தைய ஆண்டில் ரூ.2.53 லட்சம் கோடி நிலுவையுடன், மொத்த கடனில் 2.06 சதவீதமாக இருந்தது.
டிசம்பர் 2020 நிலவரப்படி, கிரெடிட் கார்டு வாராக்கடன்கள் ரூ.1,108 கோடியிலிருந்து 500 சதவீதத்திற்கும் மேலாக தற்போது அதிகரித்துள்ளன.
அதே வேளையில் 2023 டிசம்பரில் ரூ.5 லட்சம் கோடியாக இருந்த மொத்த வாராக்கடனை, டிசம்பர் 2024க்குள் ரூ.4.55 லட்சம் கோடியாக வங்கிகள் குறைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.