இந்தியாவில் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் ஃபார்முலா-1 (Formula1) கார் பந்தயம் நடத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய அரசு உயர்நிலைக் குழு ஒன்றை அமைத்துள்ளது.





முன்னதாக முதல்வர் விஜய் லண்டன் பயணத்தின்போது நடிகர் அஜித் குமார் பங்கேற்ற Michelin Le Mans Cup பந்தயத்தை தொடங்கிவைத்தார். இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, ”மோட்டார் விளையாட்டின் உச்சபட்சமாக இருக்கும் ‘Formula One’ உலக சாம்பியன்ஷிப் போட்டி, 1950 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெற்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில் நடைபெற்ற ‘The Le Mans Cup – Silverstone Round’ போட்டியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இந்நிகழ்வை தொடங்கி வைத்த முதல் இந்தியர் என்ற பெருமையைக் கொண்டார்.
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற திரைத்துறை நட்சத்திரமும், மோட்டார் விளையாட்டு வீரரும் எனது அன்புக்குரிய சகோதரருமான அஜித் குமாரின் சிறப்பு அழைப்பின் பேரில் இப்பயணத்தில் பங்கேற்றோம்.
‘Motor Sports’ மீதான அவரின் ஆர்வமும், தமிழ்நாட்டில் இந்த விளையாட்டை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற அவரது தொலைநோக்குத் திட்டங்களும் நம்மை மிகவும் கவர்ந்தன. மோட்டார் விளையாட்டின் ஒவ்வொரு நுணுக்கங்களையும் அதன் பிரமாண்டத்தையும் அவர் பொறுமையாகவும் அர்ப்பணிப்புடனும் நம்மிடம் விளக்கினார். முன்னாள் இந்திய ‘Formula One’ வீரர் நரேன் கார்த்திகேயன் அவர்களும் உடனிருந்தார். தொடர்ந்து, இதுசார்ந்த உலகின் முன்னணி தொழில், வணிக மற்றும் விளையாட்டுத்துறைத் தலைவர்களுடன் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டோம். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) உறுப்பினர் செயலாளர் ஜே. மேகநாத ரெட்டி அவர்களும் இப்பயணத்தில் பங்கேற்றார்.

‘நம் தமிழ்நாட்டில் உலகத்தரமான உள்கட்டமைப்பை அடித்தளமாக மேற்கொண்டு சர்வதேச தரத்திலான விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும்’ என்பதே தமிழ்நாடு அரசின் உறுதியான நிலைப்பாடாகும். இதன்பொருட்டு, தமிழ்நாட்டில் உலகத்தரமான ‘Motor Sports City’ விரைவில் அமையப்பெற உள்ளது.
முதல்வர் அவர்களுடன் இணைந்து தமிழ்நாட்டை முதன்மையாகக் கொண்டு, இந்தியா முழுவதற்கும் சர்வதேச அளவிலான Sports Economy-ஐ உருவாக்குவதற்கான பல புதிய தேடல்கள், கற்றல்கள், புதிய பார்வைகள் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டோம்.
முதல்வர் அவர்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இப்பயணம், தமிழ்நாட்டின் விளையாட்டு வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமையும். தமிழ்நாடு விளையாட்டு கட்டமைப்பிலும் விளையாட்டுப் பொருளாதாரத்திலும் தலைசிறந்து விளங்கி, இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாக உருவாகும். மேலும், தமிழக விளையாட்டுத்துறையை நவீனமயமாகவும் உலக நாடுகளுக்கு இணையாகவும் உருவாக்க வேண்டிய பல்வேறு புதிய செயல்திட்டங்களை இப்பயணத்துடன் மேற்கொண்டு வருகிறோம்” என கூறியிருந்தார்.

சட்டசபையில் விஜய் அறிவிப்பு
தமிழக சட்டசபையில் செப்டம்பர் 3-ந் தேதி பேசிய முதல்வர் விஜய், “
தமிழ்நாட்டில் ஒரு புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உருவாக்கப்படும். இந்த நகரத்தில் சர்வதேசத் தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் பந்தயத்தடம், நவீன உட்கட்டமைப்பு மற்றும் பயிற்சி வசதிகள் ஏற்படுத்தப்படும். Formula 1, Formula 2, Formula 3, Formula 4 போன்ற சர்வதேசத் தரத்திலான போட்டிகளை நடத்துவதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படும்” என அறிவித்தார்.
தமிழகமும் கார் பந்தயங்களும்
தமிழ்நாட்டில் இதுவரை Formula 1 மற்றும் FIA Formula 2 உலகத் தொடர் போட்டிகள் நடைபெறவில்லை. பழைய Formula 3 வகைப் போட்டிகள் இருங்காட்டுக்கோட்டையில் நடந்துள்ளன. Formula 4 Indian Championship போட்டிகள் சென்னை, இருங்காட்டுக்கோட்டை மற்றும் கோவையில் நடத்தப்பட்டுள்ளன. 2024-ம் ஆண்டு Chennai Formula Racing Circuit என அழைக்கப்பட்டு தீவுத்திடலைச் சுற்றிய சாலைகளில் இரவு நேர கார் பந்தயம் நடைபெற்றது.
மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்க எவ்வளவு நிலம் தேவை?
முதல்வர் விஜய் அறிவித்ததைப் போல Formula 1, Formula 2, Formula 3, Formula 4 போன்ற சர்வதேசத் தரத்திலான போட்டிகளை நடத்துவதற்கான கட்டமைப்புகள் இனிதான் உருவாக்கப்பட வேண்டும்; அதற்காகவேர் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்பட இருக்கிறது.
இத்தகைய போட்டிகளை நடத்துவதற்காக ஒரு மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைப்பதற்கு குறைந்தபட்சம் சுமார் 1,000 ஏக்கர் நிலம் தேவை. அத்துடன் கார்கள் மற்றும் உபகரணங்களைக் கொண்டுவர துறைமுகம், விமான நிலையம், பந்தயங்களில் பங்கேற்கும் அணியினர் தங்குவதற்கு நட்சத்திர ஹோட்டல்கள், அவசர சிகிச்சைக்கு மருத்துவமனைகள் மற்றும் தொழில்நுட்ப உதவிக்கு ஆட்டோ மொபைல் சார்ந்த நிறுவனங்கள் இருக்க வேண்டும்.
இந்தியாவில் Fromula 1 போட்டிகள் உத்தரப்பிரதேசத்தின் Jaypee Greens Sports City-ல் 3 முறை நடைபெற்றது. இதன் மொத்த பரப்பளவு 2,500 ஏக்கர். இதில் சர்வதேச கார் பந்தயங்கள் நடைபெறக் கூடிய Buddh International Circuit மட்டுமே 874 ஏக்கர். இது நாட்டின் தலைநகர் டெல்லியை அடுத்த கிரேட்டர் நொய்டாவில்தான் உள்ளது.
தமிழ்நாட்டில் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்க ஒரே தொடர்ச்சியாக 1,000 ஏக்கர் நிலம் கிடைக்க வேண்டும்; விமான நிலையம் மற்றும் துறைமுகங்களை எளிதில் சென்றடையக் கூடிய ’நெடுஞ்சாலை வசதிகள்’ கொண்ட இடமாகவும் இருக்க வேண்டும். அதேபோல வெள்ள அபாயம் இல்லாத பகுதியாகவும் இருக்க வேண்டும். மோட்டார் கார் பந்தயம் என்பதால் ஆட்டோமொபைல் சார் தொழில்கள் சூழ் இடமாகவும் இருக்க வேண்டும்.
எங்கே இருக்கிறது 1,000 ஏக்கர் நிலம்?
தலைநகர் சென்னையில் இருந்து இந்த தேடலை தொடங்குவோம்.
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக் கோட்டை கார் பந்தய வளாகத்தை எடுத்துக் கொள்வோம். இது மொத்தம் 200 முதல் 300 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த பகுதியை சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள், குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கூடுதலாக 700 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவது என்பது அதாவது இருங்காட்டுக் கோட்டை கார் பந்தய வளாகத்தை விரிவுபடுத்துவது என்பது சாத்தியங்களுக்கு அப்பாற்பட்டது என்றே சொல்லலாம்.
அதே காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்காக 1,802 ஏக்கர் பட்டா நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தவிர அரசு நிலம் 1,972 ஏக்கர் பரந்தூரில் உள்ளது. அதேநேரத்தில் நீர் நிலைகள் 1,558 ஏக்கர் அளவுக்கு உள்ளது. சர்வதேச கார் பந்தயங்கள் நடத்துவதற்காக இந்த நீர் நிலைகளின் வழித்தடங்களை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும்; இது ”செயற்கையான” வெள்ள அபாயத்தை உருவாக்கிவிடக் கூடும். அத்துடன் இந்த பகுதியில் உள்ள மதுரமங்கலத்தில் புதிய சிப்காட் வளாகம் அமைக்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு பொதுமக்கள் கடுமையாக எதிர்த்து போராடினர்; முதல்வர் விஜய்யின் முதல் அரசியல் பிரவேசமே அங்கிருந்துதான் தொடங்கியது. அதனால்தான் பரந்தூர் விமான நிலைய திட்டத்தையே ரத்து செய்வதாக அறிவித்தார். இந்த நிலையில் அதே பரந்தூரில் ஸ்போர்ட்ஸ் சிட்டி போன்ற மெகா திட்டங்களை முதல்வர் விஜய் அரசு தொடங்க வாய்ப்பு இல்லை. அது ‘கொள்ளிக்கட்டையை’ எடுத்து தலையால் சொரிந்து கொள்கிற கதையாகிவிடும்.
இதே காஞ்சிபுரம் மாவட்டத்தின் திருப்புலிவனத்தில் 800.16 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அருகில் மேலும் 200 ஏக்கர் நிலம் கிடைத்தால் சுமார் 1,000 ஏக்கரில் Motor Sports City அமைப்பதை அரசு பரிசீலனை செய்ய வாய்ப்புள்ளது. இது இருங்காட்டுக்கோட்டைக்கு அருகே உள்ளது.
சரி சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லக் கூடிய கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் இவ்வளவு இடம் இருக்கிறதா?
கடற்கரையை ஒட்டிய பகுதியில் தொடர்ச்சியாக 1,000 ஏக்கர் நிலம் கிடைப்பது சிரமம்தான். பொதுமக்கள் குடியிருப்புகள், விடுதிகள், சுற்றுலா மற்றும் வணிக வளாகங்கள் ஆக்கிரமித்து நிற்கின்றன.
மாமல்லபுரம் அருகே பையனூரில் தொழில்துறை திட்டங்களுக்காக சுமார் 545 ஏக்கர் நிலம் தொடர்ச்சியாக இருப்பதாக அடையாளம் காணப்பட்டது. ஆனால் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்க கூடுதலாக 500 ஏக்கர் நிலம் தேவைப்படுமே? அதனால் அந்த இடமும் தேர்வாக வாய்ப்பு இல்லை.
இதற்கு அடுத்ததாக செய்யூரில் 800 ஏக்கரில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. கூடுதலாக 200 ஏக்கர் நிலத்தை கைப்பற்றினால் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டிக்கான இடம் கிடைக்கும்; ஆனால் அங்கேயும் ஒரு சிக்கல் வெயிட்டிங்.. செய்யூர்- ஓதியூர் பகுதியில் கழிமுகம், ஏரி, பாசன கால்வாய்கள், நீர்பிடிப்பு பகுதிகள் உள்ளன. நிச்சயம் சுற்றுச் சூழல் சிக்கல் எழக் கூடிய வாய்ப்பு உள்ள இடம்.
செங்கல்பட்டு மாவட்டத்தின் நல்லூரில் 1,004.07 ஏக்கர் நிலத்தை அரசு ஏற்கனவே வேறு திட்டங்களுக்காக அடையாளப்படுத்தி இருக்கிறது. ஆனால் இது ஒரே தொடர்ச்சியான 1000 ஏக்கர் நிலமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இன்னொரு இடம், செய்யூர்- மதுராந்தகம் உள்பகுதியில், அதாவது புதுச்சேரி செல்லக் கூடிய கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து 10 அல்லது 20 கிமீ உள்ளே சுமார் 1,000 ஏக்கர் வறண்ட நிலம் கிடைத்தால் அதையும் அரசு பரிசீலனை செய்யக் கூடிய சாத்தியம் உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தின் நல்லூரில் 1,004.07 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம், துறைமுகம், நட்சத்திர விடுதிகள் மற்றும் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளுக்கு அருகில் இருப்பது இந்தப் பகுதியின் முக்கியமான பலமாக இருக்கும் என கருதலாம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் திருப்புலிவனத்தில் 800.16 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அருகில் மேலும் 200 ஏக்கர் நிலம் கிடைத்தால் சுமார் 1,000 ஏக்கரில் Motor Sports City அமைப்பதை அரசு பரிசீலனை செய்ய வாய்ப்புள்ளது. இது இருங்காட்டுக்கோட்டைக்கு அருகே உள்ளது.
சென்னையை தவிர்த்து இதர இடங்களில்..
சென்னையை சுற்றிய பகுதிகளைத் தவிர்த்து வேறு எங்கே ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கக் கூடிய சாத்தியம் உள்ளது?
சென்னைக்கு அடுத்ததாக விமான நிலையமும் துறைமுகமும் ஒருங்கே இருக்கக் கூடிய இடம் எனில் அது தூத்துக்குடிதான். அங்கே சுமார் 1,000 ஏக்கர் நிலம் கிடைக்குமா?
நிச்சயமாக இருக்கிறது. தொழில்துறை பூங்காக்களை அமைக்க தூத்துக்குடி மாவட்டம்
- முடிவைத்தானேந்தலில் 2,570.27 ஏக்கர் நிலம்
- சில்லாநத்தம் பகுதியில் 1,293.87 ஏக்கர் நிலம்
- உமரிக்கோட்டையில் 1,058.74 ஏக்கர் நிலம் அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஆனால் வெறும் நிலமும் விமான நிலையமும் துறைமுகமும் மட்டுமே மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டிக்கு போதுமானதா? என்றால் இல்லை. சர்வதேச போக்குவரத்து, நட்சத்திர விடுதிகள், பார்வையாளர்கள் வந்து செல்லக் கூடிய வசதிகள் என அனைத்துக்கும் ‘உகந்த’ இடமாகவும் இருக்க வேண்டுமே.. அதனால் தூத்துக்குடி பரிசீலனைக்கே வருமா? என்பதும் சந்தேகம்.
ஸ்போர்ட்ஸ் சிட்டிக்கான செலவு எவ்வளவு?
அடுத்ததாக இத்தகைய ஒரு ஸ்போர்ட்ஸ் சிட்டியை உருவாக்க எவ்வளவு செலவாகும்? முதல்வர் விஜய் அரசால் அந்த அளவு நிதியை ஒதுக்கிட முடியுமா?
மீண்டும் நாம் உ.பி. கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஸ்போர்ட்ஸ் சிட்டிக்கே செல்வோம். இந்த ஸ்போர்ட்ஸ் சிட்டியை உருவாக்குவதற்கான செலவு எவ்வளவு தெரியுமா?
2009-2011-ம் ஆண்டு காலகட்டத்தில் இந்த ஸ்போர்ட்ஸ் சிட்டியை உருவாக்க தோராயமாக ரூ 4,000 கோடி செலவிடப்பட்டது. இன்னமும் இந்த ஸ்போர்ட்ஸ் சிட்டி முழுமையடையாமல் உள்ளது.
தற்போதைய நிலைமையில் முதல்வர் விஜய் அரசு தமிழ்நாட்டில் இத்தகைய ஒரு ஸ்போர்ட்ஸ் சிட்டியை உருவாக்க வேண்டும் எனில் குறைந்தபட்சம் ரூ10,000 கோடியை செலவிட வேண்டும்.
ரூ10,000 கோடி முதலீடும் வருமானமும்
சரி இப்படி 1,000 ஏக்கர் நிலத்தில் ரூ10,000 கோடி முதலீடு செய்து உருவாக்கப்படும் ஸ்போர்ட்ஸ் சிட்டி மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்குமா? எப்படி கிடைக்கும்?
இந்த ஸ்போர்ட்ஸ் சிட்டிக்கு முன்னோடியான கிரேட்டர் நொய்டா சிட்டிக்கே இந்த முறையும் செல்வோம்.
- கிரேட்டர் நொய்டாவின் Jaypee Sports City 3 முறை Formula 1 போட்டிகளை நடத்தியது. ஆனால் அதற்கு பிறகு தொடர்ச்சியாக அங்கே நடத்த முடியாமல் கைவிடப்பட்டுவிட்டது.
- இத்தனை ஆயிரம் கோடி செலவு செய்து உருவாக்கப்பட்ட இந்த ஸ்போர்ட்ஸ் சிட்டியில் இன்னமும் கிரிக்கெட் மைதானம், ஹாக்கி மைதானங்கள் கட்டி முடிக்கப்படாமலேயே இருக்கின்றன.
- Jaypee Sports City நிதி நெருக்கடியில் சிக்கியதால் தனியார் குழுமமான ‘Adani’ கை கொடுக்க வேண்டிய சூழல் வந்துள்ளது.
பெயரளவில் Jaypee Sports City சக்சஸ்.. நடைமுறையில் ‘கனவாக’வே இருந்து வருகிறது.
இந்த படிப்பினைகள் மூலமாக விஜய் அரசு உருவாக்கும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டியானது எந்தெந்த வகைகளில் வருமானம் ஈட்ட முடியும்? போட்ட முதலீடு ரூ10,000 கோடியை மீட்டு எடுக்க முடியுமா?
இதற்காக,
- Formula 1 போட்டி நடத்த வேண்டும்.
- Formula 1 நடைபெறாத காலங்களில் Formula 2, Formula 3, Formula 4, Formula Regional, GT கார் பந்தயங்கள், மோட்டார் சைக்கிள் பந்தயங்கள், தேசிய கார் மற்றும் பைக் சாம்பியன்ஷிப், நீண்ட நேர கார் பந்தயங்கள் உள்ளிட்டவைகளை தொடர்ச்சியாக நடத்தி கொண்டிருக்க வேண்டும். இந்த பந்தயங்களுக்கான நுழைவுச் சீட்டு, விளம்பரம், ஒளிபரப்பு மற்றும் பங்கேற்கிற அணிகள் செலுத்தும் கட்டணம் மூலம் வருமானம் கிடைக்கும்.
- கார் மற்றும் பைக் நிறுவனங்கள் புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தவும், விளம்பரப் படப்பிடிப்பு நடத்தவும் பந்தயத் தடத்தை வாடகைக்கு எடுக்கலாம். திரைப்படப் படப்பிடிப்பு, தனியார் Track Day மற்றும் Corporate நிகழ்ச்சிகளுக்கும் தடத்தை வழங்கலாம்.
- பயிற்சி மையங்கள்; ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி; தொழில்முறை பந்தய வீரர் பயிற்சி;
- சாலைப் பாதுகாப்புப் பயிற்சி; மெக்கானிக் மற்றும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் பொறியியல் பயிற்சி ஆகியவற்றுக்கு வாடகைக்கு விடலாம்.
- Sports City வளாகத்தில் நட்சத்திர விடுதிகள்; உணவகங்கள்; வணிக வளாகங்கள்; மாநாட்டு மையம்; வாகனக் கண்காட்சி அரங்கம்; மோட்டார் ஸ்போர்ட்ஸ் அருங்காட்சியகம் ஆகியவை அமைத்து தனியாருக்குக் குத்தகைக்கு விடலாம்.
- ஆட்டோமொபைல் ஆராய்ச்சி நிறுவனங்கள்; மின்சார வாகன நிறுவனங்கள்;
- மோட்டார் ஸ்போர்ட்ஸ் அணிகள்; விடுதிகள் மற்றும் வணிக நிறுவனங்கள்
- ஆகியவற்றுக்கு இந்த இடத்தின் சில பகுதிகளை நீண்டகாலக் குத்தகைக்கு வழங்கலாம்.
ஒரு Sports City முழுமையாக உருவாக்கப்பட்டு- அது முழுமையாக செயல்படத் தொடங்கிய பிறகு பல்வேறு வகைகளில் ஆண்டுக்கு சுமார் ₹600 கோடி முதல் ₹1,000 கோடி வரை மொத்த வருமானம் ஈட்ட வாய்ப்பிருக்கிறது. அதனால் ₹10,000 கோடி முதலீட்டை மீட்டெடுக்க 15 முதல் 25 ஆண்டுகள் வரை ஆகலாம்.
ரூ10,000 கோடி என்பது தமிழக அரசின் ஓராண்டு மொத்தச் செலவில் சுமார் 2.1 சதவிகிதம்; ஓராண்டு மூலதன முதலீட்டில் சுமார் 17.5 சதவிகிதம் ஆகும். இந்த ரூ10,000 கோடியையுமே கடனாக வாங்கினால் ஆண்டுக்கு சுமார் ₹700 கோடி வரை வட்டி மட்டுமே கட்ட வேண்டும்.
சரி ஸ்போர்ட்ஸ் சிட்டிக்கு தமிழக அரசு என்னதான் செய்ய முடியும்?
- தமிழக அரசு நிலம், வெளிப்புற சாலைகளை இந்த ஸ்போர்ட்ஸ் சிட்டிக்காக கொடுக்க முடியும்.
- மத்திய அரசிடம் இருந்துதான் கட்டமைப்பு நிதியை பெற முடியும்.
- பந்தயத் தடம், விடுதிகள் மற்றும் வணிக வளாகங்களில் தனியார் நிறுவனங்களை முதலீடு செய்ய அனுமதிக்க வேண்டும்
- அதாவது தமிழ்நாடு அரசு ரூ2,000 முதல் ரூ3,000 கோடி வரை நேரடியாக செலவு செய்துவிட்டு எஞ்சிய ₹7,000 கோடி முதல் ₹8,000 கோடியை தனியார் முதலீடு, நீண்டகால நிலக் குத்தகை மற்றும் வங்கிகள் மூலம் திரட்ட முடியும்.
எத்தனை ஆண்டுகள் ஆகும் தெரியுமா?
இப்படி எல்லாம் திட்டமிட்டாலும் முதல்வர் விஜய் தலைமையிலான 5 ஆண்டு கால ஆட்சிக்குள் இத்தகைய ஸ்போர்ட்ஸ் சிட்டியை உருவாக்கி சர்வதேச கார் பந்தய போட்டிகள் நடத்திட முடியுமா? எனில் இந்த நகரத்தை உருவாக்க 7 முதல் 10 ஆண்டுகள் ஆகும் என்கின்றனர் வல்லுநர்கள்.
Formula 1 பந்தயத் தடத்தை மட்டுமே முழுமையாக சர்வதேச அளவிலான தரத்தில் உருவாக்குவதற்கே 3 முதல் 5 ஆண்டுகள் ஆகக் கூடும். அதன் பின்னர் Formula 1 போட்டியை நடத்துவதற்கான ஒப்பந்தம் உள்ளிட்டவைகளை கணக்கில் எடுத்தால் ஆகக் குறைந்தபட்சம் 6 முதல் 8 ஆண்டுகள் ஆகக் கூடும்.
ஆகையால் பெருமிதமாக சொல்லப்படும் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் ‘நடைமுறை’யில் உருவாக்கப்படுமா? அல்லது ‘பெருமித பேச்சாகவே’ இருந்துவிடப் போகிறதா? என்பது வரும் நாட்களில் தெரிந்து விடும்.
