15 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் மீண்டும் ஃபார்முலா 1 கார் பந்தயம்? களமிறங்கிய மத்திய அரசு!

Published On:

| By Mathi

Formula 1-India

இந்தியாவில் மீண்டும் Formula 1 கார் பந்தயத்தை நடத்துவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. Formula 1 உள்ளிட்ட மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டிகளை இந்தியாவில் மீண்டும் நடத்துவது மற்றும் இத்துறையை வளர்ப்பது குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய விளையாட்டு அமைச்சகம் உயர்மட்ட குழு ஒன்றை அமைத்துள்ளது.

இந்தியாவில் கடைசியாக 2013-ஆம் ஆண்டு Formula 1 போட்டி நடைபெற்றது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் Formula 1 போட்டிகளை நடத்துவதற்கான உயர்நிலைக் குழு, நிதி ஆயோக்கின் யுகல் கிஷோர் ஜோஷி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இக்குழுவில்

  • மத்திய விளையாட்டுத் துறை
  • நிதி அமைச்சகம்
  • சுற்றுலா அமைச்சகம்
  • மத்திய நேரடி வரிகள் வாரியம் – CBDT
  • மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் – CBIC

ஆகியவற்றின் பிரதிநிதிகள் இதில் இடம்பெறுகின்றனர்.

ADVERTISEMENT

மேலும்

  • உத்தரப்பிரதேசம்
  • மகாராஷ்டிர மாநில அரசுகளின் பிரதிநிதிகள்
  • கிரேட்டர் நொய்டாவில் உள்ள Buddh International Circuit
  • சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள Madras International Circuit ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கூட்டமைப்பான Federation of Motor Sports Clubs of India – FMSCI அமைப்பின் தலைவர் அல்லது பொதுச் செயலாளர் மற்றும் அந்த அமைப்பு பரிந்துரைக்கும் தொழில்நுட்ப வல்லுநரும் மத்திய அரசின் குழுவில் இடம்பெறுகிறார்.

ADVERTISEMENT

குழுவின் பணிகள்

இந்தியாவில் தற்போதுள்ள மோட்டார் ஸ்போர்ட்ஸ் கட்டமைப்பு, பந்தயத் தடங்கள், போட்டிகளை நடத்துவதற்கான வசதிகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இந்த குழு விரிவாக ஆய்வு செய்யும்.

மோட்டார் ஸ்போர்ட்ஸ் வளர்ச்சிக்குத் தடையாக உள்ள சட்டம், வரி மற்றும் நிர்வாகச் சிக்கல்களைக் கண்டறிந்து, அவற்றுக்கான தீர்வுகளையும் மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கும்.

பெரிய சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதால் கிடைக்கக்கூடிய சுற்றுலா வருவாய், முதலீடு, வேலைவாய்ப்பு மற்றும் சர்வதேச அளவிலான விளம்பரம் ஆகியவற்றையும் இந்த குழு ஆய்வு செய்யும்.

Formula 1 போன்ற பெரிய போட்டிகளை அரசு மட்டுமே நடத்துவதற்குப் பதிலாக, தனியார் பங்களிப்புடன் இணைந்து நடத்துவது குறித்தும் இக்குழு விரிவான ஆய்வு மேற்கொள்ளும்.

இதன் முக்கியப் பணிகளில் ஒன்றாக, 2028-ஆம் ஆண்டு இந்தியாவில் Formula 1 Grand Prix நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இருக்கிறது.

இந்தியாவில் நடைபெற்ற 3 Formula 1 போட்டிகள்

இந்தியாவில் முதல் Formula 1 Grand Prix போட்டி 2011-ஆம் ஆண்டு நடைபெற்றது. டெல்லியை அடுத்த உத்தரப்பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் அமைந்துள்ள Buddh International Circuit-ல் இந்தப் போட்டி நடத்தப்பட்டது.

2011, 2012 மற்றும் 2013 ஆகிய மூன்று ஆண்டுகள் தொடர்ந்து Indian Grand Prix நடைபெற்றது. 3 போட்டிகளிலும் ரெட் புல் அணியின் செபாஸ்டியன் வெட்டல் (Red Bull- Sebastian Vettel) வெற்றி பெற்றார்.

சுமார் 5.1 கிலோ மீட்டர் நீளம் கொண்ட Buddh International Circuit, Formula 1 போட்டிகளை நடத்துவதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டது. உலகின் முக்கியமான கார் பந்தயத் தடங்களில் ஒன்றாகவும் இது பாராட்டப்பட்டது. இருப்பினும் 2013-க்குப் பிறகு இந்தியாவில் Formula 1 போட்டி நடைபெறவில்லை.

Formula 1 ஏன் நிறுத்தப்பட்டது?

பந்தயத் தடத்தின் தரம் அல்லது இந்திய ரசிகர்களின் ஆதரவு குறைந்ததால் Formula 1 நிறுத்தப்படவில்லை. வரி, சுங்கம், அனுமதி, நிதி மற்றும் நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகள்தான் முக்கியத் தடைகளாக அமைந்தன.

Formula 1 போட்டியை விளையாட்டு நிகழ்வாகக் கருதுவதா அல்லது பொழுதுபோக்கு மற்றும் வணிக நிகழ்வாகக் கருதுவதா என்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக போட்டி உபகரணங்கள், அணிகளின் வருமானம் மற்றும் போட்டியை நடத்தும் நிறுவனத்திற்கான வரி தொடர்பான பிரச்சினைகள் உருவாகின.

Formula 1 நிர்வாகம், போட்டியை நடத்தும் தனியார் நிறுவனம் மற்றும் அரசுத் துறைகளுக்கு இடையே நீண்டகாலத்திற்கு ஏற்ற நிதி மற்றும் வரி ஏற்பாடுகள் உருவாக்கப்படவில்லை. இதனால் 2014-ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய இந்திய Grand Prix, Formula 1 கால அட்டவணையிலிருந்து நீக்கப்பட்டது.

தற்போது அமைக்கப்பட்டுள்ள உயர்நிலைக் குழுவில் CBDT மற்றும் CBIC பிரதிநிதிகளும் இடம்பெற்றிருப்பது, முந்தைய வரி மற்றும் சுங்கப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிப்பதைக் காட்டுகிறது.

மீண்டும் நொய்டாவில்?

Formula 1 இந்தியாவுக்குத் திரும்பினால், கிரேட்டர் நொய்டாவில் உள்ள Buddh International Circuit-லேயே போட்டி நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஏற்கெனவே Formula 1 போட்டிகளை நடத்திய அனுபவமும் தேவையான அடிப்படைக் கட்டமைப்பும் அங்கு உள்ளது.

ஆனால் பந்தயத்தை மீண்டும் நடத்துவதற்கு முன்பு தடத்தின் தற்போதைய நிலை ஆய்வு செய்யப்பட வேண்டும். Formula 1 போட்டிக்குத் தேவையான சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பின் FIA Grade 1 அங்கீகாரம், பாதுகாப்பு வசதிகள், பார்வையாளர் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளைப் புதுப்பிக்க வேண்டியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share