Center Imposes 0.4% MDR: ”ரூ 2,000-க்கும் மேற்பட்ட தனிநபர் – வணிகர் இடையேயான பணப் பரிவர்த்தனைகளுக்கு வர்த்தகர்களிடம் 0.4% கட்டணம் வசூலிக்கப்படும்” என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: MDR (Merchant Discount Rate) என்பது, வாடிக்கையாளர் UPI மூலம் செலுத்தும் பணத்தைப் பெறும் வியாபாரியிடம்/ வர்த்தகரிடம்/ கடைக்காரர்களிடம் வங்கிகள் மற்றும் பணப்பரிவர்த்தனை நிறுவனங்கள் வசூலிக்கும் சேவைக் கட்டணம்.

கடந்த 2020-ம் ஆண்டு முதல் மத்திய அரசு Zero-MDR முறையைப் பின்பற்றியது. அதனால் கடைக்காரரிடம் UPI மூலம் எவ்வளவு தொகை செலுத்தினாலும் MDR வசூலிக்கப்படவில்லை.
தற்போது இதில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனடிப்படையில்
- தனிநபர்களிடையே அனைத்து UPI பணப் பரிவர்த்தனைகளும் இலவசம்.
- கடைகளில் ₹2,000 வரையிலான UPI பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது.
- அதே நேரத்தில் ₹2,000-க்கு மேற்பட்ட குறிப்பிட்ட வணிகப் பரிவர்த்தனைகள் நடைபெற்றால் கடைக்காரிடம் 0.4% MDR வசூலிக்கப்படும். இதனை வாடிக்கையாளரிடம் வசூலிக்கக் கூடாது. உதாரணமாக, ₹5,000 செலுத்தினால் அதற்கான கட்டணம் ₹20. இதனை வாடிக்கையாளர் செலுத்த வேண்டியதில்லை. சம்பந்தப்பட்ட வர்த்தகரே செலுத்த வேண்டும்.
- P2PM (Person-to-Person-Merchant) என்பது, சிறிய வியாபாரிகளுக்காகப் பயன்படுத்தப்படும் UPI பரிவர்த்தனை வகை. சிறிய கடைக்காரர், தெருவோர வியாபாரி, ஆட்டோ ஓட்டுநர் போன்றவர்கள் UPI QR Code மூலம் வாடிக்கையாளர்களிடம் பணம் பெறுவது P2PM என வகைப்படுத்தப்படுகிறது. இந்த P2PM பிரிவின் கீழ் UPI QR Code மூலம் மாதம் மொத்தமாக ₹1 லட்சம் வரை பணம் பெறும் சிறு வியாபாரிகள் மற்றும் தெருவோர வியாபாரிகளின் அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் MDR கிடையாது.
- UPI பயன்படுத்தும் பொதுமக்களுக்கு மாதாந்திர இலவச வரம்போ, குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் இலவசப் பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாடோ கிடையாது.
- ₹75,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு அதிகபட்சமாக ₹300 மட்டுமே வர்த்தகர்களிடம் வசூலிக்கப்படும்.
- ரயில்வே, தொலைத்தொடர்பு, காப்பீடு, பெட்ரோல், டீசல் மற்றும் விவசாய இடுபொருட்கள் போன்ற துறைகளில் ₹2,000-க்கு மேல் செய்யப்படும் UPI பரிவர்த்தனைகளுக்கு ரூ.5 மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும். இது வணிக நிறுவனம் அல்லது சேவை வழங்குநரிடம்தான் வசூலிக்கப்படும்; வாடிக்கையாளரிடம் அல்ல.
- மியூச்சுவல் ஃபண்ட், பங்குகள் மற்றும் பங்குத் தரகர்கள் தொடர்பான UPI பரிவர்த்தனைகளுக்கு 0.02% கட்டணம் விதிக்கப்படும். இதற்கும் அதிகபட்ச வரம்பு ₹300 ஆகும்.
- MDR என்பது வங்கிகள், பணப்பரிவர்த்தனைச் சேவை நிறுவனங்கள் மற்றும் UPI செயலிகளுக்கு இடையே பகிர்ந்துகொள்ளப்படும் கட்டணம். இது அரசுக்கோ NPCI நிறுவனத்துக்கோ செலுத்தப்படும் வரி அல்ல. இந்தக் கட்டணத்தை வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கக்கூடாது என்று வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. UPI செயலிகளும் தனியாகச் சேவைக் கட்டணம் அல்லது மறைமுகக் கட்டணம் விதிக்கக்கூடாது.
- புதிய MDR கட்டணம் சுமார் 4% வணிகப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும். ₹2,000-க்குக் குறைவான பரிவர்த்தனைகள் மற்றும் சிறிய வியாபாரிகளுக்கான பரிவர்த்தனைகள் உட்பட சுமார் 96% வணிகப் பரிவர்த்தனைகள் தொடர்ந்து இலவசமாக இருக்கும்.
