இந்தியாவில் மாதம் 50,000 ரூபாய் சம்பாதிப்பது என்பது பலருக்கு ஒரு முக்கியமான நிதி சார்ந்த இலக்காக இருக்கிறது.
இந்த வருமானத்தில் அடிப்படை செலவுகளை சமாளித்து, மாத இறுதியில் கொஞ்சம் பணம் மிச்சமாகும் என்று நினைப்பார்கள். ஆனால், இந்த நிலையில் உள்ள பலரும், எதில் முதலீடு செய்வது, எப்படி ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்வது என்ற குழப்பத்தில் இருக்கின்றனர். நிதி ஆலோசகர்கள் கூறுகையில், இந்த வருமானத்தில் நீண்ட கால முதலீட்டைத் தொடங்கலாம். ஆனால், ஒழுக்கம், பாதுகாப்பு மற்றும் தெளிவான நிதி இலக்குகள் முக்கியம் என்கின்றனர்.
எந்த முதலீட்டையும் தொடங்குவதற்கு முன், ஒரு பாதுகாப்பு வலையை உருவாக்குவது முக்கியம். தெளிவான பட்ஜெட்டைப் பின்பற்றி, நீண்ட கால இலக்குகளைப் பாதிக்கும் குறுக்குவழிகளைத் தவிர்க்க வேண்டும். முதலில், 6 முதல் 12 மாதங்களுக்கான அத்தியாவசிய செலவுகளை ஈடுகட்டும் அவசர கால நிதியை உருவாக்க வேண்டும். மாதம் 50,000 ரூபாய் சம்பாதித்து 35,000 ரூபாய் செலவு செய்பவர், 1,05,000 ரூபாய் முதல் 2,10,000 ரூபாய் வரை அவசர கால நிதியை வைத்திருக்க இலக்கு வைக்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இந்த பணத்தை எளிதாக அணுகக்கூடிய வகையில் சேமிப்புக் கணக்கு அல்லது லிக்விட் ஃபண்டுகளில் வைக்க வேண்டும். அதன் பிறகுதான் முதலீடுகளைப் பற்றி யோசிக்க வேண்டும். இது வேலை இழப்பு, மருத்துவ அவசரநிலைகள் அல்லது எதிர்பாராத செலவுகளிலிருந்து நிதிப் பாதுகாப்பை அளிக்கும். உங்கள் வருமானத்தில் நீண்ட கால செல்வத்தை உருவாக்க விஷயங்களை எளிமையாக வைத்திருக்க வேண்டும்.இன்டெக்ஸ் அல்லது ஃப்ளெக்ஸிகேப் ஃபண்டுகளில் SIP ஆகியவை சிறந்த வழிகள் ஆகும். இந்த ஃபண்டுகள் நிலையான, நிறுவப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்கின்றன.
மாற்றாக, கடன் போர்ட்ஃபோலியோவிற்கு PPF திட்டத்தைக் கருத்தில் கொள்ளலாம். ஆனால் அதன் 15 வருட லாக்-இன் காலம் மற்றும் வரிச் சலுகைகள், அரசுப் பத்திரங்கள் பற்றி அறிந்திருக்க வேண்டும். ஆரம்பநிலை முதலீட்டாளர்கள் தேவையற்ற ரிஸ்க் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். நல்ல சந்தை அறிவு இல்லாவிட்டால் நேரடி பங்குகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது ஆரம்பநிலையாளர்களுக்கு அதிக ரிஸ்க் கொண்டது.
50,000 ரூபாய் சம்பாதிக்கும் பல முதலீட்டாளர்கள் தவிர்க்கக்கூடிய தவறுகளைச் செய்கிறார்கள். மிகவும் பொதுவான தவறு என்னவென்றால், அவசர கால நிதி இல்லாமல் முதலீடு செய்வதுதான். இதனால் கட்டாயமாக முன்கூட்டியே பணத்தை எடுக்க வேண்டியிருக்கும். மேலும், பலர் தனிப்பட்ட ஆராய்ச்சிக்கு பதிலாக, டிரெண்டுகள் மற்றும் சமூக ஊடக குறிப்புகளைப் பின்பற்றுகிறார்கள். மற்ற தவறுகளில் திட்டமிடல் இல்லாமை மற்றும் உணர்ச்சிவசப்பட்ட முடிவுகள் அடங்கும்.
அதோடு, பலர் தெளிவான நிதி இலக்குகளை நிர்ணயிக்கத் தவறிவிடுகிறார்கள், சந்தை ஏற்ற இறக்கங்களின் போது உணர்ச்சிவசப்பட்ட முடிவுகளை எடுக்கிறார்கள். மேலும் வருமானம் அதிகரிக்கும்போது படிப்படியாக அதிகமாக செலவு செய்கிறார்கள். இதனால் முதலீடு செய்ய பணம் குறைவாகவே இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
