ஐயுஎம்எல் அலுவலகத்துக்கு சென்றுள்ள முதல்வர் விஜய், அக்கட்சித் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஐயுஎம்எல் ஆதரவு தெரிவித்தது.
கடந்த 10ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்ற விஜய், நேற்று முன்னாள் முதல்வர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை அவரவர் இல்லத்துக்கு சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்தநிலையில் இரண்டாவது நாளாக இன்றும் தமிழக அரசியல் கட்சிகளை சந்தித்து வருகிறார்.
அந்தவகையில் இன்று சட்டப்பேரவை அலுவல் பணிகள் முடிந்ததும், மண்ணடியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அலுவலகத்துக்கு புறப்பட்டு வந்தார் முதல்வர் விஜய்.
அங்கு ஐயுஎம்எல் தேசிய தலைவர் காதர் மொய்தீன் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்ததற்காக முதல்வர் விஜய் நன்றி தெரிவித்தார்.
பின்னர் ஐயுஎம்எல் கட்சி அலுவலகத்தில் பேசிய விஜய், “முன்பு சொன்னது போல இந்த விஜய் உங்களோடு எப்போதும் இருப்பேன். உங்களுடன் எப்போதும் நிற்பது என் கடமை” என்று கூறினார்.
இந்த சந்திப்பு தொடர்பாக காதர் மொய்தீன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த மற்றும் தெரிவிக்காத அனைத்து கட்சி அலுவலகங்களுக்கும், தலைவர்களின் இல்லங்களுக்கும் நேரில் சென்று விஜய் அன்பைப் பரிமாறிக்கொள்வது தமிழக அரசியலில் ஒரு நல்ல முன்மாதிரி.
முஸ்லீம் சமூதாயத்துக்கு கலைஞர் காலத்தில் வழங்கப்பட்ட 3.5% இட ஒதுக்கீடு தற்போதும் தொடர்கிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இந்த இட ஒதுக்கீட்டை 5% அல்லது 7%-ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்.
மத்திய அரசு நடத்தும் யுபிஎஸ்சி தேர்வுகளில் தற்போது நிறைய இஸ்லாமிய மாணவர்கள் தேர்ச்சி பெற்று வருகின்றனர். தமிழகத்திலும் இந்த ஆட்சியின் கீழ் நிறைய ஐஏஎஸ் அதிகாரிகள் வருவார்கள் என்று நம்புகிறோம்.
திமுக கூட்டணியில் தாங்கள் நீடித்தாலும், புதிய ஆட்சி தமிழகத்திற்கு நல்லது செய்யும் என்ற நம்பிக்கையில் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ளோம்.
திமுக அரசு செய்த மக்கள் நலத்திட்டங்களை இந்த புதிய அரசும் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்
