தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு சேரன் போட்டியிடுகிறார்.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் 2026-2029-ஆம் ஆண்டுக்கான தேர்தல் விரைவில் நடைபெறுகிறது.
இதற்கான பணியில் ஈடுபட்டிருந்த சமயத்தில் தான் கடந்த முறை சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்ட பாக்யராஜ், திடீர் உடல் நல பாதிப்பால் உயிரிழந்தார்.
இந்தநிலையில் நம்ம கே பாக்யராஜ் அணியில் இருந்து இயக்குநர் சேரன் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் சேரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வருகின்ற தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தேர்தலில் “தலைவர்” பதவிக்குப் போட்டியிடுகிறேன். நமது அணியில் செயலாளர் பதவிக்கு “பட்டுக்கோட்டை பிரபாகர்”, பொருளாளர் பதவிக்கு ” ஆர்.சுந்தரராஜன்”, துணைத் தலைவர்கள் பதவிக்கு “சமுத்திரக்கனி மற்றும் சினேகன்” இணைச் செயலாளர்கள் பதவிக்கு நண்பர்கள் “செல்வ பாரதி, பாஸ்கர் சக்தி, KP.ஜெகன், KBB. நவீன்” ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.
மேலும் 12 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு நமது எழுத்தாளர்கள் மற்றும் இயக்குனர்கள் நண்பர்களும் களம் இறங்கி இருக்கிறார்கள்..
இந்த அணியில் பாக்யராஜ் சார் விரும்பி தேர்வுசெய்து வைத்திருந்த வேட்பாளர்கள் அதிகம் இருப்பதால் இது “நம்ம கே.பாக்யராஜ் அணி” என்று அழைக்கப்படுகிறது.
போட்டி மனப்பான்மையுடனோ அல்லது சுயநலத்துடன் ஆதாயம் தேடும் நோக்கத்திலோ இணைந்தவர்கள் அல்ல நாங்கள்.. பல சாதனைகளைச் செய்து ஒரு தலைவர் வழிநடத்திய சங்கத்தில் ஏற்பட்ட நல்ல விசயங்களையும், பலன்களையும் பாதுகாப்பதே எங்கள் அணியின் நோக்கம்.
மேலும் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களுக்கு அந்த நல்ல பாதையை இன்னும் அழுத்தமாக உருவாக்கிக் கொடுக்கவும் எடுக்கும் முயற்சி மட்டுமே..
எழுத்தாளர்கள் தமிழ் சினிமாவின் முதுகெலும்பு போன்றவர்கள்.. அவர்களை வலுவாக நிமிர்ந்து நிற்க வைக்கவே இந்த முயற்சி..
ஆகையால் நீங்கள், நமது முழு அணியையும் தேர்வு செய்தால் மட்டுமே நம் சங்கத்தின் வளர்ச்சிப் பணிகளையும் எழுத்தாளர்களின் நலத்திட்டங்களையும் எதிர்காலத்திற்கு ஏற்றார்ப் போல மாற்றி அமைக்கவும், எவ்வித தொய்வும் இன்றி எங்களால் மிகச் சிறப்பாக செயல்படவும் முடியும்.
உங்கள் “வாக்குகள் மட்டுமே அதற்கான உத்திரவாதம் அளிக்கும் ஆயுதம் என்பதை நினைவூட்டுகிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நம்ம கே.பாக்யராஜ் அணியை எதிர்த்து, இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட விசி குகநாதன் தலைமையிலான 21 பேர் கொண்ட அணி களமிறங்குகிறது. சங்க தலைவராக விசி குகநாதன் போட்டியிடுகிறார்.
