தூத்துக்குடி ஏடிஎஸ்பி திபுவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வெளியே செய்தி சேகரிப்பதற்காக நேற்றிரவு திரண்ட பத்திரிகையாளர்களுக்கும், ஏடிஎஸ்பி திபுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பத்திரிகையாளர்களை ’ரவுடி’ என்றும் ’வாங்கடே” என்றும் நாக்கை துருத்தி கடுமையாக பேசினார் ஏஎடிஎஸ்பி திபு. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.
இந்தநிலையில் ஏடிஎஸ்பி திபுவின் செயல்பாடுகளுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இன்று (ஜூலை 21) வெளியிட்ட அறிக்கையில், ”பத்திரிகையாளர்களை மிரட்டி, தாக்க முயன்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திபுவின் அராஜக நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.
அராஜகமாக நடந்துகொண்ட திபு மீது தமிழ்நாடு முதமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் வழக்கில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் நேற்று (20.07.26) காலை கைது செய்யப்பட்டார். அவரை மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது, செய்தியாளர்கள் தங்களது தொழில்முறை கடமையின் ஒரு பகுதியாக அவரிடம் கருத்து கேட்க முயன்றனர்.
அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ADSP) திபு, செய்தியாளர்களை நோக்கி ஆவேசமாக பாய்ந்து தாக்க முயன்றதுடன், அவர்களை மிரட்டி, ஆபாசமான வார்த்தைகளையும் பேசியுள்ளார்.
ஒரு மூத்த காவல் அதிகாரியின் இத்தகைய செயல்பாடு சட்டத்தின் ஆட்சிக்கும், ஜனநாயக நெறிமுறைகளுக்கும், பத்திரிகைச் சுதந்திரத்திற்கும் எதிரான அப்பட்டமான அத்துமீறலாகும்.
செய்தி சேகரிப்பதும், பொதுநலன் சார்ந்த நிகழ்வுகளில் தொடர்புடையவர்களிடம் கருத்து கேட்பதும் பத்திரிகையாளர்களின் அடிப்படை தொழில்முறை உரிமையும் கடமையும் ஆகும். அந்தக் கடமையை மிரட்டல், அச்சுறுத்தல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் மூலம் தடுக்க முயல்வது, இந்திய அரசியலமைப்பு உறுதி செய்துள்ள பத்திரிகைச் சுதந்திரத்தின் மீது நடத்தப்படும் நேரடித் தாக்குதலாகும்.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ADSP) திபு நடந்து கொண்ட விதம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அவர் தனது சுயகட்டுப்பாட்டை இழந்தவர் போல் நடந்துகொண்டதையும், அவரது ஆவேசத்தை அங்கிருந்த பிற காவல் அதிகாரிகளே தடுக்க முயன்றதையும் தெளிவாக பார்க்க முடிகிறது.
இந்த, அராஜகமான மற்றும் ஜனநாயக விரோதச் செயலை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.
முதலமைச்சர் விஜய் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திபுவை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து, அவர் மீது உரிய சட்ட மற்றும் துறைரீதியான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது.
