’அடேங்கப்பா’.. கருப்பட்டியில் ஜிஎஸ்டி மோசடி! வெளிச்சத்துக்கு வராத ‘கலப்பட பெருச்சாளிகள்’ விவரம்.. குமுறும் ‘உடன்குடி’!

Published On:

| By Mathi

GST Fraud in Udangudi Palm Jaggery: Udangudi Producers Cry Foul Over Hidden Culprits

பனை மரம் (Palm) ‘கற்பக விருட்சம்’ என போற்றப்படுகிறது. இந்தியாவில் மொத்தமுள்ள சுமார் 10.2 கோடி பனை மரங்களில், பாதியளவுக்கு மேல் அதாவது 5.19 கோடிக்கும் அதிகமான பனை மரங்கள் தமிழ்நாட்டில் மட்டுமே செழித்து வளர்ந்துள்ளன. இதன் மூலம் தேசிய அளவில் பனை மரங்கள் நிறைந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் மாநில அரசு (State Tree) மரம் பனை.

தமிழ்நாட்டிலுள்ள பனை மரங்களில் சுமார் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் செறிந்துள்ளன. இதில் தூத்துக்குடி மாவட்டம் மட்டும் சுமார் 1 கோடி பனை மரங்களைக் கொண்டு முதலிடத்தில் திகழ்கிறது. தமிழகத்தில் உற்பத்தியாகும் ஒட்டுமொத்த பனைப் பொருட்களில் சுமார் 90 சதவீதப் பங்களிப்பைத் தூத்துக்குடி மாவட்டம் வழங்குகிறது.

ADVERTISEMENT

பனை மரங்களிலிருந்து கிடைக்கும் பதநீர், கருப்பட்டி, பனை வெல்லம், பதநீர் மூலம் தயாரிக்கப்படும் மிட்டாய்கள் மற்றும் பனை நார்ப்பொருட்கள் போன்ற பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் பனைசார் தொழில்களின் கீழ் தயாரிக்கப்படுகின்றன. பனை வாரிய வர்த்தகம் மூலமாக கடந்த 5 ஆண்டுகளில் பனை வெல்லம் மற்றும் கைவினைப் பொருட்கள் என மொத்தம் ரூ. 80 கோடி அளவுக்கு வர்த்தகம் நடந்துள்ளது.

தமிழகத்தில் பனைத் தொழில் மற்றும் அது சார்ந்த உபதொழில்களை நம்பி லட்சக்கணக்கான கிராமப்புறக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. ஒட்டுமொத்த தமிழக அளவிலும், பனை ஏறும் தொழிலாளர்கள், பதநீர் இறக்குவோர் மற்றும் கருப்பட்டி தயாரிப்போர் என பல லட்சம் பேர் இத்தொழிலைச் சார்ந்துள்ளனர்.

ADVERTISEMENT

தமிழகத்தில் பனை மரங்களிலிருந்து ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான டன் கருப்பட்டி உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக, உடன்குடி கருப்பட்டி அதன் தனித்துவமான மணத்திற்கும் சுவைக்கும் பெயர் பெற்றதுடன், பாரம்பரிய முறைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் புவிசார் குறியீடு பெற்றுள்ளது.

பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்டு பிராண்ட் செய்யப்படாமல் விற்கப்படும் அசல் பனை வெல்லம் மற்றும் கருப்பட்டிக்கு ஜிஎஸ்டி சட்டம் அமல்படுத்தப்பட்ட நாள் முதல் அதாவது 2017-ம் ஆண்டு ஜூலை 1 முதல் வரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

முத்திரையிடப்பட்ட மற்றும் பாக்கெட்டுகளில் விற்கப்படும் வகைகளுக்கு 2022-ம் ஆண்டு ஜூலை 18-ந் தேதி முதல் 5% வரி விதிக்கப்பட்டுள்ளது.

பதநீரில் வெள்ளைச் சர்க்கரை கலக்கப்பட்டு தயாரிக்கப்படும் பட்சத்தில் அந்த கருப்பட்டி அசல் பனை வெல்லம் என்ற பிரிவில் வராது என்பதால், அதற்கு வணிக ரீதியான தயாரிப்புகளுக்கான 18% ஜிஎஸ்டி வரி பொருந்தும்

ஆனால் பனை தொழிலாளர்களை ஊக்கப்படுத்த அரசு அளிக்கும் வரி விலக்குச் சலுகையை சில வியாபார பெருச்சாளிகள் தவறாக பயன்படுத்துகின்றனர்.

அசல் பதநீருக்குப் பதிலாக 60 முதல் 70 சதவீதம் வரை வெள்ளைச் சர்க்கரையை (சீனி, ஜீனி) சேர்த்து போலியான முறையில் கருப்பட்டி தயாரித்து, சர்க்கரை கலக்காத ”ஒரிஜினல் கருப்படி” என கூறி விற்பனை செய்கின்றனர்.

இந்த நிலையில் உடன்குடி பகுதியில் அண்மையில் சுமார் ரூ. 5 கோடி மதிப்பிலான வெள்ளைச் சர்க்கரை மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் போலி கருப்பட்டி தயாரித்து ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு மோசடியில் ஈடுபடுவதாகவும் ஜிஎஸ்டி துறையின் நுண்ணறிவு பிரிவினருக்கு சிலர் தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இந்த தகவலைத் தொடர்ந்து, உடன்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பனை வெல்லம் மற்றும் கருப்பட்டி தயாரிப்புக் கூடங்களில் அதிரடிச் சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்தச் சோதனைகளில், ஆவணங்களின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வெள்ளை சர்க்கரை மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கருப்பட்டி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் வெள்ளைச் சர்க்கரை கலக்கப்பட்டுள்ளதா என சோதனை நடத்தப்பட்டது.

இதில், பாரம்பரிய பதநீருக்கு மாற்றாக வெள்ளை சர்க்கரை முழுமையாக பயன்படுத்தப்பட்டது உறுதியானது. தூத்துக்குடி துறைமுகம் மற்றும் சென்னை வழியாக சிங்கப்பூர், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு அனுப்பப்பட்ட போலி கருப்பட்டி ஏற்றுமதிப் பொருட்களிலும் இந்த வரி ஏய்ப்பு முறைகேடுகள் நடந்துள்ளது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த விசாரணையில், கடந்த 6 ஆண்டுகளாக சர்க்கரைக் கலப்பட கருப்பட்டியை ஒரிஜனல் பனை கருப்பட்டி போல் விற்று ஜிஎஸ்டி வரி ஏய்ப்பில் ஈடுபட்ட 5 முக்கிய கருப்பட்டி வியாபாரிகளுக்கு மொத்தம் ரூ. 38 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்கின்றனர் அதிகாரிகள்.

அந்த 5 பேர் யாரு சார்?

இந்த விவகாரம் தொடர்பாக உடன்குடி ஒரிஜினல் கருப்பட்டி தயாரிப்பாளர்களிடம் நாம் பேசிய போது, “உடன்குடியில் பெரும்பாலானோர் சீனி கலந்துதான் கருப்பட்டி தயாரித்து ஏமாற்றி வருகின்றனர். ஒரிஜினல் கருப்பட்டி காய்ச்சி தயாரிப்பது என்பதை 10, 15 பேர்தான்.

இப்போதுதான் திடீரென ஜிஎஸ்டி அதிகாரிகள் வந்ததாக சொல்கிறார்கள்.. கருப்பட்டி கலப்படத்துக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு மோசடிக்காக மட்டுமே நடவடிக்கை எடுத்துள்ளதாக சொல்கிறார்கள். ஆனாலும் அப்படி மோசடி செய்த டுபாக்கூர் பேர்வழிகள் யாரென்று சொல்லவே இல்லையே? ஏன் அவர்களது விவரங்களை அதிகாரிகள் பகிரங்கப்படுத்தவில்லை? அபராதம் விதித்தது உண்மைதான் என்பதை எப்படி நாங்கள் தெரிந்து கொள்வது?

பாரம்பரியமான, புவிசார் குறியீடு பெற்ற உடன்குடி கருப்பட்டியின் ‘மானத்தை’ காப்பாற்ற முழு வீச்சில் கலப்பட கருப்பட்டி தயாரிப்போர் அனைவரையும் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் காலத்துக்கும் உடன்குடி கருப்பட்டியின் பெயர் நிலைத்து நிற்கும்” என குமுறுகின்றனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share