அதிமுக அலுவலக கலவரம் தொடர்பான வழக்கில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி என இருதரப்பைச் சேர்ந்த 64 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சென்னை அடுத்த வானகரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழுவை நடத்தியது.
அதை தடுத்து நிறுத்த பன்னீர்செல்வம் முயன்றும் நீதிமன்றம் தடை விதிக்க மறுத்தது. இதையடுத்து ஓ.பன்னீர் செல்வம் அவரது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் சென்றார்.
ஆனால் ஏற்கனவே எடப்பாடி ஆதரவாளர்கள் அலுவலகத்தை பூட்டிவிட்டுச் சென்றுவிட்டனர். அதை உடைத்து பன்னீர் தரப்பினர் உள்ளே சென்றனர்.
இதனால் ஓபிஎஸ் மற்றும் இபிஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் வெடித்தது. அதில் 44க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் காரணமாக அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டு பின்னர் சீல் அகற்றப்பட்டது.
இதில் இரு தரப்பையும் சேர்ந்த சுமார் 400க்கும் மேற்பட்டோர் மீது, கலவரத்தை தூண்டுதல், சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் ராயப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களான அதிமுக மாசெக்கள் ஆதிராஜராம், விருகை ரவி உள்ளிட்ட 37 பேரும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 27 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
உயர்நீதிமன்றம் வழங்கிய ’நிபந்தனை’ உத்தரவு!
இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நீதிபதி என். சதீஸ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அதிமுக அலுவலக கலவரம் தொடர்பான வழக்கில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி என இருதரப்பைச் சேர்ந்த 64 பேருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கினார்.
64 பேரும் சிபிசிஐடி விசாரணை அதிகாரி முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், ஒவ்வொருவரும் தலா 20 ஆயிரம் ரூபாயை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
