செங்கல்பட்டு அருகே ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக, சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் விரைவு ரயில்கள் தற்போது 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் 45 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கருங்குழி பகுதியில் நேற்று இரவு திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் சென்னை எழும்பூரிலிருந்து தென்மாவட்டங்களுக்குப் புறப்பட்ட விரைவு ரயில்கள் செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
திருச்செந்தூர், கன்னியாகுமரி, கொல்லம், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
எந்தெந்த ரயில்கள் எவ்வளவு நேரம் தாமதம்?
ரயில்வே தகவல்களுக்கான 139 எண் அளித்த தகவல்கள்:
- திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் (20605) – 2 மணி நேரம் 15 நிமிடங்கள் தாமதம்.
- திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் (16105) – 2 மணி நேரம் 45 நிமிடங்கள் தாமதம்.
- கொல்லம் எக்ஸ்பிரஸ் (16101) – 3 மணி நேரம் தாமதம்.
- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (12633) – 3 மணி நேரம் 45 நிமிடங்கள் தாமதம்.
- முத்துநகர் எக்ஸ்பிரஸ் (12693) – 2 மணி நேரம் 45 நிமிடங்கள் தாமதம்.
- பொதிகை எக்ஸ்பிரஸ் (12661) – 2 மணி நேரம் 48 நிமிடங்கள் தாமதம்.
- நெல்லை எக்ஸ்பிரஸ் (12631) – 2 மணி நேரம் 36 நிமிடங்கள் தாமதம்.
- பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12637) – 2 மணி நேரம் 33 நிமிடங்கள் தாமதம்.
இரவு நேரத்தில் ரயில்கள் நீண்ட நேரம் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சிக்னல் கோளாறைச் சரிசெய்யும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதேபோல சென்னைக்கு வந்து கொண்டிருந்த தென் மாவட்ட ரயில்களும் சில மணிநேரம் தாமதமாக வந்தடையும் என தெரிகிறது.
பயணிகள் தங்களது ரயில்களின் தற்போதைய இயக்க நிலவரத்தை NTES செயலி அல்லது ரயில்வே உதவி எண் 139 மூலம் தெரிந்துகொள்ளலாம்.
