“லட்சக்கணக்கில் டொனேஷன், பீஸ் எல்லாம் வாங்குறீங்க… ஆனா நம்ம பிள்ளைகளுக்குப் பாடம் எடுக்குறது யாரு? அவங்க தகுதியானவங்க தானா?” இந்தக் கேள்வி பல பெற்றோர்கள் மனதில் நீண்ட நாட்களாகவே இருக்கிறது. அந்தக் குறையைப் போக்க மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) இப்போது கையில் சாட்டையை எடுத்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகள், தங்கள் இணையதளங்களில் (Official Website) ஆசிரியர்களின் விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
என்ன உத்தரவு? சிபிஎஸ்இ வாரியம், அனைத்துப் பள்ளி முதல்வர்களுக்கும் ஒரு முக்கியச் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், “பல பள்ளிகள் தங்கள் இணையதளத்தில் ஆசிரியர்களின் விவரங்களைச் சரியாகப் பதிவேற்றுவதில்லை. இனி அந்தக் கதை நடக்காது” என்று எச்சரித்துள்ளது.
பள்ளிகள் தங்கள் இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் (Home Page) அல்லது ‘Information’ பகுதியில் ஆசிரியர்களின் பெயர், கல்வித் தகுதி மற்றும் அனுபவம் ஆகியவற்றை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.
ஏன் இந்த கெடுபிடி? சிபிஎஸ்இயின் OASIS போர்ட்டலில் பள்ளிகள் கொடுக்கும் தகவலுக்கும், பள்ளியின் சொந்த இணையதளத்தில் இருக்கும் தகவலுக்கும் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சில பள்ளிகள் தகுதி இல்லாத ஆசிரியர்களை வைத்துப் பாடம் நடத்துவதும், ரெக்கார்டில் வேறு பெயர்களைக் காட்டுவதும் நடப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன, ஆகையால் வெளிப்படைத்தன்மையை (Transparency) உறுதி செய்யவே இந்த நடவடிக்கை.
கடைசி தேதி என்ன? இதையெல்லாம் சரி செய்யப் பள்ளிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள காலக்கெடு: பிப்ரவரி 15, 2026.
இந்தத் தேதிக்குள் விவரங்களைப் புதுப்பிக்காத பள்ளிகள் மீது, இணைப்பு விதிகள் (Affiliation Bye-laws) அத்தியாயம் 12-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிஎஸ்இ எச்சரித்துள்ளது. அபராதம் அல்லது அங்கீகார ரத்து கூட நடக்கலாம்!
பெற்றோர்களே… நீங்க லட்சக்கணக்கில் பீஸ் கட்டுற ஸ்கூல் வெப்சைட்டை என்னைக்காவது ஓப்பன் பண்ணிப் பார்த்திருக்கீங்களா? பிப்ரவரி 15ஆம் தேதிக்கு அப்புறம் செக் பண்ணுங்க.
உங்க குழந்தைக்குப் பாடம் எடுக்குற டீச்சர் என்ன படிச்சிருக்காருன்னு தெரிஞ்சுக்க வேண்டியது உங்க உரிமை. ஸ்கூல் நிர்வாகம் ஏதாவது மறைச்சா, சிபிஎஸ்இ-க்கு மெயில் தட்டிவிடுங்க!
