பட்ஜெட்… நகராட்சி நிர்வாகத்துறை அசத்தல் அறிவிப்புகள் இதோ!

Published On:

| By Minnambalam

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 – 26-ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 14) தாக்கல் செய்தார்.

நகராட்சி நிர்வாகத்துறைக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டு தங்கம் தென்னரசு பேசும்போது,

ADVERTISEMENT

“தமிழ்நாட்டில் நகர்ப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, பொது சுகாதாரம், இணைப்புச் சாலைகள், தெருவிளக்குகள், நவீன மின் மயானம், நூலகங்கள் மற்றும் கணினியுடன் கூடிய அறிவுசார் மையங்கள் உள்ளிட்ட சமுதாய அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கும் நோக்கத்தோடு செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த 4 ஆண்டுகளில் 4,132 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், இத்திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ள பணிகளுக்காக, வரும் நிதியாண்டில் 2,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


2025-26-ஆம் ஆண்டில் பல்வேறு திட்ட நிதிகளைத் திரட்டி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 6,483 கி.மீ. நீளமுள்ள சாலைகள் 3,750 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தின் கீழ்,
குறிப்பாக 570 கி.மீ. நீளமுள்ள சாலைகள் 486 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநகராட்சியிலும், கோயம்புத்தூர், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், மதுரை
மாநகராட்சிப் பகுதிகளில் 130 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ADVERTISEMENT

சென்னை மாநகராட்சி சார்பில் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ்,கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் உயிரி எரிவாயு (Bio CNG) நிலையம், இயற்கை உரம் தயாரிக்கும் நிலையம், தானியங்கி பொருள் மீட்பு மையம் (Automatic Material Recovery Facility) மற்றும் 21 மெகாவாட் திறன் கொண்ட திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி 3,450 கோடி ரூபாய் திட்டக்காலத்திற்கான மதிப்பீட்டில் தொடங்கப்படும்.

இதைப் போன்று, திறன்மிக்க திடக்கழிவு மேலாண்மை மற்றும் மின்சார உற்பத்தி செய்யும்பொருட்டு, சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சிகளுக்கு அருகிலுள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்குப் பயன்படும் வகையில், திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை (Waste to Energy Plant) தாம்பரம் மாநகராட்சிப் பகுதியில் நிறுவப்படும். இத்திட்டத்தின் கீழ் 1,500 டன் மறுசுழற்சி செய்ய இயலாத திடக்கழிவின் செயலாக்கம் மூலம் தினந்தோறும் 15 முதல் 18 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க இயலும்.

ADVERTISEMENT

நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்குத் தூய்மையான மற்றும் பசுமையான வாழிடச் சூழலை உருவாக்கும்பொருட்டு, அடையாறு நதியை மீட்டெடுத்து அழகுறச் சீரமைக்கும் திட்டம் 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் தொடங்கப்பட்டுள்ளது.

முப்பது மாத காலத்திற்குள் பணிநிறைவடையக் கூடிய இத்திட்டத்தின் முதற்கட்டமாக, சைதாப்பேட்டை முதல் திரு.வி.க. பாலம் வரையிலான பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 15 மாதங்களுக்குள் இப்பணிகள் முடிக்கப்படும். பருவநிலைமாற்றத்திலிருந்து மீட்கும் தன்மையுடைய ஏழு மழைநீர் உறிஞ்சும் பல்லுயிர்ப் பூங்காக்கள்(Sponge Park) சென்னை பெருநகரப் பகுதியில் 88 கோடி ரூபாய்மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள காவிரி, வைகை,நொய்யல், தாமிரபரணி ஆற்றங்கரைகளில் அமைந்துள்ள மாநகராட்சிப் பகுதிகளிலிருந்து உருவாகும் கழிவுநீர், ஆற்றில் நேரடியாகக் கலப்பதைத் தடுக்கும் பொருட்டு நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், நடைபாதைகள், தெருவிளக்குகள், ஓய்வறைகள், குழந்தைகள் விளையாட்டுப் பூங்காக்கள் மற்றும் இதர நவீன வசதிகளுடன் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நதிக்கரை மேம்பாட்டுப் பணிகள் திருச்சி, மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சிகளில் மொத்தம் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும்

சென்னைப் பெருநகர மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் அளவிலும், கோவை மாநகராட்சியில்
120 கோடி ரூபாய் அளவிலும், திருச்சி மாநகராட்சியில் 100 கோடி ரூபாய் அளவிலும் மற்றும் திருப்பூர் மாநகராட்சியில் 100 கோடி ரூபாய் அளவிலும் நகர்ப்புற நிதிப் பத்திரங்கள் வாயிலாக, கூடுதல் நிதி ஆதாரங்களைத் திரட்டுவதன் மூலம் நகர்ப்புற உட்கட்டமைப்புத் திட்டங்களை நிறைவேற்றிடத் தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன” என்று தெரிவித்தார். Budget 2025 Municipal corporation

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share