குத்துச்சண்டை வீரர் முகமது அலியை அனைவருக்கும் தெரியும். GOAT (greatest of all time) என்ற வார்த்தையே இவருக்காக உருவானதுதான். முகமது அலி காலத்தில் அவருக்கு சிம்ம சொப்பனமாக ஒரு வீரர் இருந்தார். அவர்தான், ஜார்ஜ் ஃபோர்மேன். முகமது அலியின் காலக்கட்டத்தில் அவரை எதிர்த்து அசால்ட்டாக நிற்கக் கூடிய ஒரே குத்துச்சண்டை வீரர் இவர்தான்.
இந்த நிலையில், ஜார்ஜ் ஃபோர்மேன் தனது 76வது வயதில் உயிரிழந்துள்ளார். இது குறித்து அவரின் குடும்பத்தினர், ”மனிதாபிமானம் கொண்டவர், ஒலிம்பியன் மற்றும் இரண்டு முறை உலக ஹெவிவெயிட் சாம்பியனான ஜார்ஜ் ஃபோர்மேன் காலமாகி விட்டார்” என்று இன்ஸ்டாகிராம் வழியாக தெரிவித்துள்ளனர். boxer George Foreman dies at 76
1949ம் ஆண்டு அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் பிறந்த ஃபோர்மேன் ஹூஸ்டனில் வளர்ந்தார். 13 வயதிலேயே 6 .3 அடி உயரத்துடன் ஆஜானுபாகுவான தோற்றத்தில் இருந்த ஃபோர்மேன், 16 வயதில் ரிங்கில் இறங்கினார்.

தொடர்ந்து, 1968 ஆம் ஆண்டு மெக்சிகோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார். 1972 ஆம் ஆண்டு முதன் முறையாக ஹெவி வெயிட் சாம்பியன் ஆனார். 1974ஆம் ஆண்டு நடந்த பிரபலமான ‘ரம்பிள் இன் தி ஜங்கிள்’ சண்டையில் முகமது அலியிடம் ஹெவி வெயிட் சாம்பியன் பட்டத்தை இழந்தார்.
இதன் காரணமாக 1976 ஆம் ஆண்டு ஓய்வு அறிவித்தார். பின்னர், மீண்டும் 1988ஆம் ஆண்டு 10 வருடம் கழித்து மீண்டும் தொழில்முறை குத்துச்சண்டைக்குள் நுழைந்தார். அதாவது, மைக் டைசனுடன் மோத வேண்டுமென்பது ஃபோர்மேனின் ஆசையாக இருந்தது. அதனால், மீண்டும் களம் கண்டார். அப்போது, வயது 38 ஆகியிருந்தது. பல போட்டிகளில் வெற்றியை குவித்தார். ஆனால், மைக் டைசனுடன் மட்டும் மோதும் வாய்ப்பு உருவாகவில்லை.boxer George Foreman dies at 76
உச்சக்கட்டமாக 1994 ஆம் ஆண்டு ஹெவி வெயிட் சாம்பியன் பட்டத்துக்காக லாஸ்வேகாஸ் நகரில் மைக்கேல் மூரேடுடன் மோதி வெற்றி பெற்றார். அப்போது, ஃபோர்மேனுக்கு வயது 45 ஆண்டுகள் 299 நாட்கள் ஆகியிருந்தது.
20 வருடத்துக்கு முன் , முகமது அலியிடம் இழந்த ஹெவிவெயிட் பட்டத்தை மீண்டும் பெற்ற மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தார் ஃபோர்மேன். இதன்மூலம், அதிக வயதில் அதாவது , 45 வயதில் குத்துச்சண்டை சாம்பியன் ஆனவர் என்ற பெருமையும் கிடைத்தது.

ஃபோர்மேனுக்கு வயது 48 ஆண்டுகள் 316 நாட்கள் ஆகியிருந்த போது, 1997 ஆம் ஆண்டு ஷானான் பிக்ஸ் உடன் மோதினார். இந்த மோதலில் தோல்வி கண்ட ஃபோர்மேன் இறுதியாக குத்துச்சண்டைக்கு உறுதியான விடை கொடுத்தார்.
ஃபோர்மேன் மொத்தம் 81 தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் 68 நாக் அவுட்கள் உட்பட 76 வெற்றிகளைப் பெற்றுள்ளார். டாமி மாரிசன், இவான்டர் ஹோலிபீல்டு, ஜிம்மி யங்க், முகமது அலி என நான்கு வீரர்களிடம் மட்டுமே ஃபோர்மேன் தோல்வி கண்டுள்ளார்.
குத்துச்சண்டை உலகில் இவரை ‘பிக் ஜார்ஜ் ‘என்று அன்புடன் அழைப்பார்கள்.