பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது, அக்கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் துன்புறுத்தல், கட்டாயக் கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, கட்சியின் தேசிய மற்றும் மாநில மேலிடத்திற்குப் புகார் கடிதம் அனுப்பியுள்ளார். இதைத் தொடர்ந்து, இன்று கருப்பு முருகானந்தம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், கர்நாடக மாநில பாஜக பிற்படுத்தப்பட்டோர் அணிச் செயலாளராகப் பணியாற்றிய அவர் தனக்கு இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அரசியல் தொடர்புகள் காரணமாகக் கருப்பு முருகானந்தத்துடன் அறிமுகம் ஏற்பட்ட நிலையில், அவர் தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகவும், குழந்தைகளின் பள்ளிக்கூடப் பதிவேடுகளில் காப்பாளராகத் (Guardian) தன் பெயரைப் பதிவு செய்து பாதுகாப்பதாக உறுதி அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறிய உறுதிமொழியை நம்பி, பெங்களூரில் இருந்த வீட்டையும் கர்நாடக மாநில பாஜக பொறுப்பையும் துறந்து, 2024 முதல் திருச்சியில் குடியேறியதாகப் புகாரில் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் வசித்த காலத்தில், கருப்பு முருகானந்தம் தன்னை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் கடுமையாகத் துன்புறுத்தியதாகவும், பலவந்தமாக உறவு வைத்துக்கொண்டதால் தான் கர்ப்பமடைந்த நிலையில், தன் விருப்பத்திற்கு மாறாக அதிகாரத்தைப் பயன்படுத்திக் கட்டாயக் கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
கொலை மிரட்டல் மற்றும் சொத்துப் பறிப்பு முயற்சி:
மேலும், தனக்கும் தன் குழந்தைகளுக்கும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு கேட்டபோது, கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாகவும், பெங்களூரில் உள்ள தனது சொந்த வீட்டை ஆக்கிரமிக்கச் சதி செய்து, தன்னையும் தனது மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் நடுத்தெருவில் நிற்க வைத்துள்ளதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
முருகானந்தம் மீது பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita) பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புகார் அளித்த தனக்குக் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் பாஜக ஒழுங்கு நடவடிக்கைக் குழு நடுநிலையான உட்கட்சி விசாரணை நடத்தி, விசாரணை முடியும் வரை கருப்பு முருகானந்தத்தைக் கட்சிப் பொறுப்பிலிருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும், குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படும் பட்சத்தில் அவரைக் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என்றும் கட்சித் தலைமையைக் கேட்டுக்கொண்டுள்ளார். அவர்கள் பேசியதாக கூறப்படும் ஸ்கிரீன் ஷார்ட்களும் இணையதளங்களில் கசிந்துள்ளன.
பெண் அளித்த பாலியல் புகாரைத் தொடர்ந்து, இன்று அவரை கட்சியிலிருந்து நீக்கி பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

கருப்பு முருகானந்தம் மறுப்பு:
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) தளப் பதிவில்:
“ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்பில் தொடங்கிய எனது இந்த நெடிய பயணம், பாரதிய ஜனதா கட்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்விதப் புகாருமின்றித் தூய்மையான முறையில் அர்ப்பணிப்புடன் தொடர்ந்த ஒன்றாகும். இத்தகைய சூழலில், முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் மூலமாக எவ்வித முறையான விசாரணையும் நடத்தப்படாமல், என்னை உடனடியாகப் பொறுப்பிலிருந்து விடுவித்தது மிகுந்த கண்டனத்திற்குரியது.
இது தொடர்பாக தேசியப் பொதுச் செயலாளர் மாண்புமிகு சந்தோஷ் ஜி அவர்களிடமும், மாநிலப் பொறுப்பாளர் மாண்புமிகு அரவிந்த் மேனன் ஜி அவர்களிடமும் நான் ஏற்கெனவே பேசியுள்ளேன். ஒழுங்கு நடவடிக்கைக் குழு முழுமையாக விசாரித்த பிறகே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவ்வாறான எவ்வித விசாரணையுமின்றி, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் புனையப்பட்ட போலிப் புகார் மனுவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு என் மீது நடவடிக்கை எடுத்திருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும், இத்தகைய போலிச் செய்திகளையும் வதந்திகளையும் பரப்புவோர் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
