தமிழ்நாடா, குஜராத்தா: எது சிறந்த மாடல்?

Published On:

| By Minnambalam Desk

Best Model Tamilnadu or Gujarat

கிறிஸ்டோஃப் ஜாஃப்ரெலாட்  Best Model Tamilnadu or Gujarat

இந்தியாவில் தற்போது நிலவும் பொருளாதார மந்தநிலையும் வேலையின்மையும், பொருளாதார முன்மாதிரிக்கான தேடலை முன்னெப்போதையும்விட அவசியமாக்குகின்றன. Best Model Tamilnadu or Gujarat

2014 தேர்தல் பிரச்சாரத்தின்போது, ​​குஜராத்தை நரேந்திர மோடி இந்தியாவுக்கான சிறந்த “முன்மாதிரியாக” முன்வைத்தார். தமிழ்நாடு இன்று ஒரு மாற்று முன்மாதிரியை முன்வைக்கிறது. “திராவிட மாதிரி“யின் அடையாளமாகத் தமிழ்நாடு முன்னிறுத்தப்படுகிறது.

வளர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரை 2023-24ஆம் ஆண்டில் சுமார் 8% ஆக இருந்த குஜராத்தும் தமிழ்நாடும் சரிசமமாக இருந்தன. தனிநபர் வருமானம் முறையே ரூ.1.8,ரூ. 1.6 லட்சமாக இருந்தது.

உலக வங்கியின் அளவுகோல்களின்படி, 2023ஆம் ஆண்டில் இந்த இரு மாநிலங்களிலும் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் விகிதம் (கிராமப்புறங்களில் மாதத்திற்கு ரூ.1,059.42, நகர்ப்புறங்களில் மாதத்திற்கு ரூ.1,286) தமிழ்நாட்டில் 5.8% ஆகவும், குஜராத்தில் 21.8% ஆகவும் இருந்தது. Best Model Tamilnadu or Gujarat

2022-23ஆம் ஆண்டில், கிராமப்புறங்களில் “விவசாயம் அல்லாத துறைகளில் தொழிலாளர்களாக” பணிபுரியும் ஆண்களின் சராசரி தினசரி ஊதியம் குஜராத்தை விட (ரூ. 273.10) தமிழ்நாட்டில் அதிகம் (ரூ. 481.50). விவசாயத் தொழிலாளர்களுக்குத் தமிழ்நாட்டில் ரூ. 470 ஊதியம் வழங்கப்படுகிறது. குஜராத்தில் ரூ. 241.9 மட்டுமே. 

கிராமப்புறங்களில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தினசரி ஊதியம் 2022-23ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ரூ. 500.90 க்கும் அதிகமாக இருந்தது. குஜராத்தில் ரூ. 323.20ஆக இருந்தது. Best Model Tamilnadu or Gujarat

கல்வியறிவைப் பொறுத்தவரை, தமிழ்நாடும் (85.5%) குஜராத்தும் (84.6%) கிட்டத்தட்ட சமம்தான். ஆனால், அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பின்படி (AISHE, 2020-21) தமிழ்நாட்டின் மொத்த சேர்க்கை விகிதங்கள் (GER) குஜராத்தைவிட மிக அதிகமாக உள்ளன. இது தமிழ்நாட்டில் 13.4% பட்டதாரிகளும், குஜராத்தில் 8.9% மட்டுமே பட்டதாரிகளும் உள்ளனர்.

இந்தப் புள்ளிவிவரங்கள் குஜராத்தில் அதிக இடைநிற்றல் இருப்பதைப் பிரதிபலிக்கின்றன. தமிழ்நாட்டில் உயர்நிலைப் பள்ளிக் குழந்தைகளில் 2021-22ஆம் ஆண்டில் GER 98.3 ஆகவும், உயர்நிலைப் பள்ளியின் இறுதியில் 81.5 ஆகவும் இருந்தது. குஜராத்தில் இந்த GER விகிதங்கள் 91.1இலிருந்து 48.2 ஆகக் குறைந்தன (தேசிய சராசரியான 94.7 மற்றும் 57.6ஐவிட மிகக் குறைவு).

கற்பிக்கும் மொழியும் மிகவும் முக்கியமானது. 2017-18ஆம் ஆண்டில், தேசிய மாதிரி கணக்கெடுப்பு தொடக்கப்பள்ளியில் கற்பிக்கும் மொழி குறித்துப் பெற்றோர்களிடையே ஆய்வு நடத்தியது. தமிழ்நாட்டில் நேர்காணல் செய்யப்பட்ட பெற்றோர்களில் 91% பேர் தங்கள் குழந்தைகள் தொடக்கப்பள்ளியில் ஆங்கிலத்தில் கல்வி பெற்றதாகக் கூறினர், குஜராத்தில் இது 27% ஆகும்.

சுகாதார நிலைமையைப் பல வழிகளில் அளவிட முடியும். தமிழ்நாட்டின் குழந்தை இறப்பு விகிதம் 13/1000 (பிறக்கும் ஒவ்வொரு ஆயிரம் குழந்தைகளிலும் 13 குழந்தைகள் இறக்கின்றன). குஜராத்தில் இது 23/1000. Best Model Tamilnadu or Gujarat

வளர்ச்சியின் அடிப்படையில் பார்த்தால் குஜராத் மாடல் வெற்றிக் கதை. ஆனால் இங்கே உருவாக்கப்பட்ட செல்வம் சிறுபான்மையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பெருமளவிலான வறுமை இங்கே நிலவுகிறது. தமிழ்நாட்டில் சமூக அளவிலான சமத்துவமின்மை ஒப்பீட்டளவில் குறைவு.

கொள்கைகளின் முக்கியத்துவம் Best Model Tamilnadu or Gujarat

இரு மாநிலங்களின் சமூக, வரலாற்றுப் பின்னணி முக்கியமானது. வர்த்தகம் சார்ந்த பகுதியான குஜராத்தில் வணிக சாதிகளால் அம்மாநிலம் பாரம்பரியமாகப் பயனடைந்திருக்கிறது. திராவிட இயக்கச் சிற்பிகளின் சமத்துவ நெறிமுறைகள் தமிழ்நாட்டிற்குப் பலனளித்துள்ளன. குஜராத் உள்கட்டமைப்பில் அதிக முதலீடு செய்தது. தமிழ்நாடு சமூக சமத்துவக் கொள்கைகளில் அதிக கவனம் செலுத்தியது. 

பொது சுகாதாரக் கொள்கை இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. பணக்கார மாநிலமாக இருந்தாலும், குஜராத் தமிழ்நாட்டைவிட இதில் பின்தங்கியுள்ளது. 2012-13, 2019-20க்கு இடையில் அதன் சுகாதாரச் செலவு 10.5% மட்டுமே அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இதே காலகட்டத்தில் இது 20.5% ஆக இருந்தது. இதன் விளைவாக, 2018ஆம் ஆண்டில், ஒரு மில்லியன் மக்களுக்குப் பொது மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 1,000 க்கும் அதிகமாக இருந்தது. குஜராத்தில் ஒரு மில்லியன் மக்களுக்கு 316 பொது மருத்துவமனைப் படுக்கைகளே இருந்தன.

மேலே எடுத்துக்காட்டிய கல்வித் துறையில் உள்ள சில வேறுபாடுகள், மாறுபட்ட கொள்கைகளையும் பிரதிபலிக்கின்றன. இலவச மதிய உணவுத் திட்டம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதை ஊக்குவிக்கிறது. இந்தத் துறையில் முன்னோடி மாநிலமான தமிழ்நாடு, 2017-18ஆம் ஆண்டில், 85.4% மேல்நிலைப் பள்ளிகளில் இலவச மதிய உணவு வழங்கியது. குஜராத்தில் 11% பள்ளிகளில் மட்டுமே இலவச மதிய உணவு வழங்கப்பட்டது. Best Model Tamilnadu or Gujarat

தமிழ்நாடு மனித வளங்களில் (குறிப்பாக கல்வி, சுகாதாரம்) முதலீடு செய்துள்ளது. குஜராத் உள்கட்டமைப்பில் (எரிசக்தி, போக்குவரத்து) கவனம் செலுத்தியுள்ளது. இதன் விளைவாக, குஜராத்தின் மின் உற்பத்தித் திறன் 45,913 மெகாவாட்டாக உள்ளது. தமிழ்நாட்டின் மின் உற்பத்தி திறன் 37,514 (பிகாரில் 7555 மட்டுமே).

 Best Model Tamilnadu or Gujarat

மோடியின் ஆட்சியில், குஜராத் மெகா திட்டங்களை ஊக்குவித்து வருகிறது. குஜராத் சிறப்பு முதலீட்டு பிராந்திய சட்டம், மாநிலத்தில் ‘மெகா முதலீட்டுப் பகுதிகள், தொழில்துறை பகுதிகள் ஆகியவற்றின் வளர்ச்சியைச் செயல்படுத்துவதற்கான சட்டக் கட்டமைப்பை உருவாக்குவதற்காக’ நிறைவேற்றப்பட்டது. இதன் இறுதி நோக்கம் ‘உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பைக் கொண்ட உலகளாவிய பொருளாதார நடவடிக்கை மையங்களை’ உருவாக்குவதாகும். Best Model Tamilnadu or Gujarat

இந்தச் சட்டம் 2009 தொழில்துறைக் கொள்கையின் முக்கிய அம்சமாகும், இது ‘இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலும் குஜராத்தை மிகவும் கவர்ச்சிகரமான முதலீட்டு இடமாக மாற்றுவதற்காக’ வெளிப்படையாக வடிவமைக்கப்பட்டது. இது ‘மெகா திட்டங்களை’ இலக்காகக் கொண்டது. ரூ. 10 பில்லியனுக்கும் அதிகமான (ரூ. 125 மில்லியன்) திட்ட முதலீட்டைக் கொண்ட இந்தத் திட்டத்தால் 2,000 பேருக்கு மட்டுமே நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும். ஒரு வேலைக்கு ரூ. 500,000 ($6,250) என்ற விகிதம், மூலதனத்தில் மட்டுமே தீவிர ஈடுபாடு காட்டும் போக்கின் தெளிவான அறிகுறி என்று இந்திரா ஹிர்வே, நேஹா ஷா, ராஜீவ் சர்மா ஆகியோர் 2014ஆம் ஆண்டு எழுதிய ‘வளர்ச்சி அல்லது மேம்பாடு: குஜராத் எந்த வழி செல்கிறது?’ என்னும் நூலில் குறிப்பிடுகின்றனர். 

இந்தக் கொள்கையால் அதிகப் பயனடைந்த பெரிய நிறுவனங்களான ரிலையன்ஸ், அதானி குழுமம், டாடா, எஸ்ஸார் போன்றவை, குஜராத்தில் அதிக முதலாளித்துவ உற்பத்தித் தளங்களை உருவாக்கின. நாட்டிலேயே மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களும் இதில் அடக்கம். இதற்கு நேர்மாறாக, தமிழ்நாடு தொடர்ந்து சிறு-குறு நிறுவனங்களை (SME) ஊக்குவித்துவருகிறது. 

குஜராத்தில் தமிழ்நாட்டைவிடக் கிட்டத்தட்ட 25% குறைவான தொழிற்சாலைகள் இருந்தாலும், அதன் தொழில்துறை உற்பத்தி இந்திய மொத்த உற்பத்தியில் 18% ஆகும். தமிழ்நாட்டின் உற்பத்தி 10% மட்டுமே. இந்தப் புள்ளிவிவரங்கள் மிகவும் மாறுபட்ட பொருளாதார அமைப்பை பிரதிபலிக்கின்றன. தமிழ்நாட்டின் தொழில்துறை அமைப்பில் SMEகளின் ஆதிக்கம் அதிகம். குஜராத் மாநிலமோ எரிசக்தி, பெட்ரோ கெமிக்கல் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற பெரிய, அதிக மூலதனம் தேவைப்படும் நிறுவனங்களின் சாம்ராஜ்யம். Best Model Tamilnadu or Gujarat

தமிழ்நாடும் குஜராத்தும் தொழில்துறை சார்ந்த பார்வையில் வேறுபடுவது மட்டுமல்லாமல், சேவைத் துறைகளிலும் மாறுபட்ட அணுகுமுறையைக் கொண்டுள்ளன.

குஜராத் அதன் ஒட்டுமொத்த மாநில உற்பத்தியுடன் (GSDP) ஒப்பிடுகையில் குறைந்த அளவிலேயே சேவைத் துறையில் பங்களித்துவருகிறது. இது தொடர்ந்து 30-33% அளவில் உள்ளது. இருப்பினும், குஜராத்தில் சேவைத் துறையின் மொத்த மதிப்புக் கூட்டல் (GVA) 2011-12ஆம் ஆண்டில் ரூ.2,092.14 பில்லியனிலிருந்து 2022-23 ஆம் ஆண்டில் ரூ.4,509.03 பில்லியனாக வளர்ந்தது. இது வலுவான வளர்ச்சியைக் குறிக்கிறது. குறிப்பாக 2015இல் குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரம் (GIFT) உருவாக்கப்பட்ட பிறகு, குஜராத்தில் நிதிச் சேவைகள் மிகவும் அற்புதமான வளர்ச்சியை அடைந்துள்ளன.

2020ஆம் ஆண்டில், GIFT நகரத்தின் சர்வதேச நிதி சேவைகள் மையம் உலகளாவிய நிதி மையக் குறியீட்டில் 10ஆவது இடத்தைப் பிடித்தது. GIFT நகரத்தின் உயர்வுக்குப் பெரும்பாலும் மும்பையை அடிப்படையாகக் கொண்ட சில நிதி நடவடிக்கைகள் மாற்றப்பட்டதே காரணம். 2011-12ஆம் ஆண்டில் குஜராத்தின் நிதி சேவைத் துறை சேவைத் துறையின் வருவாயில் 72% ஐப் பெற்றிருந்தது. இது 2022-23ஆம் ஆண்டில் 87% ஆக உயர்ந்தது. Best Model Tamilnadu or Gujarat

தமிழ்நாட்டில் சேவைத் துறையின் மொத்த மதிப்புக் கூட்டல் 2011-12ஆம் ஆண்டில் ரூ.3,612.27 பில்லியனிலிருந்து 2023-24ஆம் ஆண்டில் ரூ.7,447.96 பில்லியனாக அதிகரித்துள்ளது. இது கிட்டத்தட்ட இரு மடங்காகும். கல்வி, மனித வளம் ஆகிய துறைகளில் மாநிலத்தின் நிலையான முதலீடு இந்த வளர்ச்சியை முக்கியப் பங்கு வகித்துள்ளது. ஒட்டுமொத்த மாநில உற்பத்தியில் (GSDP) வளர்ச்சி இருந்தபோதிலும், தமிழ்நாட்டின் சேவைத் துறையின் செயல்பாடு, எந்தவொரு துறையையும் சார்ந்திராத பன்முகப்படுத்தப்பட்ட பொருளாதார மாதிரியைக் கொண்டுள்ளது.

நிதிச் சேவைத் துறையின் களத்தில் குஜராத் முன்னேற்றம் அடைந்துவந்தாலும் அது ஐடி துறையில் பலவீனமாகவே உள்ளது. முறையான பல்கலைக்கழக அமைப்பும் ஆங்கிலத்தில் பரவலான, சரளமான புலமையும் இல்லாததால் திறமையான மனிதவளம் அங்கே இல்லை. இதற்கு நேர்மாறாக, தமிழ்நாடு ஒரு முழுமையான கட்டமைப்பின் அடிப்படையில் ஐடி கொள்கையைச் செயல்படுத்துகிறது. மாநிலம் மிகவும் அதிநவீன பயிற்சி மையங்களை மட்டுமல்ல, ஐடி பூங்காக்களையும் உருவாக்கியுள்ளது.

2000ஆம் ஆண்டு சென்னையில் திறக்கப்பட்ட டைடல் பூங்கா, ஆசியாவின் மிகப்பெரிய ஐடி பூங்காக்களில் ஒன்றாகும். பெங்களூரு, ஹைதராபாத்திற்குப் பிறகு இந்த நகரம் இந்தியாவில் மூன்றாவது பெரிய மென்பொருள் ஏற்றுமதியாளராக உள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 800,000 பேர் ஐடி துறையில் பணிபுரிகின்றனர். இதைத் தவிரப் பலரும் ஐடி துறையால் உருவாக்கப்பட்ட மறைமுக வேலைவாய்ப்புகளைப் பெற்றிருக்கிறார்கள். மோடியின் இந்தியாவில் வர்த்தக உலகின் முன்னணியில் இருக்கும் கௌதம் அதானிகூடத் தமிழ்நாட்டின் ஐடி துறையில் பெருமளவில் முதலீடு செய்துவருகிறார். மாநிலம் செயற்கை நுண்ணறிவின் மையமாகவும் மாறிவருகிறது.

குஜராத்தும் தமிழகமும் கிட்டத்தட்டச் சமமான அளவில் வளமை கொண்டுள்ளன. தமிழகத்தில் செல்வப் பகிர்வு குஜராத்தைக் காட்டிலும் அதிக சமத்துவம் கொண்டதாக உள்ளது. இரு மாநிலங்களிலும் தொழில்துறை செழித்து வளர்ந்தாலும், தமிழ்நாட்டில் அது மிகுதியும் பணியாளர்களைச் சார்ந்ததாக உள்ளது. அதாவது, தமிழகத்தின் தொழில் வளர்ச்சி அதிக வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. தமிழ்நாட்டில் சேவைத் துறையும் வேகமாக உயர்ந்துவருகிறது. 

இரு மாநிலங்களின் வேறுபட்ட பாதைகள் வெவ்வேறு சமூக, அரசியல் அணுகுமுறையை மட்டுமல்ல, மாறுபட்ட கொள்கைகளையும் பிரதிபலிக்கின்றன. சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் வளர்ச்சியைக் காணும் மாற்று வழியைத் தமிழ்நாடு வழங்கும் நிலையில் குஜராத்தை இந்தியாவிற்கான சிறந்த மாடலாக முன்னிறுத்த முடியுமா என்பது விவாதத்திற்குரியது.

கட்டுரையாளர்

கிறிஸ்டோஃப் ஜாஃப்ரெலாட்

ERI-Sciences Po/CNRSஇல் ஆராய்ச்சி இயக்குநராகவும், கிங்ஸ் கல்லூரி லண்டன் அரசியல் மற்றும் சமூகவியல் பேராசிரியராகவும் உள்ளார். Modi’s India: Hindu Nationalism and the Rise of Ethnic Democracy (பிரின்ஸ்டன் யுனிவர்சிட்டி பிரஸ் வெளியீடு, 2021), Gujarat under Modi: Laboratory of Today’s India (ஹர்ஸ்ட் வெளியீடு, 2024) ஆகியவை  இவரது நூல்கள். 

நன்றி: தி வயர் இணைய இதழ்

தமிழில்: தேவா Best Model Tamilnadu or Gujarat

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share