ஹைபோதைராய்டிசம் (Hypothyroidism) என்பது தைராய்டு சுரப்பி தேவையான அளவு ஹார்மோன்களை உற்பத்தி செய்யாத நிலையாகும்.
இதனால் உடல் எடை அதிகரித்தல், சோர்வு, மலச்சிக்கல், குளிரைத் தாங்க முடியாமை, தலைமுடி உதிர்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். மருந்து சிகிச்சையே இதற்கான முக்கிய தீர்வாக இருந்தாலும், சரியான உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த உதவும்.
தைராய்டு ஆரோக்கியத்திற்கு உதவும் உணவுகள்
ஹைப்போதைராய்டிசம் உள்ளவர்கள் சமச்சீர் உணவைப் பின்பற்றுவது அவசியம். குறிப்பாக செலினியம், அயோடின், துத்தநாகம் (Zinc), இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் D போன்ற சத்துகள் நிறைந்த உணவுகள் தைராய்டு செயல்பாட்டை ஆதரிக்கின்றன.
முட்டை, மீன், இறால், கோழி, பால் பொருட்கள், முழுத் தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பிரேசில் நட்ஸ் போன்ற செலினியம் நிறைந்த உணவுகளை அளவோடு சாப்பிடுவதும் பயனளிக்கலாம்.
எந்த உணவுகளை அளவோடு சாப்பிட வேண்டும்?
சோயா உணவுகள், முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி, காலிஃப்ளவர் போன்ற க்ரூசிபெரஸ் (Cruciferous) காய்கறிகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவற்றை சமைத்து, அளவோடு சாப்பிடுவது நல்லது. பச்சையாக அதிக அளவில் தொடர்ந்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
மேலும், அதிக சர்க்கரை, அல்ட்ரா-பிராசஸ்ட் உணவுகள் மற்றும் அதிக கொழுப்பு கொண்ட ஜங்க் ஃபுட்களை குறைப்பது உடல் எடை கட்டுப்பாட்டிற்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவும்.
தைராய்டு மருந்து எடுத்தால் கவனிக்க வேண்டியது
தைராய்டு மருந்துகளை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்வது சிறந்தது. மருந்து எடுத்த உடனே காபி, அதிக நார்ச்சத்து கொண்ட உணவுகள் அல்லது கால்சியம், இரும்புச்சத்து சப்ப்ளிமெண்ட்களை உட்கொள்வது மருந்து உடலில் உறிஞ்சப்படுவதை பாதிக்கலாம்.
பொதுவாக, மருந்து எடுத்த பிறகு 30 முதல் 60 நிமிடங்கள் இடைவெளி விட்டு காலை உணவு அல்லது காபி அருந்துவது பரிந்துரைக்கப்படுகிறது.
அதேபோல், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அயோடின் அல்லது செலினியம் சப்ப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்ளக் கூடாது.
உணவுமுறை மட்டும் போதுமா?
ஹைப்போதைராய்டிசத்தை உணவால் மட்டும் குணப்படுத்த முடியாது. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்வதுடன், சத்தான உணவு, தினசரி உடற்பயிற்சி, போதுமான தூக்கம் மற்றும் சீரான உடல் எடையைப் பராமரிப்பது மிகவும் முக்கியம். முறையான ரத்தப் பரிசோதனைகள் மூலம் தைராய்டு ஹார்மோன் அளவை கண்காணிப்பதும் அவசியம்.
