பார் கவுன்சிலில் பேரறிவாளன் – வழக்குரைஞர் பதிவுக் குழு தலைவர் தந்த விளக்கம் என்ன?

Published On:

| By Pandeeswari Gurusamy

Perarivalan

பேரறிவாளனின் ஆவணங்கள் பார் கவுன்சிலின் வழக்கறிஞர் பதிவுக் குழுவால் முறையாகப் பரிசீலிக்கப்பட்ட பின்னரே அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது என பார் கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் தண்டனை பெற்றனர். சுமார் 31 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு, கடந்த 2022ஆம் ஆண்டு பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார்.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து, பேரறிவாளன் பெங்களூருவில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் 3 ஆண்டுகள் சட்டப் படிப்பை முடித்தார். அதன் பின்னர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார்.

பேரறிவாளன் வழக்கறிஞராகப் பதிவு செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் எம்பியும் வழக்கறிஞருமான ஆர். சுதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு புகார் மனு அனுப்பியதாகவும் தெரிவித்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில், பேரறிவாளன் வழக்கறிஞராகப் பதிவு செய்யப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை என பார் கவுன்சில் உறுப்பினரும், வழக்குரைஞர் பதிவுக் குழு தலைவருமான கே. பாலு விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சட்டப்படி, ஒருவர் குற்றவாளியாக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, அந்தத் தண்டனையை முழுமையாக அனுபவித்து, அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து வழக்கறிஞராகப் பதிவு செய்யலாம். குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர் வழக்கறிஞராகப் பதிவு செய்வது இது முதல் முறையல்ல. பேரறிவாளனின் ஆவணங்கள் பார் கவுன்சிலின் வழக்கறிஞர் பதிவுக் குழுவால் முறையாகப் பரிசீலிக்கப்பட்ட பின்னரே அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் எந்த சட்ட விதிமீறலும் இல்லை.” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share