“அதிமுகவின் சட்டமன்றக் கட்சித் துணைத் தலைவராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை அப்பதவியில் இருந்து நீக்கிவிட்டு துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அக்கட்சி எம்.எல்.ஏ.க்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதுகுறித்த கடிதத்தையும் இந்த முடிவைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் இருக்கை ஒதுக்குதல் தொடர்பாகவும் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா வேலுமணி, சட்டப்பேரவைத் தலைவரான சபாநாயகர் அப்பாவு அலுவலகத்துக்கு கடிதம் கொடுத்திருக்கிறார்.
“அவ்வாறு வேலுமணி கொடுத்த கடிதத்தை நான் இதுவரை பார்க்கவில்லை” என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
நெல்லையில் இன்று (ஜூலை 21) 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான விழிப்புணர்வு விழா நடைபெற்றது. இதில், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் அப்பாவு,
“சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா வேலுமணி கொடுத்த கடிதத்தை நான் இதுவரை பார்க்கவில்லை. சென்னை சென்றதும் பார்ப்பேன். பின்பு, அதுகுறித்து முடிவெடுக்கப்படும்” என்றார்.
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர்,
”நீதிமன்றம் வேறு; தேர்தல் ஆணையம் வேறு. அதற்கும் சட்டமன்றத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. சட்டமன்றத்தில் இருக்கைகள் அளிப்பது தொடர்பாக அதிமுக சார்பில் கடிதம் அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த கடிதம் பரிசீலனையில் உள்ளது. 38 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனநாயகரீதியில் சட்டமன்றம் சிறப்பாகச் செயல்படுகிறது. அந்த வகையில், சட்டமன்றத்தின் மாண்பும் மரபும் குறைவில்லாத அளவுக்கு முடிவெடுக்கப்படும்” என்றார்.
ஜெ.பிரகாஷ்