அசோகரின் சிங்கங்களும், ஆவேசமான சிங்கங்களும்: இறையாண்மை எடுக்கும் வன்முறை வடிவம்!  

Published On:

| By Minnambalam

ராஜன் குறை

புதிதாக கட்டப்பட்டு வரும் இந்திய நாடாளுமன்றக் கட்டடத்தின் உச்சியில் இந்தியாவின் அரச இலச்சினையான அசோக சிங்கங்களை பிரமாண்ட வடிவில் செய்து நிறுவியுள்ளது பாரதீய ஜனதா கட்சி அரசு. பிரதமர் மோடி கடந்த வாரம் சில பார்ப்பன புரோகிதர்களை வைத்து பூஜைகள் செய்து அந்த அசோக சிங்கங்களின் சிலையைத் திறந்துவைத்துள்ளார். இந்த இந்திய தேசத்தின் சின்னம், சாரநாத் என்ற இடத்தில் மாமன்னர் அசோகரால் நிறுவப்பட்ட தூணின் உச்சியில் இடம்பெற்றிருந்த சிங்கங்களாகும். புத்தர் முதன் முதலில் சொற்பொழிவாற்றிய தலம் அது என்று கூறப்படுகிறது. நான்கு திசைகளைப் பார்த்து நிற்கும் நான்கு சிங்கங்களும், அவற்றுக்கு அடியில் பொறிக்கப்பட்ட பெளத்த சின்னங்களான சில விலங்குகளுமே அந்தத் தூணின் உச்சத்தில் இடம் பெற்றிருந்தன. இந்தியா சுதந்திரம் பெற்றபோது நாட்டின் இலச்சினையாக, ஆங்கிலத்தில் ‘எம்ப்ளம்’ என்று கூறப்படும் சின்னமாக அந்த நான்கு சிங்கங்கள் கொண்ட தூணின் மகுடம் தேர்வு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

அந்த சிங்கங்களை பிரதமர் மோடி தலைமையிலான அரசு புதிதாக பிரமாண்டமாக செய்து நிறுவுவது  மகிழ்ச்சிக்குரியதுதானே, என்ன பிரச்சினை என்று தோன்றலாம். பிரச்சினை என்னவென்றால் அந்த சிங்கங்களின் உணர்ச்சி வெளிப்பாடு என்பது கடும் மாற்றமடைந்துள்ளது. அசோகரின் சிங்கங்கள் எழிலாக, சாந்தமாக காணப்படுபவை. கம்பீரமாக இருந்தாலும், ஆவேசமாக இல்லாமல், அமைதி பொருந்திய ஆற்றலாக நிற்பவை. இப்போது பாரதீய ஜனதா அரசு நிறுவியுள்ள சிங்கங்களோ ஆவேசமாக தன் பற்களை வெளியே நீட்டி கர்ஜிப்பவையாக உள்ளன. அதுவும் கட்டடத்தின் உச்சியிலுள்ள அவற்றை மக்கள் கீழேயிருந்துதான் பார்க்க முடியும் என்னும்போது அவற்றின் திறந்த வாய்களும், பற்களுமே பிரதானமாக தெரிகின்றன. ஆவேசமான அச்சுறுத்தும் சிங்கங்களாக, அடுத்த நிமிடமே எதையோ கவ்விப் பிடிக்கும் மூர்க்கத்துடன் விளங்குகின்றன.

எதிர்க்கட்சிகளை சார்ந்த பலரும் ஏன் இந்த மாற்றம் எனக் கண்டித்துள்ளார்கள். ஒரு பெளத்த தலத்தில், தான் பெளத்த மதத்தை தழுவியதுடன், அதை தெற்காசியாவெங்கும் பரப்பிய அசோக சக்ரவர்த்தியால் நிறுவப்பட்ட ஒரு சின்னத்தின் ஆதாரமான குணத்தை மாற்றலாமா? இது இந்திய தேசத்தின் இலச்சினையை மாற்றுவதற்கு ஒப்பானது இல்லையா என்று பலரும் கேட்கிறார்கள். ஆளும் பாரதீய ஜனதா கட்சி வழக்கம்போல பல பதில்களை சொல்கிறது. இல்லையில்லை…. அந்தச் சிங்கங்கள் போலவேதான் இவையும் உள்ளன என்கிறார்கள். ஆனால் என்.டி.டி.வி தொலைக்காட்சி சேனலில் நடந்த விவாதத்தில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் என்பவர்  மிகவும் அழகாக வாதிடுகிறார்.  “நீங்கள் 1860ஆம் ஆண்டு அசோகரின் சிங்கங்களைக் கண்டுபிடித்த போது அவை சாந்தமாக இருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால், இன்று இந்தியா உலகில் வல்லரசாக வளர்ந்து நிற்கும்போது சிங்கங்களும் ஆக்ரோஷமாக கர்ஜிப்பது பொருத்தம்தானே” என்கிறார். இதை வேறு பலரும் கூட கூறுகிறார்கள். சில சிறிய மாற்றங்களை காலத்திற்கு தகுந்தாற்போல செய்துள்ளார்கள், அப்படிச் செய்ய அரசிற்கு முழு அதிகாரம் உள்ளது; தேசிய சின்னங்களை பாதுகாப்பதற்கான சட்டமே அந்த உரிமையை அரசுக்கு அளிக்கிறது. அதனால் அரசு சின்னத்தை அவமதிக்கவில்லை, அதை சீர்கெடுக்கவில்லை. சில மாற்றங்களைச் செய்து மெருகேற்றியுள்ளது என்கிறார்கள்.

ADVERTISEMENT
ஆர்யமா சுந்தரம்

மூன்று முக்கிய வேறுபாடுகளைக் கண்கூடாக பார்க்க முடிகிறது. அசோகரின் சிங்கங்களின் கண்கள் அகலமாக, சாத்வீக பாவம் கொண்டவையாக உள்ளன. இந்துத்துவ வடிவ சிங்கங்களின் கண்களோ சுருங்கி இரை மீது பாயும் பாவனையில் உள்ளன. அசோக சிங்கங்களின் மார்புகள் இயல்பான நிலையில் உள்ளன. இந்துத்துவ வடிவ சிங்கங்களின் மார்புகள் விரிந்து, அகன்று உள்ளன. மூன்றாவது முக்கிய வேறுபாடு, அசோகரின் சிங்கங்களின் வாய்கள் திறந்திருந்தபோதும் அவை  பற்களை முன் தள்ளி எதையும் கவ்விப்பிடிக்கும் பாவத்தில் இல்லை. இந்துத்துவ வடிவ சிங்கங்களின் பற்கள் முன்னே துருத்திக்கொண்டு நிற்கின்றன. ஆங்கிலத்தில் Baring the fangs என்பார்கள். கோரைப்பற்களை வெளியே காட்டுதல். மொத்தத்தில் அமைதியான பாவத்திலிருந்து ஆவேசமான ஆக்ரோஷமான பாவத்துக்கு சிங்கங்கள் மாற்றப்பட்டுள்ளன.

இவையெல்லாம் மேலோட்டமான வேறுபாடுகள் அல்ல. ஒரு சின்னத்தின் அடிப்படை அழகியலை, குணாம்சத்தை சிதைத்து மாற்றுவதாகும். இது சட்டப்படி குற்றமா, இல்லையா என்பது வேறு பிரச்சினை. அரசு தனக்கு உரிமை இருக்கிறது என்றுதான் வாதாடும், உச்ச நீதிமன்றமும் அதை ஏற்கலாம். அரசு தரப்பில் அழகியலெல்லாம் பார்ப்பவர் கண்ணில்தான் இருக்கிறது. அசோகரின் தூணிலிருந்த சிங்கங்களை அதே எண்ணிக்கையில்தானே செய்துள்ளோம். அதோடு போங்கள் என்கிறார்கள். எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் பிரச்சினை செய்கின்றன என்கிறார்கள்.

ADVERTISEMENT

இவ்விதமாக பிம்பங்களை மாற்றி வடிவமைப்பது இவர்களுக்கு புதிதல்ல. ஏற்கனவே மக்கள் சாந்தமூர்த்தியாக வழிபட்டு வந்த ராமனை ஆவேசமான போர்க்கோலத்தில் வடிவமைத்து பழக்கினார்கள். சொல்லின் செல்வனும், பக்திமானுமாகிய அனுமனை ஆவேசமான கோலத்தில் வரைந்தார்கள். அதைப்போலவேதான் அசோகரின் சிங்கங்களையும் இப்படிச் சிதைத்து வடிவமைக்கிறார்கள் என்ற ஒப்பீடு சமூக ஊடகங்களில் பரவலாக உலா வருகின்றது. ஏன் இப்படிச் செய்ய வேண்டும்? இதன் ஆழ்ந்த பொருள் என்ன? அதை தெரிந்துகொள்ள நாம் இறையாண்மை கோட்பாட்டை புரிந்துகொள்ள வேண்டும்.

அரசாட்சி இறையாண்மையும், சுயாட்சி இறையாண்மையும்  

அரசியல் தத்துவத்தில் இறையாண்மை (Sovereignty) என்ற வார்த்தை புதிரானது. அது பல்வேறு சின்னங்களில், குறியீடுகளில் வெளிப்படுவது. மன்னர் காலத்தில் அவர்கள் சூடும் மகுடம், அவர்கள் கையில் ஏந்தும் செங்கோல், கோட்டையில் பறக்கும் கொடி என்று பல சின்னங்கள். மன்னர் காலத்தில் இறையாண்மை என்பது மன்னராக, அரசியாக இருக்கும் தனி நபரிடம் முழுவதுமாக குடிகொண்டிருப்பது. அவர் எத்தனையோ பேரின் ஆலோசனைகளை கேட்கலாம்; பலருக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கலாம். ஆனால் அவரிடமே இறையாண்மையின், அதாவது அதிகாரத்தின் ஊற்று அமைந்திருக்கும். அவருக்கு அந்த அதிகாரம் இறைவனால் வழங்கப்பட்டதாக கருதப்படும். பெரும்பாலும் பூசாரி வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மன்னனுக்கு கடவுள் சார்பாக முடி சூட்டுவார்கள். கம்பராமாயணத்தில் இறுதியில் ராமனுக்கு வசிட்டர் என்ற முனிவரே மணிமுடியை அணிவித்தார் என்று வருவதை நீங்கள் படித்திருக்கலாம். இப்படியாக இறைவன், பூசாரி வர்க்கம், அரசன் என்று இறையாண்மை மேலிருந்து வந்து மக்களை அரசாள்வது அரசாட்சி இறையாண்மையாகும்.  இறைவன் அருள்பெற்ற பூசாரி வர்க்கமும், அவர்கள் ஆசிபெற்ற அரசனும் ஆள்பவர்கள், மக்களெல்லாம் ஆளப்படுபவர்கள்.

இதற்கு நேர்மாறாக கீழிருந்து இறையாண்மையை கட்டியெழுப்புவதுதான் சுயாட்சி. அதுவே மக்களாட்சி. ஒவ்வொரு பகுத்தறிவுள்ள மனிதரும் சுதந்திரமானவர். ஆணும், பெண்ணும், திருநரும் அவரவர் வாழ்வை இயற்கையின் மடியில் வடிவமைத்துக் கொள்ளும் சுதந்திரம் பெற்றவர்கள். அதனால் இவர்கள் அனைவருமே இறையாண்மை பெற்றவர்கள். இவர்கள் தங்களுக்குள் மேற்கொள்ளும் உறவுகளை தகவமைத்துக்கொள்ள தங்களிடம் உள்ள இறையாண்மையின் சில பகுதிகளை தங்கள் பிரதிநிதிகளிடம் கொடுத்து அவர்களை நிர்வகிக்க சொல்கிறார்கள். உள்ளூர் பிரதிநிதி, மாநில அரசு, ஒன்றிய அரசு என்று பல்வேறு நிலைகளில் இந்த குடி நபர்களின் இறையாண்மை பகிரப்படுகிறது. இது இறைவனிடமிருந்து வந்த இறையாண்மையல்ல. மனித கூட்டியக்கம் கட்டியெழுப்பும் இறையாண்மை.

மேலிருந்து வந்த இறையாண்மை போர்களையும், அழிவுகளையும் உற்பத்தி செய்து கொண்டே இருந்தது. கீழிருந்து உருவாக முனைந்த இறையாண்மை உலகை சமாதான பூங்காவாக்க முனைந்தது.

போரின் அழிவுகளா? சமாதான சகவாழ்வா?

அரசர்களிடம் இறையாண்மை இருந்தவரை அவர்கள் ஓயாமல் போரிட்டார்கள். ஒவ்வொரு அரசனும் பிற அரசர்களை அடக்கி பேரரசனாக விளைந்தான். அரசன் போர் இயந்திரத்தின் ஒரு பகுதியாக இருந்தான். ஒரு பரந்து விரிந்த பேரரசு உருவாகி நிலைபெற்றால் பின்னர் அந்த நிலப்பரப்பில் போர்கள் குறையும் என்பதே கனவாக இருந்தது. ஆனால், அப்படி ஒரு பேரரசை உருவாக்கவும், நிலைபெறச்செய்யவும் ஓயாமல் போரிட வேண்டியிருந்தது. உலகம் முழுவதும் கடவுள்களின் பெயரால், மதங்களின் பெயரால், மன்னர்களின் பெயரால், பேராசையால் போர்கள் நடந்தவண்ணம் இருந்தன. பூசாரி வர்க்கங்கள் யாகங்கள், பூஜைகள், பிரமாண்டமான கோயில்கள் என்று மக்களின் உழைப்பை சுரண்டிக் கொழுத்தார்கள்.

இதிலிருந்தெல்லாம் அக விழிப்பின் மூலம் மக்களை காக்கவே மகான்கள் முயன்றார்கள். தன் அரச வாழ்வை துறந்து அலைந்து திரிந்து ஞானத்தை தேடிய கெளதமன், புத்த கயாவில் போதி மரத்தடியில் ஞானம் பெற்று புத்தனாகி முதன் முதலில் சொற்பொழிவாற்றிய இடம்தான் சாரநாத். அதன் நினைவாக அங்கே அசோகர் எழுப்பிய தூணின் உச்சத்தில் அமைத்ததுதான் நான்கு சிங்கங்களின் குறியீடு. அது மிருக ஆற்றலைக் கட்டுப்படுத்தி சாந்த ரூபமாக நிற்கும் ஆன்மிக நிலையைக் குறிப்பது. சிங்கங்களே தன் பசிக்காக மட்டுமே கொல்லுமே தவிர, கதைகளில் கூறப்படுவது போல நானே காட்டின் ராஜா என்று பிற எளிய விலங்குகளை தேவையற்று கொல்லாது. அதன் இயல்பான பசியடங்கிய நிலையில் அந்த சாந்தமாகவே படுத்திருக்கும். மனிதனின் கற்பனைதான் அதை பயங்கரமான மிருகமாக நினைக்கிறது. அதற்கு மாறாக சாரநாத் தூண் சாந்தமான சிங்கங்களை தன் உச்சியில் ஏந்தியது. ஏன் இந்த சிங்கங்களின் சிற்பங்களை புத்தர் முதல் சொற்பொழிவாற்றிய இடத்தில் நிறுவ வேண்டும்?

புத்தர் எதை போதித்தார்? ஒவ்வொரு மனிதனும் அகவிழிப்பினை அடைந்து, ஆசைகளினால், பேராசைகளினால் அலைக்கழிக்கப்படாமல் ஒன்றுபட்டு சங்கமாகி, தர்மத்தின் நிழலில் வன்முறையின்றி வாழ்வதையே போதித்தார். அந்த சமாதான சகவாழ்வின் சின்னமே சாத்வீகமான சிங்கங்கள். அந்த தத்துவத்தின் நவீன கால தொடர்ச்சியே மக்களாட்சி. புத்தருக்குப் பின் வெகுகாலம் சென்று மீண்டும் புத்தொளி பெற்றதொரு அறிவுக்காலம் தோன்றியபோது மானுடர் ஒவ்வொரு  நபருக்கும் பகுத்தறிவு உண்டு, சுதந்திரமாக வாழ உரிமை உண்டு, அவர்கள் கூட்டுறவை நெறிப்படுத்தவே அரசு என்பது அமைய வேண்டும் என மக்களாட்சி மார்க்கம் கண்டார்கள். அதனால்தான் பண்டிதர் நேரு புத்தரையும், அசோகரையும் கொண்டாடினார். அப்படிப்பட்ட மக்களாட்சி நாடுகளில் அதிகாரம் என்பது பல நிலைகளிலும் பரவி நிற்கும் என்பதால் கூட்டாட்சி வடிவம் என்பது மட்டுமே சாத்தியம். பல கிராமங்களின் ஒன்றியம், பல மாவட்டங்களின் ஒன்றியம், பல மாநிலங்களின் ஒன்றியம், பல நாடுகளின் ஒன்றியம் என்று உலகளாவிய கூட்டாட்சியை நோக்கி பயணப்பட வேண்டிய தத்துவமே மக்களாட்சி என்பதாகும்.

சுருங்கச்சொன்னால் மக்களாட்சி = குடிநபர் சுயாட்சி+ பல்வேறு நிர்வாக அலகுகள் +  நிர்வாக அலகுகளின் ஒன்றியமான கூட்டாட்சிகள்.

இந்தத் தத்துவத்தில் போருக்கோ, வன்முறைக்கோ வேலையில்லை. சமாதான சகவாழ்வே மானுட லட்சியமாக விளங்க வேண்டும். இது மக்களாட்சியையும், புத்தனின் அறிதலையும் பிணைக்கும் புள்ளியாகும். அதனால்தான் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் புத்த மதத்தையும் தழுவினார் எனக்காணலாம்.

காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்

திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவிய அண்ணா மறைந்தபோது அவருக்காக எழுதப்பட்ட பிரபலமான பாடல்களில் ஒன்று

”காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்

அவன் கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான்

அண்ணாவென்று எல்லோரும் அழைக்க வந்தான்

ஆயிரம் தலைமுறை தழைக்க வந்தான்”

என்று தொடங்கும் வரிகளைக் கொண்டதாகும். அமைதி வழியிலேயே அரசியல் புரிதலை வளர்த்தெடுக்க முனைந்ததை குறிப்பதாக இது இருந்தாலும் ஆழ்ந்த பொருளில் அண்ணாவின் இறையாண்மைக் கோட்பாட்டையும் குறிக்கிறது எனலாம். ஏனெனில் அவர் நாடியதெல்லாம் வல்லரசு தேசியங்களை உருவாக்குவதல்ல. சுயாட்சியும், கூட்டாட்சியும் பூவலகினை வடிவமைக்க வேண்டுமென்றே அவர் கருதினார். அமெரிக்க அரசியலாளர் வெண்டல் வில்க்கி முன்மொழிந்த உலகக் குடியரசு என்ற கருத்தை அவர் பல முறை குறிப்பிட்டு சிலாகித்தார்.

அதனால்தான் இந்துத்துவர்கள் ஒற்றை இந்திய தேசிய அரசு, உலக வல்லரசு என்று இறையாண்மையை அந்தக்கால பேரரசை போல ஒற்றைப்புள்ளியில் குவிக்க துடிக்கும்போது, தி.மு.க மாநில சுயாட்சி, ஒன்றிய அளவில் கூட்டாட்சி என்று வலியுறுத்தி மக்களால், மக்களுக்காக, மக்களே ஆண்டுகொள்வதே மக்களாட்சி என  நினைவுபடுத்தி நிற்கிறது. அதையே புத்தனின் சின்னமான அசோகரின் சிங்கங்களின் சாத்வீக நிலை சுட்டுகிறது.

அதிகாரத்தை ஒற்றைப்புள்ளியில் குவித்து, வெளி நாட்டு எதிரிகளை காட்டி பயமுறுத்தி, மத அடையாளவாத வெறியால் மக்களை பிளந்து, அனைவரையும் சுரண்டி பெருமுதலாளிகள் வளம்பெற வழி செய்து சனாதன மீட்பினை உருவாக்க நினைப்பவர்கள் அந்த சாத்வீக சிங்கங்களை ஆவேசமான ஆட்கொல்லி சிங்கங்களாக வடிவமைப்பதை நாம் கண்டிக்க வேண்டும்.

உண்மையான முன்னேற்றத்தின் பாதை என்பது வெறும் ஐந்து டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியோ, ஆயுதக் குவிப்போ அல்ல. எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என தமிழக முதல்வர் கூறுவதுபோல அனைத்து மக்களும் குடி நபர் உரிமைகளுடன், யாருக்கும் அஞ்சிடாமல் விடுதலை பெற்று, அகவிழிப்புடன் பகுத்தறிவுடன் வாழ்வதே சாரநாத்தின் சாத்வீக சிங்கங்கள் சுட்டி நிற்கும் புத்தரின், அசோகனின், அண்ணலின், அண்ணாவின் பாதை.

கட்டுரையாளர் குறிப்பு

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share