மறைந்த ஆஷா போஸ்லேவின் கடைசி பாடல்: வெளியீட்டு தேதி அறிவிப்பு!

Published On:

| By Kavi

மறைந்த பின்னணி பாடகி ஆஷா போஸ்லே பாடிய கடைசி பாடல் அவரது பிறந்த நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் உட்பட இந்திய சினிமாவில் பல்வேறு மொழிகளில் ஏறத்தாழ 12 ஆயிரம் பாடல்களை பாடி தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் ஆஷா போஸ்லே. 

ADVERTISEMENT

தனது 92 வயதில் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு மும்பையில் உயிரிழந்தார். 

இவர் தமிழ் சினிமாவில் இளையராஜா, ஏ ஆர் ரகுமான், வித்யாசாகர் உள்ளிட்ட இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார். 

ADVERTISEMENT

குறிப்பாக ஹேராம் படத்தில் நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி, மீரா படத்தில் ஓ பட்டர்ஃப்ளை, எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் செண்பகமே செண்பகமே, அலைபாயுதே படத்தில் செப்டம்பர் மாதம், சந்திரமுகி படத்தில் கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம், நேருக்கு நேர் படத்தில் எங்கெங்கே எங்கெங்கே, சேதுபதி ஐபிஎஸ் படத்தில் சாத்து நட சாத்து உள்ளிட்ட பல்வேறு பிரபல பாடல்களை பாடியுள்ளார். 

இந்த நிலையில் அவர் கடைசியாக பாடிய பாடல் வரும் செப்டம்பர் 8ஆம் தேதி, ஆஷா போஸ்லேவின் பிறந்தநாள் அன்று வெளியாக உள்ளது. 

ADVERTISEMENT

அவர் கடைசியாக ஓம் கா ஹரி என்ற திரைப்படத்தில் ஏ மேரி ஜிந்தகி து சுபி ஹை கஹானி பாடலை பாடியிருந்தார். அவரது 90 வது வயதில் 2023 ஆம் ஆண்டு இந்த பாடல் பதிவு செய்யப்பட்டது. 

இயக்குனர் ஹரிஷ் வியாஸ் இயக்கிய தந்தை மகன் உறவைப் பற்றிய இந்த படத்தில் ஆஷா போஸ்லேவின் பாடல் இடம் பெற்றுள்ளது. 

இது தொடர்பாக ஹரிஷ் வியாஸ், “ஆஷாஜியின் காலத்தால் அழியாத குரலில், பதிவு செய்யப்பட்ட பாடல் அவரை சிறப்பிக்கும் வகையில் அவரது பிறந்தநாள் அன்று வெளியிடப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share