பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 14) சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ள ரவுடி திருவேங்கடம் போலீசாரால் இன்று காலை என்கவுன்டர் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை 5-ஆம் தேதி தலைநகர் சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டின் முன்பு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தக்கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷ் தம்பி புன்னை பாலு உள்ளிட்ட 11 பேர் காவல் நிலையத்தில் சரண்டர் ஆனார்கள். இவர்களை ஐந்து நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க போலீசுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் ஜூலை 11-ஆம் தேதி அனுமதி வழங்கியது.
இதையடுத்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரையும் போலீசார் தனித்தனியாக தங்களது பாணியில் விசாரித்து வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடத்தை இன்று அதிகாலையில் அவர் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த மாதவரம் வெஜ்டேரியன் பகுதிக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
அந்த பகுதியில் பதுக்கி வைத்திருந்த கத்தி, துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றியதாகவும், அப்போது அங்கிருந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டு தப்பி செல்ல முயன்ற திருவேங்கடத்தை சுட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கிறார்கள்
இதில் பலத்த காயமடைந்த திருவேங்கடத்தை அங்கிருந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது திருவேங்கடம் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
என்கவுன்டர் நடந்த இடத்தை சென்னை வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் தலைமையிலான போலீசார் இன்று காலை ஆய்வு செய்தனர்.
என்கவுன்டரில் உயிரிழந்த திருவேங்கடம் யார்? ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அவருக்கு என்ன தொடர்பு? என்று நாம் விசாரணையில் இறங்கினோம்.
” ரவுடி திருவேங்கடம் செட்டியார் சமூகத்தை சேர்ந்தவர். குன்றத்தூர் நந்தம்பாக்கம் பகுதியில் வசித்து வந்தார். ஆனால், கடந்த ஆறு மாதமாகவே அவர் குன்றத்தூர் வீட்டிற்கு வரவே இல்லை.
இவர் மீது 4 கொலை வழக்கு உட்பட மொத்தம் 6 வழக்குகள் உள்ளது. புழல் சிறையில் இருக்கும் நாகேந்திரன் மற்றும் கொல்லப்பட்ட ஆற்காடு சுரேஷின் கும்பலை சேர்ந்தவர்.
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்காக புழல் சிறையில் இருக்கும் சென்னையின் சீனியர் ரவுடியான நாகேந்திரனின் உதவியை புன்னை பாலு அணுகினார் என்று மின்னம்பலத்தில் நாம் ஏற்கனவே நாகேந்திரனை பற்றி குறிப்பிட்டுள்ளோம்.
இந்தநிலையில், திருவேங்கடம் காவல்துறையினரிடம் கடைசியாக கொடுத்த வாக்குமூலத்தில், ’பகுஜன் சமாஜ் கட்சியின் வட சென்னை மாவட்ட செயலாளரும் ஆம்ஸ்ட்ராங்கின் வலது கரமும், ரவுடி பாம் சரவணனின் தம்பியான தென்னரசுவை கடந்த 2015-ஆம் ஆண்டு கொலை செய்த வழக்கில் நான் ( திருவேங்கடம்), ஆற்காடு சுரேஷ், அவரது தம்பி புன்னை பாலு, புழல் சிறையில் இருக்கும் நாகேந்திரன் உள்ளிட்டோர் குற்றவாளியாக இருக்கிறோம்.
இந்தநிலையில், தென்னரசு கொலை வழக்கில் தொடர்புடையவர்களை ஆம்ஸ்ட்ராங் ஸ்கெட்ச் போட்டு தேடி வந்தார். 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி ஆற்காடு சுரேஷ் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்களால் கொல்லப்பட்டார். அதை தொடர்ந்து அந்த கொலையின் நேரடி சாட்சியான மாதவனும் 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொலை செய்யப்பட்டார்.
தொடர்ந்து என்னையும் ( திருவேங்கடம்), புன்னை பாலு, நாகேந்திரன் ஆகியோரையும் கொலை செய்ய ஆம்ஸ்ட்ராங் திட்டமிட்ட தகவல் எங்களுக்கு தெரியவந்தது. அதற்கு முன்பு ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய முடிவு செய்து நாங்கள் ஒன்றிணைந்தோம்.
ஆம்ஸ்ட்ராங் கொலையை ஆர்கனைஸ் செய்தவர் ஆற்காடு சுரேஷின் தம்பி புன்னை பாலு தான். அதில் ஒரு பகுதி வேலையை மட்டும் என்னிடம் ஒப்படைத்தார். அந்த வேலையை மட்டும் நான் செய்தேன்.
இந்த கொலையின் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள்… ஸ்பாட்டில் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டியவர்கள் யார் என்று எனக்கு எதுவும் தெரியாது. புன்னை பாலுவை மட்டும் தான் எனக்கு தெரியும்’ என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவேங்கடம் முக்கிய பங்கு வகித்துள்ளார்” என்கிறார்கள்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: சீமானுக்கு 41 சீட்… பன்னீர் ரிட்டன்? அதிமுகவில் பரபர!