வைஃபை ஆன் செய்ததும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானின் பிரஸ்மீட் காட்சிகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றை பார்த்துக் கொண்டே வாட்ஸப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது. “அதிமுக வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை வலிமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்றால்… அந்தக் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம் உள்ளிட்டோரை கட்சியில் மீண்டும் இணைத்துக் கொள்ளலாமா என்ற விவாதம் கட்சியின் நிர்வாகிகளுக்கு உள்ளேயே நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுகவின் ஓட்டுகள் அதிக அளவு பாமகவுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்… பாமகவை விட அதிகமாக அதிமுக ஓட்டுக்களை திமுக பெற்றிருப்பது களத்தில் இருந்து தெரியவருகிறது.
இதனால் திமுகவுக்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டியதும், அதற்கு முன் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டியதும் அவசியம் என்ற குரல்கள் அந்த கட்சிக்குள்ளேயே எழுந்திருக்கின்றன.
ஓ.பன்னீர்செல்வம் அதிமுக ஒருங்கிணைவதற்காக சர்வபரி தியாகத்துக்கும் தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
அதாவது மீண்டும் தன்னை அதிமுகவுக்குள் சேர்த்துக் கொண்டால் போதும் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த எந்த பதவியும் வேண்டாம் என்பது தான் அவருடைய தூதாக இருக்கிறது.
இந்தநிலையில், ஜூலை முதல் வாரத்தில் சேலம் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடந்த ஆலோசனையில்… 2026 சட்டமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்களில் கட்சியை வலுப்படுத்தவும், கட்சி உடைந்திருக்கிறது என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் பன்னீர்செல்வத்தை ஏன் நாம் மீண்டும் இணைத்துக் கொள்ளக் கூடாது? அவருக்கு ஒரு கௌரவமான இடத்தை நாம் ஏன் தரக்கூடாது? என்ற ஆலோசனைகள் எடப்பாடியிடமே முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
அதுவும் பன்னீர்செல்வத்தோடு கடுமையாக வார்த்தை போர் நடத்திய நத்தம் விஸ்வநாதன் போன்றவர்களே இது போன்ற கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்கள் என்று சேலம் வட்டாரத்தில் கூறுகிறார்கள்.
இது தொடர்பாக நடந்த விவாதங்களில் ஒரு கட்டத்தில், ‘வருகிற சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியோடு கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்ற அளவிற்கு நாம் பேசி வருகிறோம். நாம் தமிழர் கட்சியும் ஆரம்ப கட்டமாக 41 இடங்களில் தாங்கள் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று முதற்கட்ட விருப்பத்தை தெரிவித்திருக்கிறார்கள்.
நமது அம்மாவை (ஜெயலலிதாவை) ஒரு காலத்தில் மிகக் கடுமையாக விமர்சித்த சீமானுடனே நாம் கைகோர்க்க தயாராகும்போது… நம்முடைய பங்காளி தானே பன்னீர்செல்வம்? அவரை கட்சிக்குள் இணைத்துக் கொள்வதில் என்ன தவறு?’ என்ற கேள்வியும் முன் வைக்கப்பட்டிருக்கிறது.
மேலும், பன்னீர்செல்வம் வெளியே இருந்தால் அவரை பாஜக தொடர்ந்து பகடைக் காயாக பயன்படுத்த பார்க்கும். பன்னீர்செல்வத்தை கட்சிக்குள் இணைத்துக் கொண்டால் அதற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடலாம் என்றும் அதிமுகவின் மேல் மட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து மேலும் விசாரித்தபோது, ‘2026 சட்டமன்றத் தேர்தல் அதிமுகவுக்கு வாழ்வா சாவா போன்றது. திமுக எதிர்ப்பை வலிமையாக ஒருங்கிணைத்து அதற்கு தலைமை தாங்க வேண்டிய பொறுப்பு அதிமுகவுக்கு இருக்கிறது. அதை செய்ய தவறினால் பாஜக அதிமுகவை மேலும் மேலும் சின்னா பின்னமாக்கி விடும். எனவே டிடிவி தினகரன் சசிகலா ஆகியோரை பற்றிய பார்வை அப்படியே இருந்தாலும்… பன்னீர்செல்வம் இப்போது கட்சிக்கு தேவை’ என்ற குரல்கள் கூடியிருக்கின்றன.
அதேநேரம், ‘இப்போது வரை பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திலும் நீதிமன்றத்திலும் தேர்தல் களத்திலும் அதிகாரப்பூர்வ அதிமுகவை எதிர்த்து வெளிப்படையாக வேலை செய்து கொண்டிருக்கிறார். சசிகலாவோ டிடிவி தினகரனோ கூட ஒதுங்கி சென்று விட்டார்கள். ஒருங்கிணைய வேண்டும் என்று குரல் மட்டும் தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், பன்னீர்செல்வம் தலைமை கழக விவகாரத்தில் இருந்து அதிமுகவின் இரட்டை இலை வேட்பாளரை எதிர்த்து களம் கண்டது வரை தொடர்ந்து எதிராகவே இருந்திருக்கிறார்.
அவற்றையெல்லாம் அவர் முழுமையாக கைவிட்டு விட்டதாக அறிவித்தால் அவரை கட்சியில் இணைப்பது பற்றி பரிசீலிக்கலாம்’ என்று அதிமுகவுக்குள் இன்னொரு தரப்பும் வாதாடுகிறது” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
IND vs ZIM: அபார வெற்றியுடன் தொடரை கைப்பற்றிய இந்தியா
ரெக்கார்டு பிரேக்கிங்: ரூ.1,000 கோடி வசூல்… கல்கி படைத்த சாதனைகள் லிஸ்ட்!