அமாவாசை இரவு..  ஒன்றிணைந்த எதிரிகள்… சிறையில் போட்ட ஸ்கெட்ச்: ஆம்ஸ்ட்ராங் கொலையில் அவிழும் முடிச்சுகள்! 

Published On:

| By Aara

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்  ஜூலை 5ஆம் தேதி மாலை  வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில்…  இது தொடர்பான  போலீஸ் விசாரணை  தொடர்ந்து கொண்டிருக்கிறது  அரசியல் ரீதியாக இந்திய அளவில்  இந்த  கொலைக்கு  கண்டனங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன.

திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ்., விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்களில் இருந்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வரை இந்தக் கொலைக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி ஜூலை 7  ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னை வருகிறார். இதனால் சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

 

ஜூலை  6ஆம் தேதி  பகல்  இந்த கொலை சம்பவம் தொடர்பாக  செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், “ஆம்ஸ்ட்ராங்கை உளவுத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டு வந்தனர். அவருக்கு எந்த த்ரட்டும் இல்லை. அவரிடம் உரிமம் பெற்ற துப்பாக்கி இருக்கிறது. 31-12-2027 வரை துப்பாக்கி உரிமத்தை  ரினுவல் செய்திருக்கிறார். அவர் மீது  7 வழக்குகள் இருந்தன. அனைத்தில் இருந்தும் விடுதலையாகிவிட்டார்.

அவர் அரசியல் நோக்கத்துக்காக கொலை செய்யப்படவில்லை. ஆனால், அவர் அரசியலுக்கு வந்த பிறகு வேறு கும்பலுடன் அவருக்குத் தகராறு இருந்தது. அது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்” என்று குறிப்பிட்டார்.

கமிஷனர் இப்படி சொன்னாலும் திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவரான திருமாவளவன், “இந்தக் கொலை தொடர்பாக இப்போது சரணடைந்திருப்பவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை.  உண்மையான குற்றவாளிகள் யாரோ அவர்களை கைது செய்ய வேண்டும்.  ஆம்ஸ்ட்ராங்குக்கு உரிய பாதுகாப்பை போலீஸ் வழங்கியிருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தலித் இளைஞர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுவது குறிப்பாக தென் தமிழகத்தில்  தொடர்ந்து நடக்கிறது. இன்று அரசியல் கட்சியின் தலைவரே கொல்லப்பட்டிருக்கிறார். உண்மையான குற்றவாளிகளை போலீஸார் கைது செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையும் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக அடுத்த கட்ட விசாரணை எப்படிச் செல்கிறது? காவல்துறை வட்டாரங்களிலும், வட மாவட்ட அரசியல் வட்டாரங்களிலும் இதுகுறித்து விசாரித்தோம்.

“ஜூலை  5 ஆம் தேதி மாலை 7.15 மணியளவில் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட நிலையில்  இரவுக்குள் எட்டு பேரை கைது செய்துவிட்டதாக கமிஷனர் சொல்லியிருக்கிறார்.  ஆனால் முன்னதாக அவர்கள் சரணடைந்ததாக தகவல்கள் வந்தன. எப்படியோ அந்த எட்டு பேரில் 5 பேர் இந்த ஆபரேஷனில் சம்பந்தம் இல்லாதவர்கள்.

அப்படியெனில் ஆபரேஷனை நடத்தியது யார்?

ஆம்ஸ்ட்ராங்கிடம் தினந்தோறும் பலர் பல்வேறு பிரச்சினைகளையும், புகார்களையும் கொண்டு செல்வார்கள். தன்னிடம் இருக்கும் வழக்கறிஞர் படை மூலம் அவர்களுக்கு சட்ட ரீதியாகவும் சரி, சட்டத்துக்கு வெளியே இருந்தும் அவர் உதவுவார்.

அப்படித்தான் சில வருடங்களுக்கு முன்பு ஆம்ஸ்ட்ராங்கிடம் ஆருத்ரா கோல்டு கம்பெனியில் முதலீடு செய்து ஏமாந்து போனவர்கள் சென்றிருக்கிறார்கள்.  ‘ண்ணா… லட்ச லட்சமா ஏமாந்துட்டோம்ணா… கேட்டா எங்களையே மிரட்றாங்கண்ணா… கம்பெனியை சேர்ந்தவங்க கிட்டதான் நாங்க கேட்டோம். ஆனா ஆற்காடு சுரேஷ்ன்ற ரவுடி க்ரூப் எங்களை மிரட்டுறாங்கண்ணா. பணமும் போச்சு உயிரும் போகணுமா? எங்களை காப்பாத்துங்கண்ணா..’ என்று ஆம்ஸ்ட்ராங்கிடம் அழுதிருக்கிறார்கள்.

ஆற்காடு சுரேஷுக்கும் ஆம்ஸ்ட்ராங்குக்கும் இது தவிர வேறு சில கணக்குகளும் இருந்தன.  திருவள்ளூர் மாவட்டத்தில் சில பஞ்சாயத்து விவகாரங்களில் பகுஜன் சமாஜ் புள்ளிகளுக்கும் ஆற்காடு சுரேஷுக்கும் இடையில் மோதல்கள் நடந்தன.

யார் மூலமாக சொன்னால் யார் ஆஃப் ஆவார்கள் என்பதும் ஆம்ஸ்ட்ராங்குக்கு தெரியும். அந்த வகையில் அரக்கோணம் ஜெயபால் என்பவரைத் தொடர்புகொண்டார் ஆம்ஸ்ட்ராங். ஏனென்றால் ஆற்காடு சுரேஷும், அரக்கோணம் ஜெயபாலும் ஒரு காலத்தில் நெருக்கமாக இருந்து பின்  எதிரும்புதிரும் ஆனவர்கள்.

அரக்கோணம், வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை என வட மாவட்ட அதிரடி பார்ட்டிகள் அனைவருக்கும் அரக்கோணம் ஜெயபால் மீது ஒரு பயம் கலந்த மரியாதை உண்டு.   இப்போது அவருக்கு வயது 63.  அரக்கோணம் ஜெயபாலைத் தொடர்புகொண்ட ஆம்ஸ்ட்ராங். ‘அண்ணே… அந்த ஆற்காடு சுரேஷை கொஞ்சம் அடங்கியிருக்க சொல்லுங்க.  நம்ம கட்சி நிர்வாகிகள் விசயத்துல தலையிட்டது கூட பரவாயில்லை.   சாதாரண ஜனங்களை ஏமாத்துறதுல ஏன் இவ்வளவு ஆர்வம்?  என்னனு விசாரிங்க’ என்று சொல்லியிருக்கிறார்.

இதையடுத்து ஆருத்ரா நிறுவனத்திடம் அரக்கோணம் ஜெயபால் பேசி., ஏமாற்றப்பட்டவர்களுக்கு நியாயம் கேட்டிருக்கிறார்.  அப்போது ஆட்டோமேட்டிக்காக ஆற்காடு சுரேஷ் ஆருத்ராவுக்காக வந்திருக்கிறார்.

‘ஏ… உனக்கு வயசாயிடுச்சு…ஓரமா போயிடு..இதுலல்லாம் தலையிடாதே…’ என்று அரக்கோணம் ஜெயபாலை எச்சரித்திருக்கிறார் ஆற்காடு சுரேஷ். இந்த விவகாரம் தொடர்பாக  அரக்கோணம் வட்டாரத்திலேயே  ஆற்காடு சுரேஷை ஒரு பஞ்சாயத்துக்கு வரச் சொல்கிறார் அரக்கோணம் ஜெயபால்.

அந்த சந்திப்பில் மீண்டும் ஜெயபாலுக்கு எச்சரிக்கை விடுத்தார் ஆற்காடு சுரேஷ்.  அப்போது ஆம்ஸ்ட்ராங்  சொன்ன விஷயத்தையும் ஜெயபால் சொல்ல… கடும் கோபமான ஆற்காடு சுரேஷ், ‘ஏ கிழவா… இந்த வயசுல என்னை கூப்பிட்டு பஞ்சாயத்து பேசுறியா…  அதுவும் அவனுக்காக என்கிட்ட பேசுறியா… அவனையே அடிச்சுடுவேன்னு சொல்லு’ என எச்சரித்துவிட்டுச் செல்கிறார்.

இந்தக் காட்சிகளை அப்படியே  ஆம்ஸ்ட்ராங்கிடம் ஜெயபாலே சொல்கிறார். ‘கொஞ்சம் கவனமா இருப்பா..’ என்றும் அலர்ட் செய்திருக்கிறார்.

இதன் பின் இரு தரப்புக்கும் நீறுபூத்த நெருப்பாக பகை  எரிவதும் அடங்குவதுமாக இருந்தது. ஆனால் அணைந்துவிடவில்லை.

இந்த பின்னணியில்தான் ஆற்காடு சுரேஷ் கடந்த 2023  ஆகஸ்டு 18 ஆம் தேதி பட்டினப்பாக்கம் கடற்கரையில் வைத்து கொல்லப்பட்டார்.  அப்போது ஆற்காடு சுரேஷோடு வெட்டுப்பட்டு உயிர் பிழைத்த மாதவன் இந்த வழக்கின் ஐ விட்னஸாக இருந்தார். இந்த நிலையில் 2024  ஜனவரி மாதம் மாதவனும் கொல்லப்பட்டார்.

ஆற்காடு சுரேஷ், மாதவன் ஆகிய இரு கொலைகளுக்குப் பின்னாலும் ஆம்ஸ்ட்ராங் இருப்பதாக சுரேஷின் தரப்பு ஸ்ட்ராங்காக சந்தேகப்பட்டது.

அப்போதுதான் இனி ஆம்ஸ்ட்ராங்கை விடக்கூடாது என்று ஆற்காடு சுரேஷின் தம்பி புண்ணை பாலு சபதம் எடுக்கிறார்.  கடந்த ஜனவரி முதல் ஆம்ஸ்ட்ராங்கை எப்படி தீர்த்துக் கட்டுவது என்பது தொடர்பாக பல்வேறு பெருந்தலைகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார்  புண்ணை பாலு,

ஆம்ஸ்ட்ராங் சமுதாய, அரசியல், சட்ட ரீதியான செல்வாக்கு பெற்றவர். அதனால் அவரை தனி டீமாக  எதிர்த்து சம்பவம் செய்ய முடியாது. ஆம்ஸ்ட்ராங்குக்கு எதிரானவர்கள் யார் யார் என்று தேடினார். அப்படித்தான் புழல் சிறையில் இருக்கிற சென்னையின் சீனியர் ரவுடி ஒருவரைப் பற்றி அறிந்தார் புண்ணை பாலு. அவரிடம் யார் மூலமாக பேச வேண்டும் என்பதையும் அறிந்து மோகன் என்பவர் மூலம் சீனியர் தாதாவுக்கு தகவல்களை தெரியப்படுத்தினார்.

ஏற்கனவே கான்ட்ராக்ட்டுகள் தொடர்பாக ஆம்ஸ்ட்ராங் தரப்புக்கும் அந்த சீனியர் தாதாவுக்கும் மோட்டிவ் இருந்தது.  ஆற்காடு சுரேஷின் தம்பி புண்ணை பாலு அதில் தூபம் போட சிறையில் இருந்தே சில கூலிப்படை, இடம், நேரம் ஆகியவற்றை வகுத்துக் கொடுத்திருக்கிறார் அந்த சீனியர் தாதா.

அதாவது   பெரம்பூரில் தான்   புதிதாக கட்டி வரும் வீட்டை தினமும் மாலை நேரத்தில் வந்து பார்வையிட்டு வந்திருக்கிறார் ஆம்ஸ்ட்ராங்.  அந்த வகையில் ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளான ஜூலை 5 ஆம் தேதி இருட்டியதும்  வழக்கம்போல பார்வையிட வந்த ஆம்ஸ்ட்ராங்கை ஒரு மாதமாக கண்காணித்தவர்கள்  அமாவாசையன்று மாலை மங்கியதும் கத்திகளால் கொத்தித் தீர்த்திருக்கிறார்கள்.

தப்பித்து ஓடிவிடக் கூடாது என்பதற்காக   முதலில் ஒருவன் ஆம்ஸ்ட்ராங்கின் குதிகாலில் வெட்டியிருக்கிறான்.  அடுத்து சரமாரியாக கழுத்திலும் தலையிலும் முகத்தில் வெட்டியிருக்கிறார்கள்.  முகத்துக்கு மேல் கையைத் தூக்கித் தடுக்க முன் கையையும் சிதைத்திருக்கிறார்கள். இப்படி  துல்லியமாக கொலைத் தொழில் செய்யும் கூலிப்படைதான் ஆம்ஸ்ட்ராங்கை சில நிமிடங்களில் சின்னாபின்னமாக்கிவிட்டுச் சென்றிருக்கிறது” என்கிறார்கள்.

கைது செய்யப்பட்டவர்களிடம் ஐ.ஜி. அஸ்ரா கார்கே நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார். இதில் அடுத்தடுத்த விவகாரங்கள் வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

– வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நிலமோசடி வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

ஆம்ஸ்ட்ராங் கொலை… சிபிஐ விசாரிக்க பகுஜன் சமாஜ் கூட்டத்தில் வலியுறுத்தல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share