2026 தேர்தல் கூட்டணி குறித்த கேள்வி… சஸ்பென்ஸ் வைத்த டிடிவி தினகரன்

Published On:

| By Pandeeswari Gurusamy

AMMK TTV Dinakaran press conference

2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு எங்கள் நிலைப்பாட்டை டிசம்பர் வரை பொறுத்து இருந்து பாருங்கள் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தென்காசியில் நெற்கட்டும் சேவல் பகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (செப்டம்பர் 1) செய்தியாளர்களை சந்தித்தார்.

ADVERTISEMENT

அப்போது 2026ம் ஆண்டு அமமுக கூட்டணி குறித்த கேள்விக்கு, ”தேர்தல் பின்னடைவுகளை தாண்டி இந்த இயக்கம் 8 ஆண்டுகளாக வெற்றி நடை போட்டு வருகிறது. 2026 தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் நாங்கள் யார் என்பதை உறுதியாக நிரூபிப்போம். அதுவரை பொறுமையாக இருங்கள். மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் இதைத் தாண்டி நாம் சொல்வதற்கு என்ன உள்ளது. கருத்து கணிப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும் மே மாதம் வாக்களித்த பிறகு தேர்தல் முடிவுகள் தெரிந்த பிறகு மக்கள் யாரை விரும்புகிறார்கள் என்பது தெரியவரும். நாங்கள் அனைத்து பகுதிகளிலும் அந்தந்த தொகுதி நிர்வாகிகளை சந்தித்து தேர்தலுக்கு தயார்படுத்தி வருகிறோம்” என்றார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற கேள்விக்கு, வரும் டிசம்பர் வரை பொறுங்கள். அப்போது எந்தெந்த கட்சிகள் எந்தெந்த கூட்டணியில் போட்டியிடும் என்பதும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எத்தனை தொகுதியில் போட்டியிடப் போகிறது என்பதும் உங்களுக்கு தெரியும்.

ADVERTISEMENT

2026 சட்டமன்ற பொது தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தொண்டர்களும் நிர்வாகிகளும் விரும்புகிறதை அதன் பொதுச்செயலாளராக செய்யக்கூடிய இடத்தில் நான் இருக்கிறேன். தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக எங்களது கூட்டணி அமையும். எங்கெல்லாம் எங்கள் தகுதியான வேட்பாளர்கள் இருக்கிறார்களோ அந்த தொகுதிகளை பெற்று தேர்தலில் உறுதியாக வெற்றி பெறுவோம்.

’2024 மக்களவை தேர்தலில் மோடி வருவதுதான் நாட்டிற்கு நல்லது. இந்தியாவின் வளர்ச்சிக்கு நல்லது’ என்ற அடிப்படையில் எந்தவித நிபந்தனையுமற்ற ஆதரவை நாங்கள் அளித்தோம். 26 சட்டமன்ற பொதுத் தேர்தல் என்பது வேறு. அதில் எங்கள் நிலைப்பாட்டை டிசம்பர் வரை பொறுத்து இருந்து பாருங்கள் கடந்த ஏழு ஆண்டுகளில் ஆர் கே நகர் தொகுதி தேர்தலுக்குப் பிறகு இந்த இயக்கம் எத்தனையோ பின்னடைவுகளை சந்தித்து இருக்கிறது என்னோடு தொடர்ந்து பயணிக்கும் லட்சக்கணக்கான தொண்டர்கள் நிர்வாகிகள் மன ஓட்டத்தை தெரிந்து அதற்கேற்ப கூட்டணி அமைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

முன்னதாக, அமமுக டிடிவி தினகரன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் தொடர்ந்து இருக்கிறார் என்றும், இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share