டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் கடம்பூர் SVSP மாணிக்கராஜா இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஏற்க மறுத்தவர் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக சில மாதங்களுக்கு முன்னர் தினகரன் அறிவித்தார்.
இந்நிலையில் சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இடம் பெறுவதாக அறிவித்தார். மதுராந்தகத்தில் பிரதமர் மோடியின் இன்றைய கூட்டத்திலும் டிடிவி தினகரன் பங்கேற்க உள்ளார்.
இந்நிலையில் பாஜக கூட்டணியில் மீண்டும் அமமுக இணைந்ததற்கு அக்கட்சியில் எதிர்ப்பு எழுந்தது. பாஜகவுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்த அமமுக துணைப் பொதுச்செயலாளர் மாணிக்கராஜாவை அக்கட்சியில் இருந்து டிடிவி தினகரன் நீக்குவதாக இன்று காலை அறிவித்தார்.
அதே நேரத்தில் சென்னையில் இன்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தமது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். அதேபோல அமமுகவின் 3 மாவட்ட செயலாளர்களும் திமுகவில் இணைந்தனர்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்த நிலையில் அமமுகவில் இருந்து மாணிக்கராஜாவும் திமுகவில் இணைந்துள்ளார்.
திமுகவில் இணைந்த மாணிக்கராஜா அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 8 ஆண்டுகள் கஷ்டப்பட்டு வளர்த்த அமமுகவை பழைய நிலைமைக்கு கொண்டு சென்றுவிட்டார் தினகரன். நண்பர் என்ற முறையிலும் அதிமுக இடம் பெற்றுள்ள கூட்டணியில் சேர வேண்டாம் என கூறினேன். அதிமுக- பாஜக கூட்டணியில் அமமுக இடம் பெற்றதை தொண்டர்கள் ஏற்கவில்லை என்றார்.
