அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.
எம்ஜிஆர் காலத்து அரசியல் தலைவர்களில் ஒருவரான முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன். 1993=ம் ஆண்டு முதல் அதிமுகவில் பயணித்து வந்தார். அதிமுகவின் மாநில வழக்கறிஞர் அணி இணை செயலாளர், மாநில செயலாளர் பதவிகளை வகித்த மனோஜ் பாண்டியன், அதிமுகவின் அமைப்புச் செயலாளர்களில் ஒருவராகவும் இருந்தார்.
2001-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சேரன்மாதேவி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். 2021-ல் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். 2010-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார்.
அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓபிஎஸ் அணியில் இணைந்து செயல்பட்டு வந்தார் மனோஜ் பாண்டியன். சட்டப்பேரவையில் அதிமுக ஓபிஎஸ் அணியின் 4 எம்.எல்.ஏக்களில் ஒருவர் மனோஜ் பாண்டியன்.
ஓபிஎஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் திடீரென முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது, திமுக கூட்டணியில் ஓபிஎஸ் அணி இடம் பெறக் கூடும் என பேசப்பட்டது. அதேபோல, மனோஜ் பாண்டியன், திமுகவில் இணையக் கூடும் என்றும் கூறப்பட்டது.
கடந்த சில மாதங்களாக ஓபிஎஸ் அணியில் ஆக்டிவ்வாக இல்லாமல் இருந்த மனோஜ் பாண்டியன் இன்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து தம்மை திமுகவில் இணைத்துக் கொண்டார். அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மனோஜ் பாண்டியன், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திராவிடக் கொள்கைகளையும், தமிழக உரிமைகளையும் பாதுகாக்கும் தலைவராகச் செயல்படுகிறார். அவரது தலைமை என்னை ஈர்த்ததால், நான் திமுகவில் இணைந்தேன். அதிமுக் என்பது தற்போது பாஜகவின் கிளைக் கழகமாகிவிட்ட.து. தன்னையும் தனது குடும்பத்தையும் காப்பாற்றவே பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி அமைத்துள்ளார்” என்று தெரிவித்தார். மேலும், தான் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
