அதிமுக பொதுக்குழு செல்லாது: நீதிபதி ஜெயச்சந்திரன் அதிரடி தீர்ப்பு!

Published On:

| By Kalai

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக பொதுக்குழு வழக்கில், ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஜூலை 11 -ல் நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு மற்றும் தமிழ் மகன் உசேன் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருந்தனர், இந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஓ.பன்னீர்செல்வத்தையும் கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT

சட்ட விரோதமாக பொதுக்குழு நடந்ததாகவும் இதனை செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். முதலில் வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். அவர் இந்த வழக்கை விசாரிக்க பன்னீர் தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆகிய 2 தினங்கள் விசாரணை நடந்தது.

இதில் எடப்பாடி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் விஜய நாராயணனும், பன்னீர் தரப்பில் குரு கிருஷ்ணகுமாரும் ஆஜராகி வாதாடினர். சட்ட விதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு கூட்டப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் கூறப்பட்டது. இதனை ஏற்க மறுத்து பன்னீர் தரப்பு வழக்கறிஞர் தங்கள் தரப்பு நியாயங்களை நீதிபதி முன் வைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தார். இந்தநிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (ஆகஸ்ட் 17 )வெளியாகும் என்று நேற்று மாலை தகவல் வெளியானது.

ADVERTISEMENT

பன்னீர் மற்றும் பழனிசாமியின் அரசியல் பயணத்தை நிர்ணயிக்கும் மிக முக்கியமான தீர்ப்பு இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உண்டானது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர்கள் முன்னதாகவே நீதிமன்றத்துக்கு வந்து காத்திருந்தனர். சுமார் 10.30 மணிக்கு மேல் நீதிபதி ஜெயச்சந்திரன் நீதிமன்றத்துக்கு வந்தார். ஆனால் தீர்ப்பு 11.30 மணிக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி 11.30 மணிக்கு மேல் நீதிபதி தனது தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார். இந்நிலையில் ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார். ஜூன் 23க்கு முன் இருந்த நிலையே நீடிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் சேர்ந்துதான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும்” என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். தனிக்கூட்டம் கூட்ட கூடாது, இதற்கென தனி ஆணையரை நியமிக்கவேண்டும் என்றும் நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இதனால் ஓபிஎஸ் தரப்பினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Photo of author
Kalai
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share