அதிமுகவில் இருந்து முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு தாவிய 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாக்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்டது செல்லுமா என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று (அக்டோபர் 9) தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த ராஜினாமாக்கள் செல்லாது எனத் தீர்ப்பு வந்தால், ஏற்கெனவே வாக்குப்பதிவு நடைபெற்ற தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்களின் நிலை என்னவாகும்? ஒரே தொகுதிக்கு 2 பேர் எம்.எல்.ஏ. பதவிக்கு உரிமை கோரும் சிக்கல் உருவாகுமா? என்பது உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன.
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
திமுக 59 தொகுதிகளிலும், அதிமுக 47 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் 5 தொகுதிகளிலும், பாமக 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தலா 2 தொகுதிகளிலும், பாஜக, தேமுதிக, அமமுக ஆகியவை தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.
234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்பட்டது. ஆனால் தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
விஜய் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சட்டசபையில் தவெகவின் பலம் 107 ஆகக் குறைந்தது.
இந்த நிலையில், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெற பிற கட்சிகளின் ஆதரவை விஜய் நாடினார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 2 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 13 பேரின் ஆதரவு விஜய்க்குக் கிடைத்தது.
இதன் மூலம் தவெகவின் 107 எம்.எல்.ஏ.க்களுடன் பிற கட்சிகளின் 13 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் சேர்ந்து மொத்தம் 120 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைந்தது.
மே 13: நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவின் 25 பேர்
மே 13-ம் தேதி தமிழக சட்டசபையில் விஜய் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டது.
இந்த வாக்கெடுப்பில் விஜய் அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகள் கிடைத்தன. இதன் மூலம் தனது அரசுக்குப் பெரும்பான்மை ஆதரவு இருப்பதை விஜய் நிரூபித்தார்.
ஆனால் இந்த வாக்கெடுப்பின்போதுதான் அதிமுகவில் மிகப்பெரிய அரசியல் பிளவு வெளிப்பட்டது.
விஜய் அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி, அக்கட்சியைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
மே 14: சபாநாயகரிடம் அதிமுக மனு
கட்சிக் கொறடா உத்தரவை மீறிய 25 எம்.எல்.ஏ.க்கள் மீதும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி மே 14-ம் தேதி அதிமுக தரப்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்பின் 10-வது அட்டவணையின்படி, கட்சி கொறடா உத்தரவை மீறி வாக்களித்த எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க முடியும்.
ஆனால் வாக்கெடுப்புக்குப் பிறகு 15 நாட்களுக்குள் அந்தச் செயல்பாட்டை சம்பந்தப்பட்ட கட்சித் தலைமை மன்னித்திருந்தால் தகுதி நீக்கத்தைத் தவிர்க்க முடியும்.
மே 13-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், இந்த 15 நாள் காலக்கெடு மே 28-ம் தேதியுடன் முடிவடைந்தது.
மே 25, 26: தவெகவில் இணைந்த 4 பேர்
இந்த 15 நாள் காலக்கெடு முடிவடைவதற்கு முன்பாகவே அதிமுகவைச் சேர்ந்த மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் ஆகிய 3 எம்.எல்.ஏ.க்கள் மே 25-ம் தேதி தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இவர்களது ராஜினாமாக்களை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார். அதே நாளில் 3 பேரும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இதையடுத்து மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை ஆகிய 3 சட்டசபை தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டன.
மறுநாள் மே 26-ம் தேதி அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்த இசக்கி சுப்பையாவும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். அவரது ராஜினாமாவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
மே 28: காலக்கெடு முடிவு… 4 பேருக்கு மன்னிப்பு இல்லை
இதனிடையே, விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்.எல்.ஏ.க்களில் 21 பேரின் செயல்பாட்டை மன்னிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகரிடம் கடிதம் அளிக்கப்பட்டது.
இதனால் அந்த 21 பேர் மீதான கட்சித் தாவல் தடைச் சட்ட நடவடிக்கையைத் தொடர வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகிய 4 பேருக்கும் இந்த மன்னிப்பு வழங்கப்படவில்லை.
இதனால் இந்த 4 பேர் மீதான கட்சித் தாவல் தடைச் சட்ட நடவடிக்கைக்கான மனு சபாநாயகரிடம் நிலுவையில் உள்ளது.
ஜூன் 15: உயர் நீதிமன்றத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கு
அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்ற மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகிய 4 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாக்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை எதிர்த்து, அதிமுக கொறடா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஜூன் 15-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக கொறடா உத்தரவை மீறிய எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு நிலுவையில் இருந்தபோது, 4 பேரின் ராஜினாமாக்களை சபாநாயகர் அவசர அவசரமாக ஏற்றுக்கொண்டதாகக் குற்றஞ்சாட்டினார்.
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்படுவதைத் தவிர்க்கும் நோக்கத்தில்தான் இந்த ராஜினாமாக்கள் அளிக்கப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள தகுதி நீக்க நடவடிக்கைகளைப் புறக்கணித்துவிட்டு ராஜினாமாக்களை ஏற்றது, அரசியலமைப்பின் 10-வது அட்டவணையின் நோக்கத்தையே செயலிழக்கச் செய்வதாகும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அரசியலமைப்பின் 190(3)(b) பிரிவின்படி, எம்.எல்.ஏ.க்கள் அளிக்கும் ராஜினாமா உண்மையானதா, அவர்களது சொந்த விருப்பத்தின் பேரில் அளிக்கப்பட்டதா என்பதை சபாநாயகர் முறையாக விசாரிக்க வேண்டும்.
ஆனால் 4 பேரின் ராஜினாமாக்களை ஏற்றுக்கொள்வதில் சபாநாயகர் காட்டிய அவசரம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சட்டசபை விதிகளின்படி மேற்கொள்ள வேண்டிய விசாரணை நடைமுறைகளும் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
4 பேரும் ராஜினாமா செய்த உடனேயே ஆளும் தவெகவில் இணைந்திருப்பது, இந்த ராஜினாமாக்களின் பின்னணியில் அரசியல் பேரம் நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
எனவே, 4 பேரின் ராஜினாமாக்களை ஏற்ற சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கவோ, நடத்தவோ தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
ஜூன் 16: சி.விஜயபாஸ்கர் ராஜினாமா
அக்ரி கிருஷ்ணமூர்த்தி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த மறுநாளான ஜூன் 16-ம் தேதி, அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வுமான சி.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவரது ராஜினாமாவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
ஜூன் 17: முதல் வழக்கில் நோட்டீஸ்
4 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாக்களை எதிர்த்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவை ஜூன் 17-ம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
ஜூன் 29: எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா
இதனைத் தொடர்ந்து ஜூன் 29-ம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சரும் கரூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவரது ராஜினாமாவையும் சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து கரூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
ஜூலை 2: தவெகவில் இணைந்த 2 விஜயபாஸ்கர்கள்
ஜூலை 2-ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய 2 பேரும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இதன் மூலம் அதிமுகவில் இருந்து தவெகவுக்குச் சென்ற எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்தது.
2 விஜயபாஸ்கர்களின் ராஜினாமாவுக்கும் எதிராக தனி வழக்கு
இந்த நிலையில், 2 விஜயபாஸ்கர்களின் ராஜினாமாக்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை எதிர்த்தும் அதிமுக கொறடா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தனியாக மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், 2 பேரது ராஜினாமாக்களையும் சபாநாயகர் முறையாகப் பரிசீலிக்காமல் ஏற்றுக்கொண்டதாகவும், இது அரசியலமைப்புச் சட்டத்தின் 190(3)(b) பிரிவுக்கு முரணானது என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
மேலும், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற சில மாதங்களிலேயே தனிப்பட்ட மற்றும் அரசியல் ஆதாயங்களுக்காக 2 பேரும் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் மீண்டும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டு, அரசுக்குத் தேவையற்ற செலவு உருவாகிறது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
எனவே, 2 பேரது ராஜினாமாக்களை ஏற்ற சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், விராலிமலை, கரூர் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
ஜூலை 16: 2-வது வழக்கில் நோட்டீஸ்
2 விஜயபாஸ்கர்களின் ராஜினாமாக்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஜூலை 16-ம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 2 விஜயபாஸ்கர்களுக்கும் சட்டசபைச் செயலாளருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
அக்டோபர் 9: உயர் நீதிமன்றத் தீர்ப்பு
இவ்வழக்குகளில் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (அக்டோபர் 9) தீர்ப்பு வழங்க உள்ளது.
உயர் நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கலாம்?
இந்த வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 6 பேரும் தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் ராஜினாமா செய்திருப்பதும், சபாநாயகர் உரிய நடைமுறைகளைப் பின்பற்றியிருப்பதும் உறுதியானால், ராஜினாமாக்களை ஏற்றது செல்லும் எனத் தீர்ப்பளித்து அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்யலாம்.
- மாறாக, 6 பேரின் ராஜினாமாக்களை ஏற்பதில் அரசியலமைப்புச் சட்ட நடைமுறைகள் மீறப்பட்டிருப்பதாக நீதிமன்றம் கண்டறிந்தால், சபாநாயகரின் உத்தரவுகளை ரத்து செய்யலாம்.
- ராஜினாமாக்களை ஏற்ற சபாநாயகரின் உத்தரவுகளை ரத்து செய்துவிட்டு, 6 பேரின் ராஜினாமாக்களையும் சட்டப்படி மீண்டும் பரிசீலிக்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிடலாம்.
- நிலுவையில் உள்ள கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய மனுக்கள் மீது சட்டப்படி முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிடலாம்.
6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லாது என தீர்ப்பளித்தால்…
6 பேரின் ராஜினாமாக்களை ஏற்ற சபாநாயகரின் உத்தரவுகளை உயர் நீதிமன்றம் ரத்து செய்தால், அடுத்தடுத்து பல்வேறு சட்டச் சிக்கல்கள் எழக்கூடும்.
- 6 பேரும் மீண்டும் அதிமுக எம்.எல்.ஏ.க்களாகத் தொடரும் நிலை உருவாகுமா?
- 6 பேரும் சபாநாயகர் மீண்டும் முடிவெடுக்கும் வரை காத்திருக்க வேண்டுமா?
- ஏற்கெனவே தவெகவில் இணைந்துள்ள 6 பேரையும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய முடியுமா?
- மே 13-ம் தேதி விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக 4 பேர் மீது தொடரப்பட்ட தகுதி நீக்க நடவடிக்கைகளின் நிலை என்னவாகும்?
- அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்களின் சட்ட நிலை என்னவாகும்?
- தாராபுரத்தில் சத்யபாமாவும், மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால், அவர்களது வெற்றி செல்லுமா?
- மாறாக, தாராபுரம், மதுராந்தகத்தில் வேறு கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் என்ன நடக்கும்?
- ஒரே தொகுதிக்கு 2 பேர் எம்.எல்.ஏ. பதவிக்கு உரிமை கோரும் சட்டச் சிக்கல் உருவாகுமா?
- ராஜினாமாக்களை ஏற்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டால், ஏற்கெனவே நடைபெற்ற இடைத்தேர்தல்களையும் ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படுமா? மீண்டும் இடைத்தேர்தல் நடத்த வேண்டியிருக்குமா?
- உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து 6 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால், தீர்ப்புக்கு இடைக்காலத் தடை கிடைக்குமா?
இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று வழங்கும் தீர்ப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
