தங்க மோகம் செய்திருக்கும் தரமான சம்பவம்!
விதார்த் நடிக்கும் படங்கள் என்றாலே, அதன் உள்ளடக்கத்தில் ஏதேனும் சிறப்பு இருக்கும் என்றெண்ணுவது இயல்பாகிவிட்டது. மிகக்குறைந்த பட்ஜெட்டில் தயாராகியிருந்தாலும், அவரது முந்தைய படங்கள் பல அதனை மெய்ப்பித்திருக்கின்றன. அந்த வகையில், ‘ஆயிரம் பொற்காசுகள்’ படம் குறித்த செய்திகளும் நம் கவனத்தை ஈர்த்தன. ’முதல் காட்சிக்கு ஒரு டிக்கெட் வாங்கினால் இன்னொரு டிக்கெட் இலவசம்’ என்ற அறிவிப்பு அதனைப் பன்மடங்காக்கியது.
பான் இந்தியா படமான ‘சலார்’, ‘டன்கி’ படங்களுக்கு இடையே, தற்போது ’ஆயிரம் பொற்காசுகள்’ தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

படம் எப்படியிருக்கிறது?
சோழர் கால நாணயங்கள்!
தஞ்சாவூர் அருகேயுள்ள குருவாடிப்பட்டியைச் சேர்ந்தவர் ஆணிமுத்து (சரவணன்). அவரது தங்கை, வம்பில் சிக்கிய தனது மகனைக் (விதார்த்) காப்பாற்றுவதற்காக அங்கு அழைத்து வருகிறார். அவரோ, மாமனை மிரட்டும் மருமகனாக இருக்கிறார்.
எந்த வேலைக்கும் செல்லாமல் திருடித் தின்னும் பழக்கமுடைய ஆணிமுத்து, எதிர்வீட்டு கோவிந்தன் (ஹலோ கந்தசாமி) கட்டிய கழிப்பறையைப் புகைப்படம் எடுத்து தனதுடையது என்று சொல்லி பஞ்சாயத்தில் பன்னிரண்டாயிரம் ரூபாய் பெறுகிறார். உண்மை தெரிந்த கோவிந்தன், பஞ்சாயத்து தலைவரை ‘பஞ்சாயத்து’ செய்ய அழைத்து வருகிறார்.
அப்போது, இன்னும் ஐந்து நாட்களில் கழிப்பறை கட்டுவதாக வாக்குறுதி தருகிறார் ஆணிமுத்து. அதற்காக, மாமனும் மருமகனும் வீட்டின் பின்னால் குழி தோண்டுகின்றனர். ஒரு கட்டத்தில், இதற்கு மேல் முடியாது என்று குழி வெட்ட அரிச்சந்திரன், ஆண்டவன் (ஜார்ஜ் மரியான், பவன் ராஜ்) என இரண்டு ஆட்களை அழைத்து வருகின்றனர்.
அரிச்சந்திரன் தனியாகக் குழியை வெட்டிக் கொண்டிருக்கும்போது, ஒரு பானை உடைபடும் சத்தம் கேட்கிறது. அதனுள் பொற்காசுகள் இருக்கின்றன. அதனை எடுத்து மறைக்கலாம் என்று நினைக்கும்போது ஆணிமுத்துவும் அவரது மருமகனும் வந்துவிடுகின்றனர்.
அதற்கடுத்த நாள் காலையில் அந்த காசுகளை மூன்றாகப் பங்கு பிரிப்பதென மூவரும் முடிவு செய்கின்றனர். ஆனால், மயானத்தில் குழி வெட்ட வேண்டுமென்று அரிச்சந்திரனை அழைக்கிறார் ஆண்டவன். வேறு வழியில்லாமல் அவர் தன்னுடன் ஆணிமுத்துவையும் அவரது மருமகனையும் அழைத்துச் செல்கிறார்.
மயானத்தில் இறந்தவர் குடும்பத்துடன் ஆணிமுத்து தகராறில் ஈடுபட, அங்கு பெரிய கலாட்டாவே நிகழ்கிறது. அதையடுத்து, அன்றிரவு பொற்காசுகளைப் பிரிப்பதென முடிவாகிறது.
ஆனால், இரவில் தான் காதலிக்கும் பூங்கோதையின் (அருந்ததி) கடைக்குள் அடைபடுகிறார் ஆணிமுத்துவின் மருமகன். அங்கிருந்து வெளியேறி அவர் வீடு வந்து சேர்வதற்குள், ஆணிமுத்துவுக்கும் அரிச்சந்திரனுக்கும் கைகலப்பாகிறது. அதையடுத்து, அரிச்சந்திரனை ஆணிமுத்து தாக்குகிறார்.
சிறிது நேரம் கழித்து, ஆணிமுத்துவின் மருமகன் வீடு வந்து சேர்கிறார். பேச்சு மூச்சின்றி கிடக்கும் அரிச்சந்திரனைப் பார்க்கிறார். இறந்துவிட்டதாகக் கருதி, அவரைத் தூக்கிச் சென்று ரயில்வே தண்டவாளத்தில் போட்டுவிட்டு வருகிறார்.
வீடு வந்து சேர்ந்தால், ‘இங்க மயங்கிக் கிடந்த அரிச்சந்திரனை எங்க’ என்று கேட்கிறார் ஆணிமுத்து. ‘அவர் சாகலையா’ என்று மருமகன் கேட்கிறார்; அதனைத் தொடர்ந்து, இருவரும் பதறியடித்துக்கொண்டு ரயில்வே தண்டவாளம் நோக்கி ஓடுகின்றனர்.
அதன்பிறகு என்ன நடந்தது? அரிச்சந்திரன் உயிர் பிழைத்தாரா? அந்த பொற்காசுகளை அவர்கள் பங்கு பிரித்தார்களா அல்லது அது பற்றிய உண்மை ஊராருக்குத் தெரிய வந்ததா என்று சொல்கிறது ‘ஆயிரம் பொற்காசுகள்’ படத்தின் இரண்டாம் பாதி.
திரைக்கதையின் ஓரிடத்தில், அந்த பொற்காசுகள் ராஜராஜசோழன் காலத்தைச் சேர்ந்தது என்று தகவல் சொல்லப்படுகிறது. அதையடுத்து, தொல்லியல் துறையினர் அவ்வூருக்கு வருவதாகவும் ஒரு காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அப்போது நிகழும் கலாட்டா, கிட்டத்தட்ட பத்து நிமிடங்களுக்கு நீடிக்கிறது. அக்காட்சிகளுக்காகக் கொட்டப்பட்ட உழைப்புக்காகவே ‘ஆயிரம் பொற்காசுகள்’ படத்தை ’வாவ்’ சொல்லிக் கொண்டாடலாம்!

அசத்தல் நடிப்பு!
’இறுகப்பற்று’ படத்தில் அசத்திய விதார்த், இதிலும் நல்லதொரு பெர்பார்மன்ஸை தந்திருக்கிறார். தன்னுடன் நடிக்கும் பல பாத்திரங்களுக்குத் திரைக்கதையில் முக்கியத்துவம் உண்டு என்று தெரிந்தபிறகும் இதில் நடித்திருப்பது அவரது தன்னம்பிக்கையைக் காட்டுகிறது. அந்த இடத்தில் விதார்த், தான் ஒரு ‘நிஜ நாயகன்’ என்று நிரூபிக்கிறார்.
சரவணனுக்கு இது ‘ரீ-எண்ட்ரி’ படம் என்று சொல்லலாம். ‘நந்தா’, ‘பருத்திவீரன்’ தொட்டுப் பல படங்களில் கிடைத்த வரவேற்பைத் தவறவிட்டவருக்கு, இப்படம் வேறொரு பாதையைக் காட்டியிருக்கிறது. மனிதர் நகைச்சுவையோடு சேர்ந்து குணசித்திர நடிப்பிலும் அசத்தியிருக்கிறார்.
பல்வேறு படங்களில் நல்லதொரு நடிப்பை வழங்கினாலும், பெரிதாக ‘ஹிட்’ அடிக்காமல் தவித்து வருகிறார் அருந்ததி. அவருக்கும் இப்படம் அளவாக வாய்ப்பை வழங்கியிருக்கிறது.
அருந்ததியின் சகோதரியாக வரும் செம்மலருக்கு இதில் நகைச்சுவை வேடம். அவர் இத்தனை கேலி கிண்டலை வெளிப்படுத்திய படம் இதுவாகத்தான் இருக்கும். ’கோவை சரளா’வுக்காக எழுதப்பட்ட பாத்திரங்களை ஏற்க இன்னொருவர் ரெடி!
இவர்கள் தவிர்த்து சரவணனின் எதிர்வீட்டுக்காரராக வரும் ஹலோ கந்தசாமி, குழி தோண்டுபவர்களாக வரும் ஜார்ஜ் மரியான் மற்றும் பவன் ராஜ், இன்ஸ்பெக்டராக வரும் பாரதி கண்ணன், பஞ்சாயத்து தலைவராக வருபவர், வடநாட்டைச் சேர்ந்த பிச்சைக்காராக நடித்தவர், அருந்ததியின் தாயாக நடித்தவர் என்று கிட்டத்தட்ட ஒரு டஜன் பேருக்கு இத்திரைக்கதையில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அத்தனை பேருமே அசத்தல் நடிப்பைத் தந்துள்ளனர்.
பானுமுருகனின் ஒளிப்பதிவானது ஒரு சீரியசான படத்திற்குரிய தோற்றத்தைத் திரையில் உருவாக்கியுள்ளது. ஆனால், அப்படியொரு பின்னணியிலமைந்த அத்தனை காட்சிகளும் நம்மைச் சிரிக்க வைப்பதுதான் இப்படத்தின் சிறப்பு.
ஒளிப்பதிவில் ஒவ்வொரு பிரேமும் ‘ரிச்’ ஆக தெரிய, பி.சண்முகத்தின் கலை வடிவமைப்பு உதவியிருக்கிறது. இந்த இடத்தில், ‘ரிச்’ என்றால் ‘செறிவான உள்ளடக்கம்’ என்று பொருள் கொள்ள வேண்டும்.
ஜோஹனின் இசையில் பாடல்கள் வேறுமாதிரியான தாக்கத்தை உருவாக்குகின்றன. ஆனால், வரிகள் மனதில் பதியாத அளவுக்கு இருப்பதுதான் வருத்தம். அதேநேரத்தில், பின்னணி இசையானது காட்சிகளில் நிறைந்துள்ள பரபரப்பை நமக்கு அப்படியே கடத்த உதவியிருக்கிறது.
ராம் – சதீஷின் படத்தொகுப்பு முதலில் சாதாரணமாகத் தெரிந்தாலும், கிளைமேக்ஸ் போர்ஷனில் நம்மை பிரமிக்க வைத்திருக்கிறது.
தொடக்கக் காட்சியில், விதார்த் உடன் சிலர் சண்டையிட்டதன் காரணமாகவே அவர் தாய்மாமனைத் தேடி வந்திருக்கிறார் என்பது தெளிவாகக் காட்டப்படவில்லை. அது தேவையற்ற இடைச்செருகலாக உள்ளது. அதனை வசனங்களிலேயே கூட உணர்த்தியிருக்கலாம்.
இயக்குனர் ரவி முருகையா இப்படத்தில் நமக்குப் புதியதொரு களத்தைக் காட்டியிருக்கிறார் என்று சொல்ல முடியாது. ‘இதுதான் அசல் கிராமம்’ என்றும் மார்தட்டிக் கொள்ள முடியாது.
அதேநேரத்தில், இப்படியொரு களத்தில் எப்படி இப்படியொரு நகைச்சுவையைக் கலந்திருக்கிறார் என்று ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார். இந்த வித்தை தெரியாமல்தான் பலர் தத்தளிக்கின்றனர்.

பார்ட் 2 வருமா?
அரசின் நிதியுதவியோடு கழிப்பறை கட்டிக் கொள்வது, புதையல் கிடைத்தால் தொல்லியல் துறைக்குத் தகவல் தெரிவிப்பது என்று அரசு சம்பந்தப்பட்ட சில அம்சங்கள் ‘ஆயிரம் பொற்காசுகள்’ திரைக்கதையில் உண்டு. அதோடு, மிக எளிமையான வசனங்கள் வழியே தஞ்சை வட்டார வாழ்வியலும் நமக்கு உணர்த்தப்படுகிறது.
அவற்றினூடே தான் படைத்த கதாபாத்திரங்களுக்கு சரியானதொரு வடிவம் கொடுத்த வகையில் நம்மை அசர வைக்கிறார் ரவி முருகையா.
உதாரணமாக, இன்ஸ்பெக்டராக வரும் பாரதிகண்ணனை அறிமுகப்படுத்துகையில், பஜ்ஜியை கத்திரிக்கோலால் வெட்டி அதனுள் சட்டினியை ஊற்றிச் சாப்பிடுவதாகக் காட்டியிருப்பார். பின்பாதியில் அவரிடத்தில் புதையல் பானை வரும்போதும், அவர் கையில் அதே கத்திரி இருக்கும்.
‘பூரா பயலுகளையும் போலீசில பிடிச்சுக்கொடுக்காம விடமாட்டேன்’ என்பதையே திரும்பத் திரும்பச் சொல்வார் கந்தசாமி.
நாயகியின் தாயாரை சரவணன் மற்றும் கந்தசாமி பாத்திரங்கள் பதின்ம வயதில் காதலித்ததாக ஒரு வசனம் படத்தில் உண்டு. அந்த விஷயம் கூடப் படத்தின் திரைக்கதையோட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, அருந்ததியும் விதார்த்தும் பழகுகின்றனர் என்று தெரிந்ததும் அவரது தாய் கண்டிக்கிற காட்சியில் சில விஷயங்கள் மறைமுகமாகச் சொல்லப்பட்டிருக்கும்.
காதலனுடன் ஓடிப்போவதாக முடிவு பண்ணியதும், அருந்ததி தாய்க்குக் கடிதம் எழுதுவார்; திரைக்கதையில் அது இரண்டாவது முறை இடம்பெறும்போது நம்மையும் அறியாமல் சிரிப்பு தொற்றும்.

இது போன்ற விஷயங்களே ‘ஆயிரம் பொற்காசுகள்’ படத்தின் சிறப்பு. முக்கியமாக, குழந்தைகளை அழைத்துச் சென்று பார்க்க முடியாத அளவுக்கு இதில் ஆபாசமோ, வன்முறையோ கொட்டப்படவில்லை. அதையும் மீறிப் படத்தில் நிறைந்திருக்கும் இயல்பான நகைச்சுவை நம்மை வயிறு புண்ணாகும் அளவுக்குச் சிரிக்க வைக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், தங்க மோகம் செய்திருக்கும் தரமான சம்பவம் இது.
படம் பார்த்தபிறகு ட்ரெய்லரை மீண்டுமொரு முறை பார்த்தேன். அதில், ‘ஆயிரம் பொற்காசுகள்’ டைட்டில் அருகே பார்ட் 1 என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. அப்படியானால், இப்படத்தின் பார்ட் 2 வரப்போகிறதா? அந்த கேள்வி உற்சாகத்தைத் தருகிற அளவுக்கு இப்படம் அமைந்திருக்கிறது.
‘ஆயிரம் பொற்காசுகள்’ வழியே ஆண்டிறுதியில் சிரிக்க வைத்து வீட்டுக்கு அனுப்ப முயன்றுள்ள ரவி முருகையா அண்ட் டீமுக்கு ‘வரவேற்பு மிகுதியான புத்தாண்டு’ அமைய வாழ்த்துகள்!
உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விவசாயத் தொழிலாளருக்கு விடிவுகாலம் வருமா?
மீண்டும் கொரோனா: தடுப்பூசி தேவையா? மத்திய அரசு விளக்கம்!
